இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான தேவை இருக்கிறது

start up

 • ஜனவரி 16 அன்று பிரதமர் மோடி ஸ்டார்ட்-அப் திட்டத்தைத் துவக்கப்போகிறார். இதற்கு ‘ஸ்டார்ட்-அப் இந்தியா, ஸ்டாண்ட்-அப் இந்தியா’ (தொடங்கிடு இந்தியா, எழுந்து நில் இந்தியா) என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு உலகெங்குமிருந்து 200-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தலைவர்கள் டெல்லிக்கு வருகிறார்கள். ஸ்டார்ட்-அப் என்று எதைச் சொல்கிறார்கள்? இந்தத் திட்டத்தால் இந்தியா எழுந்து நிற்குமா?

 

 • இன்று முன்னணியில் விளங்கும் ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள், டிவிட்டர் போன்ற பல நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டார்ட்-அப் அமைப்புகளாக ஆரம்பிக்கப்பட்டவைதான். தொடக்கத்தில் ஸ்டார்ட்-அப் என்பது ஒரு கருத்துருவாக (idea) இருக்கும். அதைப் புதிய வழியில், புதிய முறையில் (innovation) ஒரு திட்டமாக உருவாக்க வேண்டும். இந்தக் கருத்துருவை முன்வைப்பவர்கள்தான் இதை வணிகரீதியில் வெற்றி பெறத்தக்க திட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும். அவர்கள் மக்களின் தேவைகளை அறிந்திருக்க வேண்டும். எதிர்காலம் குறித்த தீர்க்கதரிசனமும் வேண்டும். இந்தக் கருத்தை அவர்கள் யாருக்கும் கை மாற்றிக் கொடுக்க முடியாது. ஒரு திட்டமாக உருப்பெற்ற பின்புதான் பலருக்கும் இதன் பயன்பாடு புரியவரும். ஆகவே, இந்தக் கருத்தை மட்டும் யாரும் விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். இது ஒரு பிரசவம் மாதிரி. கருவுற்ற பெண்தான் பிள்ளை பெற்றாக வேண்டும். திட்டமாக உருப்பெற்ற பின்னர் அதைச் சந்தைக்குக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தும்போது கருத்தை உருவாக்கியவர்களே நிறுவனத்துக்குத் தலைமை தாங்குவார்கள். அல்லது முக்கியப் பொறுப்பு வகிப்பார்கள். ஆகவே, இது தனி மனிதர்களின் திறனைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. இந்தத் திறமைசாலிகளுக்கு நிதி வேண்டும். கருத்து திட்டமாக உருப்பெறும்போது குறைவான நிதி வேண்டும். நிறுவனமாகி சந்தைப் படுத்தும்போது அதிகமான நிதி வேண்டும்.

 

 • ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவை மட்டுமல்ல. சுற்றுலா, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், உயிரியில், சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வெற்றிகரமாக சேவையாற்றி வருகின்றன.

 

ஹாங்காங்

 

 • ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்குப் பல நாடுகளின் அரசாங்கங்கள் உதவிவருகின்றன. உதாரணமாக, ஹாங்காங் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. ஹாங்காங்கில் அறிவியல் பூங்கா என்கிற இடத்தில் உள்கட்டமைப்பு வசதிகளும் ஆய்வுக்கூடங்களும் உள்ளன. இங்கே ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அலுவலகம் அமைத்துக்கொள்ளலாம். அவர்களது கருத்துரு ஒரு திட்டமாக உருவாகும் வரை நிதியுதவியும் கிடைக்கும். பல்கலைக்கழகங்களும் தொழில்நுட்ப ரீதியில் உதவும். இன்வெஸ்ட்மெண்ட் ஹாங்காங் என்கிற வர்த்தகத்தை ஊக்குவிக்கிற அமைப்பில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்காகவே தனிப் பிரிவு இருக்கிறது. இந்தப் பிரிவு முதலீட்டாளர்களிடம் திட்டத்தைக் கொண்டு சேர்க்கும்.

 

சீனா

 

 • ஹாங்காங் சந்தை சிறியது. ஆனால், சீனாவின் சந்தை இந்தியாவைப் போலவே பெரியது. உற்பத்தித் துறையிலும் கணினி வன்பொருளிலும் சீனா முன்னணி வகிக்கிறது. மென்பொருளில் முன்னேறி வருகிறது. இந்தப் பின்புலத்தோடு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது. ஹாங்காங்குக்கு வெகு அருகில் உள்ள நகரம் ஷென்ஜன். கடந்த ஐந்தாண்டுகளில் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வளர்ந்திருக்கின்றன. அவற்றுள் இரண்டு பிரபலமானவை: வீசாட், டி.ஜே.ஐ.

 

 • வீசாட் உடனடித் தகவல் பரிமாற்ற சேவை. சீனாவின் இணைய விதிகளுக்கு உட்பட்டு 2010-ல் தொடங்கப்பட்டது. வங்கிச் சேவைகளுக்குக்கூட நம்பிக்கையோடு பயன்படுத்தப்படுகிறது. இன்று உலகளவில் 10 கோடிப் பேர் இதன் உறுப்பினர்கள்.

