திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவது ஏன்?

Deal Score0

Image result for Why do whales washes up

 

 • திமிங்கிலங்கள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. கடலில் இரை தேடும் போது, வழிகாட்டிக்கொண்டு முன்னே செல்லும் திமிங்கிலம் வழி தவறி விடுமானால், அதைப் பின்பற்றிச் செல்லும் திமிங்கிலங்களும் வழி தவறிப்போய் கரை ஒதுங்குவதும் உண்டு.

 

 • பசிபிக் பகுதியில் ஏற்படும் எல்நினோ நிகழ்வு காரணமாக நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்களும் திமிங்கிலங்கள் வழி தவறித் திகைத்துப் போய் நிற்கக் காரண மாகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கனன்று கொண்டிருக்கும் எரிமலைகள் (active volcanoes) நிறைய உள்ளன. இதுவும் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கக் காரணம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

 

 • மிகச் சமீபகால நிகழ்வான, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் வடபகுதியில் உள்ள, பெர்டினாண்டோ கடற்கரையில் 2015-ல் கரை ஒதுங்கிய திமிங்கிலங்களில் பல இறந்துவிட்டன. இறந்த திமிங்கிலங்கள் உடற்கூறு ஆய்வுக்கு (necropsy) உட்படுத்தப்பட்டன. ஒரு வித நோய்க் கிருமிகள் (microbilli virus) ஏற்படுத்திய நோயால் திமிங்கிலங்கள் இறந்தன என்று கண்டறியப்பட்டது.

 

 • திருச்செந்தூரிலும் இறந்த திமிங்கிலங்களின் உடல்களின் பகுதிகள் உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

 

கூடங்குளம் அணுக் கழிவு காரணமா?

 

 • திருச்செந்தூரில் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியதற்கு கூடங்குளம் அணு உலைக் கழிவைக் கடலில் கொட்டுவதுதான் காரணம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. உண்மையான காரணம் என்ன என்பதை ஆய்வு முடிவுகள்தான் சொல்லக்கூடும் என்றாலும், அணுக் கழிவு தொடர்பாக நமக்குச் சில தெளிவுகள் வேண்டும்.

 

 • நெருப்பைப் பொட்டலம் கட்ட முடியுமா? அதுபோலவே, ஒரு ஆலையின் கழிவுகளை, ஒரு மருத்துவமனையின் கழிவுகளை, ஒரு காய்கறிச் சந்தையின் கழிவுகளைக் கையாள்வதுபோல, அணுக் கழிவுகளைக் கையாள முடியாது.

 

 • அணுக் கழிவு என்பது அணுமின் உற்பத்திக்குப் பின்னர், எரிந்துபோன யுரேனியம் தண்டுகள் உள்ளிட்ட கடுமையான கதிரியக்கத் தன்மையுள்ள தனிமங்களைக் கொண்டதாகும். அணுக் கழிவில் ஆல்பா, பீட்டா மற்றும் காமா கதிர்கள் இருக்கும். இதை ஒரு இரும்புப் பெட்டியில் வைத்து மூடினாலும் பயனில்லை. ஏனெனில், காமா கதிர்கள் இரும்பைச் சுலபமாக ஊடுருவும் தன்மை கொண்டவை.

 

 • மேலும், காமா கதிர்கள் ஒளியின் வேகத்தில், அதாவது ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கி.மீ. வேகத்தில் பரவக் கூடியவை. எனவே, அணுக் கழிவைக் கடலில் கொட்டுவது கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத விஷயம் என்பதை உணர வேண்டும்.

 

 • அவ்வாறு கூடங்குளம் அருகில் உள்ள கடலில் அணுக் கழிவுகள் கொட்டப்பட்டு இருக்குமானால், திமிங்கிலங்கள் மட்டுமல்ல; மனிதர்களும் கூட்டம் கூட்டமாக மடிந்திருப்பார்கள். ஏனெனில், திமிங்கிலங்களை மட்டும் குறிவைத்துத் தாக்குகிற, ஏனைய உயிரினங்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுகிற கதிரியக்கம் இந்தப் பிரபஞ்சத்திலேயே கிடையாது.

 

 • அணுஉலை, அணுமின்சக்தி என்பதெல்லாம் இரண்டாம் உலகப் போரை ஒட்டி முதன்முதலாக 1940களில்தான் வந்தன. ஆனால், திமிங்கிலங்கள் வழி தவறிக் கரை ஒதுங்குவது அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துவருகிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறு திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவது குறித்து அரிஸ்டாட்டில் எழுதியுள்ளார்.

 

அணுஉலையிலிருந்து வெளியேற்றப்படும் சுடுநீர் காரணமா?

 

 • கூடங்குளத்தில் இரண்டு அணுஉலைகள் உள்ளன. இதில் இரண்டாம் அணுஉலை இன்னும் செயல்பட ஆரம்பிக்கவில்லை. இவ்வாண்டு மத்தியில் (2016 மே-ஜூன்) செயல்படத் தொடங்கும் என்று ராஜ்யசபாவில், பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் 17.12.2015-ல் கூறியுள்ளார்.

 

 • முதல் அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஜூன் 24, 2015 முதல் பராமரிப்புப் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, கடந்த ஆறு மாத காலமாக கூடங்குளம் அணுஉலை மூடியே கிடக்கிறது.

 

 • போன மாதம், டிசம்பர் 12, 2015 அன்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், மூடிக் கிடக்கும் கூடங்குளம் அணுஉலையைத் திறக்குமாறு கோரினார்.

 

 • ஆக, ஆறு மாத காலமாக மூடிக் கிடக்கும் கூடங்குளம் அணுஉலையிலிருந்து சூடான நீர் எப்படிக் கடலில் கலந்திருக்க முடியும்? எந்த ஒரு அணுஉலையில் இருந்தும் வெளியேற்றப்பட்டு, கடலில் கலக்கும் நீரின் வெப்பநிலை (temperature of water at the final discharge point) சுற்றுப்புற வெப்பநிலையைவிட 7 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே அதிகமாக இருக்கும். அதாவது, சுற்றுப்புற வெப்பநிலை 30 டிகிரி செல்ஷியஸ் என்றால், அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அதிகபட்சமாக 37 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே இருக்கும். இதை வைத்துக்கொண்டு கடலை யாராலும் சூடாக்க முடியாது.

 

 • கூடங்குளம் அணுஉலை வேண்டுமா, வேண்டாமா; உண்மையில் அணுஉலைகள், அணுக் கழிவுகள் என்னென்ன பிரச்சினைகளையும் ஆபத்துகளையும் உண்டாக்கும் என்பது தனி விஷயம். திமிங்கிலப் பிரச்சினையை இதோடு குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை.

 

LATESTS GOVERNMENT JOBS