why there is stress to students

மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவது ஏன்?

Image result for Why there is stress to students ?
 குழந்தைகள் அதிகம் விரும்பும் பம்பர் ஸ்டிக்கரில் இடம்பெற்றுள்ள ஒரு வாசகம்

 

குழந்தைகளை இன்று துரத்தும் மிகப்பெரிய அச்சுறுத்தல், எல்லாவற்றிலும் வெற்றி மட்டுமே அடைய வேண்டும் என அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் அன்பு நிர்ப்பந்தம். ‘வீட்டிற்கு இன்று என்ன வெற்றி செய்தியை எடுத்துச் செல்லப்போகிறோம்’ என்கிற மனஅழுத்தம் இல்லாத குழந்தையே இல்லை.

 

அதற்குப் பள்ளி மட்டுமே காரணமல்ல. இந்த சமூகமே ஒருவகை ‘வெற்றி இலக்கு-போட்டி’ சமூகமாக திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது என்பதே உண்மை. ‘Rat-Race’ என்று இதை ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இது ஒருவகை கற்பிதம். தனது சொந்த லாப நலன்களுக்காக இன்றைய கார்பரேட் உலகம் உற்பத்தி செய்து வைத்திருக்கும் போலியான சூழல் இது என்பது பெரும்பான்மை உளவியலாளர்களின் கருத்து.

 

 

இத்தகைய டார்க்கெட் ரீச் (Target Reach) சமூக அமைப்பில், மிக அதிக மனஅழுத்தத்தை அனுபவிப்பது குழந்தைகள்தான் என்பது காரல் ஹோனோரின் கருதுகோள். ‘அதீத பராமரிப்பு’ (Hyper Parenting) எனும் பதம் அவரது முக்கிய பங்களிப்பு ஆகும். ஆங்கிலேய கலாச்சார விமர்சகரான காரல் ஹானோரின் 2008ம் ஆண்டு நூலான under pressure (Putting the Child back in Child hood), அதீத பெற்றோர் தலையீடு மற்றும் கண்காணிப்பு குறித்து நம்மை பிரத்யேக உதாரணங்களோடு எச்சரிக்கிறது.

 

 

குழந்தைப்பருவம் என்பது, குதூகலமான, எந்தப் பொறுப்புகளும் இன்றி சிறகசைத்து பறக்கும் தருணமாக இருந்த அந்த காலகட்டம் முடிந்து போய்விட்டது என்பது பலரும் அறிந்ததே. இன்று குழந்தைகள் மீது பலவிதமான இலக்குகள் திணிக்கப்படுகின்றன. சராசரியாகக் கல்வியில் மேம்பாடு, அதைத்தவிர ஒரு நடன வகுப்பு, அல்லது கராத்தே அல்லது அபாகஸ்… நீச்சல் பயிற்சி, டென்னிஸ், கிரிக்கெட் பயிற்சி அல்லது இசை, வீணை… என ஏதாவது ஒரு ‘திறன்-வளர்ச்சி’ ஒவ்வொரு குழந்தையோடும் ஒட்டிக்கொள்கிறது. சில குழந்தைகள் இவற்றில் வெற்றியாளர்களாகி முடிசூட்டப்படுகின்றன.

 

 

‘தோல்வி’ காணும் குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து கதறி அழுவதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். இந்த ‘முதலிடம்’ நோக்கிய நிர்பந்தத்தால் நிகழும் பல்வேறு அனுபவங்கள் ‘அக்மார்க் வன்முறை’ என்கிறார் ஹோனோர். காலை நான்கு மணிக்கு நீச்சல் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. பெரும்பாலான பாட்டு, இசை வகுப்புகள் இரவு ஒன்பது வரைகூட நீள்கின்றன. பொதுவாக இவ்வகை வகுப்பு களுக்குப் போகாத குழந்தைகள்கூட மாலை பள்ளி முடிந்தால் சிறப்பு வகுப்பு (Tution)களுக்கு அனுப்பப்பட்டுவருகிறார்கள்.

 

 

குழந்தைப் பருவமான நிலையைத் தக்க வைக்கவும், இளம் பிஞ்சு இதயத்தை இதமாக்கவும் இரண்டு அம்சங்கள் மிகவும் அவசியம். (1) உறக்கம், (2) விளையாட்டு. காலையில், வீட்டிலேயே கடைசியாக… அதாவது ஒரு 7 மணிக்குக் கண் விழித்து இரவில் எல்லாருக்கும் முன்னதாக அதாவது ஒரு 8 மணிக்கு உறங்க முடிந்த குழந்தைப் பருவமே ஆரோக்கியமானது என்பது பல வல்லுநர்களின் கருத்து.