 

 • டி.ஜே.ஐ டிரோன் (drone) வகைப்படும் தானியங்கி கேமராக்களைத் தயாரிக்கிறது. ரிமோட்டில் இயக்கலாம். ராணுவத்தில் மட்டும் பயன்படுத்திய மாதிரியை எடுத்துக்கொண்டு, எளிமைப்படுத்தி, சிவில் சமூகத்தின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர் பிராங் வாங். ஹாங்காங்கில் அறிவியல் படித்தார். 2006-ல் ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ஷென்ஜனில் தொடங்கினார். இப்போது ரூ.10,000 முதல் ரூ.20 லட்சம் வரை விதவிதமான டிரோன்கள் தயாரிக்கிறார். இந்த டிரோன்களுக்குப் பயன்பாடு அதிகம். இயற்கைப் பேரிடரின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளைப் படம் எடுக்கும். அடர்ந்த காடுகள், பனிப் பிரதேசங்கள், பூமிக்கு அடியில் என்று மனிதர்கள் போக முடியாத பகுதிகளுக்குச் சென்று படமெடுத்து ஸ்மார்ட்போனுக்கு அனுப்பிவிடும்.

 

இந்தியா

 

 • இந்தியாவிலும் பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்றவை ஆன்லைன் வணிகத்துக்குப் பெயர் பெற்றவை. மேக்-மை-டிரிப் விமான-பேருந்துப் பயணங்களுக்கும் விடுதிகளுக்கும் முன்பதிவு செய்கிறது. இன்மோபி ஸ்மார்ட்போனில் விளம்பரம் செய்கிறது. ஓலா வாடகை கார் சேவை வழங்குகிறது. இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை எப்படி ஊக்குவிக்கலாம்?

 

 • நமது அரசு அதிகாரிகள் ஸ்டார்ட்-அப் கருத்துக்களைப் பரிசீலித்து அவர்களுக்கு உதவுவதற்கான பயிற்சி பெற்றவர்களில்லை. இந்தப் பணியில் பல்கலைக்கழகங்களை ஈடுபடுத்தலாம். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்.சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களையும், மேலும் நல்ல உள்கட்டமைப்பு உள்ள மருத்துவக் கல்லூரிகள், அறிவியல் கல்லூரிகளையும் ஈடுபடுத்தலாம். இங்கெல்லாம் புதிய கட்டிடங்கள் கட்டி ஸ்டார்ட்-அப் கருத்தாளர்களுக்கு இடம், தகவல் தொடர்பு, ஆய்வுக்கூடம் போன்றவற்றை வழங்கலாம். மாநில அரசுகள் இதில் பெரும்பங்கு வகிக்க முடியும்.

 

 • நமது வங்கிகளுக்கு, இப்படியான கருத்தாளர்களுக்கு நிதி வழங்குவதிலும் அவர்களது திட்டங்களை மதிப்பிடுவதிலும் சிரமம் இருக்கும். திட்டங்களுக்கேற்ப கடனாகவோ மானியமாகவோ நிதி வழங்குகிற பொறுப்பையும் கல்வி நிறுவனங்களுக்கே வழங்கலாம். எல்லா ஸ்டார்ட்-அப் கருத்துருக்களும் வெற்றிகரமான திட்டங்களாக உருப்பெறாது. கணிசமானவை தோல்வி அடையும். நிதி ஒதுக்கும்போது இதையும் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், ஒரு கருத்துரு சந்தைக்கு வருவதற்குக் காலக்கெடு விதிக்க முடியாது. கருத்தைப் பொறுத்து, கிடைக்கும் வசதிகளைப் பொறுத்து கால அளவு மாறுபடும். இதையும் நிதி வழங்குவோர் மனதில் கொள்ள வேண்டும்.

 

 • அடுத்ததாக, அரசின் விதிமுறைகளும் ஸ்டார்ட்-அப் திட்டங்களை ஊக்குவிக்கிற வகையில் இருக்க வேண்டும். சில ஸ்டார்ட்-அப் திட்டங்கள் சந்தைக்கு வரும்போது பழைய விதிகள் பொருத்தமாக இருக்காது. உதாரணமாக, ஹாங்காங்கில் இப்போது உபெர் எனப்படும் வாடகை கார் சேவை பிரபலமாகி வருகிறது. சொந்த காரும் ஓட்டுநர் உரிமமும் வைத்திருக்கிற இளைஞர்கள் பகுதி நேரமாக இதில் சேர விரும்புகிறார்கள். ஹாங்காங்கில் நடப்பில் இருக்கும் வாடகை கார் சட்டப்படி இதைச் செய்ய முடியாது. அந்தச் சட்டங்களை எழுதியவர்கள் பின்னொரு காலத்தில் ஸ்மார்ட்போன் மூலம் பதிவுசெய்து வாடகை காரில் போக முடியும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஹாங்காங் அரசு இப்போது மக்களின் பாதுகாப்புக்குப் பழுதில்லாமல் சட்டத்தைத் தளர்த்துவது குறித்துப் பரிசீலித்துவருகிறது.

 

 • ஸ்டார்ட்-அப் நிறுவனங்களால் மக்களுக்குக் கூடுதல் சேவையைக் குறைந்த விலையில் கொடுக்க முடியும். இந்தியாவில் அதற்கான தேவை இருக்கிறது. திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிதியும் வழிகாட்டுதலும் அரசின் ஆதரவும் வேண்டும். இதில் கல்வி நிறுவனங்களும் அறிவியல் நிறுவனங்களும் சிறப்பான பங்காற்ற முடியும். பிரதமர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான புதிய செயல்திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.