பெண்களைக் காப்போம்!

Image result for Women-Save

 

பெண்களைக் காப்போம்!

  • சமூகம், கல்வி, பணி, கலை என்று பல்வேறு தளங்களில் இந்தியப் பெண்கள் நிகழ்த்திவரும் சாதனைகளைப் பற்றிய செய்திகளுக்கு மத்தியில், கவலையில் ஆழ்த்தும் தகவல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. இந்தியக் குடும்பங்களில் பெண் குழந்தை களைவிடவும் ஆண் குழந்தைகளுக்கே முக்கியத்துவம் தரப்படுவது பலரும் அறிந்த விஷயம்தான். பெரும்பாலான குடும்பங்கள் ஆண் குழந்தைகளைத்தான் விரும்புகின்றன என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான புதிய தரவுகள் வழியே அவை மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

 

 

  • ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொண்ட பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 2 கோடியே 20 லட்சம் பேர் பெண் குழந்தையைப் பெற்றுள்ளனர். அதே சமயம் 2 கோடியே 85 லட்சம் பேர் ஆண் குழந்தை மட்டும் பெற்றுள்ளனர். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது. இயற்கையாகவே பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் பிறப்புவிகிதம் அதிகமாகவே இருக்கக்கூடும். எனினும், மேலே சொன்ன எண்ணிக்கையைப் பார்க்கும்போது கருவில் இருப்பது ஆணா என்று சோதித்து, ஆணாக இருந்தால் கரு வளர அனுமதித்திருப்பது புலனாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பங்களில் பாதியில் அதாவது 50%-ல் ஒன்று பையனாகவும் இன்னொன்று பெண்ணாகவும் இருக்கின்றன. இரண்டுமே பையன்களாக இருக்கும் குடும்பங்கள் மூன்றில் ஒரு பங்காக இருக்கின்றன. ஆறில் ஒரு பங்கு குடும்பங்களில்தான் இரண்டுமே பெண் குழந்தைகளாக இருக்கின்றன. அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் உள்ள குடும்பங்களில்தான் ஆண் குழந்தைகளைவிடப் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

 

 

  • கருத்தரிப்பைக் குறைப்பதில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இது இப்படியே நீடித்தால் நாட்டின் மக்கள்தொகை அதிகரிக்காமல் இருக்கும். இதில் பாராட்டும்படியான அம்சம், சீனத்தில் இருப்பதைப் போல அரசாங்க ஆணை மூலம் கட்டுப்படுத்தாமல் இயல்பாகவே நடந்திருப்பதுதான்.

 

 

  • அதிகக் குழந்தைகளைப் பெற்றால் குடும்பத்தை நடத்துவது கடினம் என்பதை உணர்ந்து, கணவன் – மனைவி இருவருமே குழந்தை பெற்றுக்கொள்வதைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதே வேளையில், குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களுக்கு ஆண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர். கரு தோன்றிய உடனே அது ஆணா, பெண்ணா என்று சோதித்து, ஆணாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். முதல் குழந்தை ஆணாக இருந்துவிட்டால் அடுத்த குழந்தை வேண்டாம் என்று தீர்மானித்துவிடுகின்றனர்.

 

 

  • முன்பெல்லாம் ஏழைக் குடும்பங்களில்கூடப் பெண் குழந்தைகள் அதிகம் இருந்தனர். இப்போது நகர்ப்புறமயமாதல் அதிகரித்துவருவதால், ஏழைக் குடும்பங்களிலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. குறைவான கருத்தரிப்பு விகிதம் அப்படியே தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண்களைப் படிக்க வைப்போம்’என்பதோடு நின்றுவிடாமல், பெண்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில்செய்யும் வாய்ப்பு உள்ளிட்ட பொருளாதாரப் பலன்களும் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், பெண் குழந்தைகளைப் புறக்கணிக்கும் சமூகப் போக்கு நிச்சயம் மாறும்.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS

 

No Comments

Sorry, the comment form is closed at this time.