 

 

உறக்கம் குறித்து டேனியல் கோல்மானின் கருத்துக்களை ஏற்கனவே ஒரு அத்தியாயத்தில் நாம் கண்டோம். அதிகாலை ஆறு மணிக்கு டியூசன் என பரபரக்கும் பத்து வயதுக் குழந்தைக்கு மனஅழுத்தம் உடம்பின் கூடவே ஒட்டிக்கொள்கிறது என்பதற்கு மருத்துவச் சான்றுகள் உள்ளன.

 

‘மாலை முழுதும் விளையாட்டு’ என்பது மகாகவி குழந்தைகளுக்கு இட்ட கட்டளை. அது நாம் நினைப்பதுபோல நீச்சல் கிளாஸ், கராத்தே வகுப்பு இவற்றால் வருவது அல்ல. பலவகை வயதுக் குழந்தைகள் தாங்களாகவே உருவாக்கிய சட்ட திட்டங்களுடன் விளையாடும் பல்வகை (Assorted group games) குழு விளையாட்டுகள் குழந்தைப் பருவத்தின் தனித்தன்மையாகும்.

 

 

கூட்டாக விளையாடும் ஐஸ்பாய், பம்பரம், கிட்டிப் புள் முதல் தாயக்கட்டம், நொண்டி என இவ்வகை விளையாட்டுகள் பல. இவற்றைப் பலரோடு இணைந்தாடிக் களிக்கும் ஒரு குழந்தை மன உளைச்சல்கள், மன அழுத்தம் என யாவற்றிலிருந்தும் தப்புகிறது என்பது உளவியல் உண்மை. இவ்வகை விளையாட்டுகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஏன் கோடைகால விளையாட்டுகள், மழைக்கால விளையாட்டுகள் எனவும் உண்டு.

 

 

இந்த, உறக்கம், பல்வகைக் குழு விளையாட்டு எனும் இரண்டையும் இன்றைய குழந்தை இழந்து நிற்கிறது. கார்பரேட் வாழ்வின் அங்கமாகிப்போன நுகர்வுக் கலாச்சார அடுக்கு மாடிகள் குடும்பங்களை குறுக்கி விட்டன. தொலைக்காட்சிப் பெட்டி தவிர வேறு மாலைநேர பொழுதுபோக்கே இல்லாத குழந்தைகள் இன்று ஏராளம்.

 

 

தனித்தே விடப்பட்ட அவர்களின் மனஅழுத்தம் பெற்றோர்களின் கல்வி மற்றும் பிற திறன் கனவு களின் ஒரே போக்குவாயாகி வதைபடுதலே தெரியாமல் வெந்துகொண்டிருப்பது வகுப்பறையில் வெளிப்படுகிறது. சிறு சிறு தோல்விகளைக்கூட தாங்கிக்கொள்ளாதவர்களாக இது அவர்களைத் தள்ளுகிறது.

 

 

மெக்சிகோவின் நரம்பியல் நிபுணர் பால்.டி.மெக்லீன், இன்றைய நகர்ப்புறப் பெற்றோர்கள் குழந்தைகளைச் செல்லப்பிராணிகள் போல ‘ஷோ’வுக்காக வளர்க்கிறார்கள் என பகிரங்கமாக குற்றம் சாட்டு கிறார். ‘50 பொருட்களின் பெயர்களைச் சொல்ல முடிந்த பேசும் பச்சை கிளி, கணக்கு போடத்தெரிந்த பொமேரியன் நாய் மற்றும் மூன்று நான்கு வயதிலேயே உலக நாடுகளின் தலைநகரம் சொல்லும் குழந்தை என்பன எல்லாம் ஒன்றுதான்’ என்பது அவரது வாதம். இயல்புக்கு மாறான இத்தகைய எல்லாத் தூண்டுதல்களுமே ஒருவகை சித்திரவதைதான்.

 

 

மனித மூளையில் முன் மூளைப்புரணியின் கூடவே இருபுறமும் பக்கவாட்டில் அமைந்துள்ள, அமைக்டாலா (Amygdala) எனும் சிறு அமைப்பு உள்ளது. கிரேக்க மொழியில், :அமைக்டாலா” என்றால் பாதாம்பருப்பு. பாதாம் பருப்பு அளவே உள்ள இரண்டாக அமைந்த மூளையின் இந்தப் பகுதியின் வளர்ச்சியை நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார் பால்.டி.மெக்லீன்.

