அனைத்து நாடுகளிலும் தனிநபர் வருமானத்தில் வேறுபாடு உலக பொருளாதார அமைப்பு அறிக்கையில் தகவல்

Deal Score0

 

 • டாவோஸ்: இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும், வருமானத்தில் ஏற்றமும், தாழ்வும், வேறுபாடு வீதமும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 62 தனிநபர்களின் வசம் உள்ள சொத்துகள், உலக மக்கள்தொகையில், 50 சதவீதம் பேரிடம் உள்ள சொத்துக்கு சமமாக உள்ளது என்பது போன்ற பல விவரங்களை, உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் அறிக்கையாக வெளியாகியுள்ளது.
 • சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர மாநாடு, இன்று துவங்கி, 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர்.இதை முன்னிட்டு, ‘ஆக்ஸ்பேம்’ என்ற பிரபல, மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட, பிரபலமான நிறுவனங்கள், பல தலைப்பு களில் அறிக்கை வெளியிட்டுள்ளன. அவற்றில், உலக அளவில், வருமானத்தில் ஏற்றத் தாழ்வு அதிகரித்து வருகிறது.
 • ஆளும் அரசுகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான நம்பிக்கை குறைந்து வருவது உட்பட பல முக்கிய அம்சங்கள் தெரிய வந்துள்ளன. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் தான், உலக நாடுகளின் தலைவர்கள், இந்த ஐந்து நாள் மாநாட்டில் விவாதிக்க உள்ளனர்.

அறிந்தவர்அறியாதவர் நம்பிக்கை வித்தியாசம்

 • அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல, ‘எடெல்மேன் டிரஸ்ட் பாரோமீட்டர்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:விவரம் அறிந்தவர்களுக்கும், அறியாத பொதுமக்களுக்கும் இடையேயான, நம்பிக்கை வித்தியாசம் மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.
 • இந்த வகையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது
 • மொத்த மக்களின் எதிர்கால நம்பிக்கையும் குறைந்து வருகிறது. ஆய்வு செய்யப்பட்ட நாடுகளில், மூன்றில், இரண்டு பங்கு நாடுகளின், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர், ‘இன்னும் ஐந்தாண்டுகளில் பெரிய அளவில், தங்கள் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் இருக்காது’ என, கருதுகின்றனர்
 • அரசு, வர்த்தகம், ஊடகம், தொண்டு நிறுவனம் ஆகிய நான்கு அம்சங்களில் உலக அளவில், வர்த்தகத்திற்கு தான் அதிக வரவேற்பு உள்ளது
 • தொடர்ந்து, ஐந்தாவது ஆண்டாக, தேடல் இணையதளங்களும், பாரம்பரிய ஊடகங்களும் தான், செய்தி மற்றும் புதிய தகவல்களுக்கான நம்பிக்கைக்குரிய ஊடகங்களாக உள்ளன.
 • இது போன்ற பல தகவல்களை, இந்த நிறுவனங்கள்வெளியிட்டுள்ளன.
 • பங்கேற்போர்: டாவோஸ் மாநாட்டிற்கு, இந்தியா சார்பில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், தொழிலதிபர்கள், முகேஷ் அம்பானி, சைரஸ் மிஸ்ட்ரி, ஆனந்த் மகிந்திரா உள்ளிட்டோர் செல்கின்றனர்.
 • வளர்ச்சி, புதியன கண்டுபிடிப்பு போன்றவற்றில், உலகின் பொருளாதார வளமாக இந்தியா எவ்வாறு செயல்படும் என்பதை இந்த குழுவினர், உலக நாடுகளுக்கு விளக்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாயுடு பயணம்

 • ஆந்திராவில் தொழில்கள் துவங்க, வெளிநாட்டு தொழிலதிபர்களை அழைக்கவும், ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, சந்திரபாபு நாயுடு, உயரதிகாரிகளுடன், டாவோஸ் பயணம் மேற்கொள்கிறார்.

டாவோஸ்ஒரு பார்வை

 • அமைவிடம்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தின், ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்து உள்ள குளுகுளு நகரம்

மக்கள்தொகை: 11 ஆயிரம்

 • மாநாட்டுக்காக வருபவர்கள்: 20 ஆயிரம் பேர்நிறுவனங்களின்
 • தலைவர்கள்: 1,000
 • உலக நாடுகளின் தலைவர்கள்: 40க்கும் மேற்பட்டோர்
 • பெண்கள்: 18 சதவீதம்

வருமான வேறுபாடு உயர்வு: ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன:

 • கடந்த, 2010ல், உலக மக்கள்தொகையில், 50 சதவீதம் பேரின் சொத்து மதிப்பும், 388 பேரின் சொத்து மதிப்பும் ஒன்றாக இருந்தது. அது, ஆண்டுக்கு ஆண்டு படிப்படியாக குறைந்து, கடந்த, 2015ல், 62 பேரின் சொத்து மதிப்பும், உலகமக்கள்தொகையின், 50 சதவீதம் பேரின் சொத்து மதிப்பும் சமமாகியுள்ளது; இது, வருமானத்தில் உள்ள ஏற்ற, தாழ்வின் வேற்றுமையை வெளிப்படுத்துகிறது
 • உலகின் கோடீஸ்வரர்களாக உள்ள, 62 பேரில், ஒன்பது பேர் தான் பெண்கள் என்பது, வருமானத்தில் ஆண் – பெண் வேறுபாட்டை காட்டுகிறது
 • சம்பள வேறுபாட்டை கணக்கிட்டால், இந்தியாவின் முன்னணி, தகவல், தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் சம்பளம், அந்த நிறுவனத்தின் சாதாரண ஊழியரின் சம்பளத்தை விட, 416 மடங்கு அதிகமாக உள்ளது
 • இந்தியாவின் சிகரெட் உற்பத்தி நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரியின் சம்பளம், அந்த நிறுவனத்தின் சாதாரண ஊழியரின் சம்பளத்தை விட, 439 மடங்கு அதிகமாக உள்ளது
 • இந்திய கோடீஸ்வரர்களில், 46 சதவீதம் பேர், தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, உரிமங்கள் பெற்று, தொழில் நடத்தி, பணத்தை குவிக்கின்றனர்
 • இந்தியாவில், கடந்த, 2013ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், தங்கள் சம்பளத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமானது. அதற்குப் பிறகே, சம்பள வேறுபாடுகள் அம்பலமாகின.

வேலை இழப்பு அபாயம்

 • உலக பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஐந்தாண்டுகளில், உலகம் முழுவதும், புதிதாக கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதற்குப் பதில், ’50 லட்சம் பேர் வேலையை இழப்பர்’ என தெரிவித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 • நான்காம் தொழில் புரட்சி நடைபெறுவதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியா, மெக்சிகோ, துருக்கி மற்றும் வளைகுடா நாடுகளில் பெரும்பாலான நாடுகளில், வேலை இழப்பு பாதிப்பு அதிகம் இருக்காது என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார அமைப்பு

 • லாப நோக்கற்ற சர்வதேச அமைப்பு
 • தோற்றுவித்தவர்: கிளாஸ் ஸ்வாப், ஜெனிவா பல்கலைக்கழக பேராசிரியர்
 • தலைமையகம்: கோலோனி, சுவிட்சர்லாந்து
 • துவக்கம்: 1971
 • நோக்கம்: உலக நாடுகளுக்கு இடையே, வர்த்தகம், அரசியல், கல்வி மற்றும் பிற ஒத்துழைப்பிற்காக பாடுபடுதல்