 

 

‘அமைக்டாலா”க்கள்தான் நம் அன்றாட (Routine) வழக்கங்களுக்குப் பொறுப்பேற்ற சிறு அமைப்பு. இது நமது ஊர்வன மூதாதைகளிடமிருந்து நாம் பெற்ற பெரும்பரிசு. மெக்லீன், சுவர் பல்லிகளுடன் (ஊர்வன) நம் அன்றாட வாழ்வை ஒப்பிடுகிறார். தத்ரூபமான ஒப்பீடு!

 

 

மெல்ல கண் விழித்தல்… அயர்ச்சியோடு சாலையில் வெளியே வருதல்
சற்றுநேர ரிலாக்ஸ் மேய்ச்சல்
காலைக் கடன்
எல்லைக்கு உட்பட்ட உணவு வேட்டை
சும்மா இருத்தல்… ரிலாக்ஸ், மேலும் உணவு
எல்லைவரை சுற்றி வருதல்… சகாக்கள்
அரணுக்குத் திரும்புதல்
மெல்ல உறங்கச் செல்லுதல்

 

 

மேற்கண்ட இந்த எட்டு செயல்பாடுகளும் பல்லிகளின் அன்றாட வாழ்வு(Routine). மெக்லீன், மனிதர்களிடமிருந்து இது வேறுபடவில்லை என்பதை நிறுவுகிறார். நீங்கள், ரிலாக்ஸுக்கு பதிலாக ஷாப்பிங் என்று போடலாம். அரணுக்கு திரும்புதல் கூடவே டி.வி. பார்ப்பது எனச் சேர்க்கலாம். சகாக்கள் என்பதற்கு மாற்றாக கிளப், கிரிக்கெட் என மாற்றலாம். மற்றபடி மேற்கண்ட அன்றாட பட்டியல் நமக்கும் பொருந்துவது தான்.

 

 

‘இந்த அன்றாட படிநிலைகளை மாற்றாமல் நமக்கு உடல் கடிகாரத்தை கட்டமைக்கும் அமைக்டாலா, குழந்தைகளுக்கு வளர்ச்சி அடையும் பாதி பாதையில் உள்ளது’
என்பதைச் சுட்டிக்காட்டும் மெக்லீன், ‘அது முழுமையாக வளர்ச்சி அடைய ஒருவருக்குப் பதினேழு… பதினெட்டு வயது ஆகவேண்டும்’ எனும் மருத்துவ உண்மையை நம் முன் வைக்கிறார். அன்றாட வாழ்வின் முறை (Routine) பாதிப்படையும் குழந்தைகள், ‘அமைக்டாலா’வின் அதீத தூண்டலால் கடும் எரிச்சலுக்கு உட்படுகின்றன.

 

 

பொது சகிப்புத்தன்மை, பகுத்தறிவு என எதற்கும் கட்டுப்படாத பல செயல்களை ‘அைமக்டாலா’வால் தூண்டிவிட முடியும். ஆத்திரத்தில் பொருட்களை உடைப்பது, எதற்கெடுத்தாலும் அடம் பிடிப்பது, காரணமற்ற அழுகை, ஒத்துழையாமை, அச்ச உணர்வு என இதன் அறிகுறிகள் வயதுக்கு வயது மாறுகின்றன. அழுத்தம் எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படும் எல்லாவற்றின் பின்னேயும் இந்த ‘அமைக்டாலா’வின் அதீத தூண்டல் உள்ளது என்பது மெக்லீனின் கண்டுபிடிப்பு.

 

 

கடும்போட்டி என்பது எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பது முக்கியம். தனது வீட்டில் புதிதாகப் பிறந்த தன் தம்பிக்கும் தனக்கும் இடையே பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பது குறித்த போட்டியும் வெளியே தெரியாத மன அழுத்தமே.

 

 

இவற்றை பதப்படுத்தி ‘அமைக்டாலா’ செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க, முன்பிருந்த கூட்டுக்குடும்பத்தின் தாத்தாக்களும், பாட்டிகளும் ‘ஷாக் அப்ஸர்வர்’கள் போல செயல்பட்டுள்ளார்கள். இவை யாவுமே மறுக்கப்பட்ட இன்றைய நவீன கலாச்சார யுக குழந்தை, வெறும் இலக்குகளை அடைதல் என்பதையே அன்றாட செயல்பாடாகக் கொள்ளும்போது அது வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சவாலாக வெடிக்கிறது.

 

 

மனஅழுத்தம் என்பது, தான் செய்து முடிக்க வேண்டிய வேலைக்கும் அதற்காக மிச்சமிருக்கும் நேரத்திற்கும் இடையே ஏற்படும் பதற்றம் மட்டுமல்ல. தன்னிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது, மாறாகத் தான் எடுத்துள்ள (மதிப்பெண் அல்லது சர்டிபிகேட்) நிலை இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு தரும் பதற்றமும் கூடத்தான். இன்றைய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது மிக அதிகமான எதிர்பார்ப்பு கொண்டவர்களாக இருப்பதைக் காண்கிறோம்.

 

 

‘ஐ.ஐ.டி. அல்லது மருத்துவப் படிப்பில் சேர்ந்தே தீரவேண்டும்… இல்லையேல் என்னை உயிரோடு பார்க்க முடியாது / உழைப்பெல்லாம் வேஸ்ட்…’ – இப்படி தங்களின் பிஞ்சு மழலைகளை அணுகுபவர்களும், ‘அதில் ஒரு சர்டிபிகேட் கோர்ஸ் சேரணும்… இதில் ஒரு சிறப்பு வகுப்பு போகணும்…
அவனைப் பார், அது முடிச்சிட்டான்…

 

 

இவனைப் பார்… மேதைப் பட்டமே வாங்கிட்டான்…” என ஒப்பீட்டில் இறங்குபவர்களும் குழந்தைப் பருவத்திற்கே எதிரானவர்களாகக் களத்தில் குதிக்கிறார்கள் என்பதே உண்மை. இப்படியான மன அழுத்தங்கள் ஒருபுறம்.

 

 

மது அருந்தும் தந்தை… எப்போதும் அவரால் உதையும் வதையும் படும் தாய்… என்ற குடும்பச் சூழல் மறுபுறம். தொண்ணூறு சதவிகிதக் குழந்தைகள் இன்று வகுப்பறைக்கு எப்படியும் அதீத தூண்டல் ‘அமைக்டாலா’வுடன் வருகின்றார்கள் என்பதே உண்மை.‘அமைக்டாலா’ தூண்டலின்போது கீழ்க்கண்ட நான்கு விஷயங்கள் நடப்பதாக மெக்லீன் குறிப்பிடுகிறார்.

 

 

(1) கவனச்சிதைவு மற்றும் ஆர்வமின்மை
(2) அதிக கடுப்பு/எரிச்சல்/எல்லாவற்றின் மீதும் வெறுப்பு
(3) வகுப்பறை செயல்பாட்டிற்கு எதிராகச் செயல்படுதல்
(4) தன்னை வருத்துவது அல்லது ஏதாவது ஒரு தப்புதல் நடவடிக்கையில் (Escape Mechanism) ஈடுபடுதல்இதைத் தடுப்பது குறித்து மெக்லீனின் ஆய்வுகள் விளக்குகின்றன. அவ்விதம் தூண்டப்பெற்ற ஒரு மாணவர், வகுப்பில் கத்துவது… சம்பந்தமில்லாமல் எதையாவது உடைப்பது… தனது அல்லது பிறரது பொருட்களை சேதப்படுத்துவது…

 

 

பிளேடால் கிழித்துக்கொள்வது போன்ற செயல்களில் இறங்குகிறார். யூ.கே.ஜி. படிக்கும் குழந்தை கூட, வண்ணப் பாட்டில்களை மொத்தமாக கொட்டி தரை முழுதும் மெழுகி தனது எரிச்சலை வெளிப்படுத்துகிறது. கூர் பென்சிலால் மற்றவர்களுக்குக் காயம் ஏற்படுத்துகிறது. ‘அமைக்டாலா’ தூண்டுதல் என்பது இப்படிப் பல நுணுக்கமாக வகுப்பறை மீறல்களாக வெடிக்கிறது என்பது மெக்லீனின் நிரூபணம்.

 

 

சரி, இதை எப்படி சரிசெய்வது? வகுப்பறையில் அதை எதிர்கொள்ள என்ன வழி? அதற்கு STAR (ஸ்டார்) எனும் புதிய அணுகுமுறையை முன்மொழிகிறார் மெக்லீன். அதை அடுத்த வகுப்பில் விரிவாகக் காண்போம்.அதிகாலை ஆறு மணிக்கு டியூசன் எனப் பரபரக்கும் பத்து வயதுக் குழந்தைக்கு மனஅழுத்தம் உடம்பின் கூடவே ஒட்டிக்கொள்கிறது என்பதற்கு மருத்துவ சான்றுகள் உள்ளன.

 

 

(இருபதாவது பாடவேளை முடிந்தது)
‘ஆயிஷா’ இரா. நடராசன்

 

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.