mind and soul

மனம் தளராதே!

 

மனம் தளராதே!

 • ஒரு காரியத்தைச் செய்வதற்குப் பயப்படுகிறாயா? எனில் அதைச் செய்யாதே. ஒரு காரியத்தில் முழுமையாக இறங்கி விட்டாயா? எனில் பயப்படாதே…!”- இதுதான் மங்கோலியச் சக்கரவர்த்தி, மாவீரன் செங்கிஸ்கானின் வாழ்நாள் தாரக மந்திரம். செங்கிஸ்கான் குறித்த கருப்புப் பக்கங்கள் நிறையவே உண்டு. போர்ப்பித்தன், ரத்தவெறி பிடித்தவன், கொடுங்கோலன், இன்னபிற. ஆனால், அவர் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்களும் நிறையவே உண்டு.

 

Image result for lion and mirror

 

 • மங்கோலியர்கள் பொதுவாக நாடோடிகள். ஓரிடத்தில் சில காலம் தங்கி மேய்ச்சல் தொழிலை செய்துவிட்டு, பின் பசும் புல்வெளி நிறைந்த மற்றொரு இடத்துக்கு நகர்ந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்குள் பல இனக்குழுக்கள் உண்டு. அதில் ஒரு இனக்குழுவின் தலைவர்தான் டெமுஜினின் தந்தை. (டெமுஜின் என்பது செங்கிஸ்கானின் இயற்பெயர்). இந்த இனக்குழுக்களுக்குள் 24X7 பகையும், எக்ஸ்குளூசிவ் பழிவாங்கல்களும் நீடித்து வந்தன. கிபி 1162ல் டெமுஜினின் தந்தையை, இன்னொரு இனக்குழுவினர் விஷம் வைத்துக் கொன்று விட்டனர்.
 • குழுவின் அடுத்த தலைவர் யார்? வாரிசாக டெமுஜின் இருக்கிறான். ஆனால், அவனுக்கு வயது வெறும் தலைமைப் பொறுப்பையெல்லாம் தூக்கிக் கொடுத்துவிட முடியாது என்று மறுத்துவிட்டனர். இருந்தாலும் டெமுஜின் மனத்தளவில் தன்னை ஒரு தலைவனாக தயார் செய்தபடிதான் வளர்ந்தான்.
 • அதற்கு முக்கியக் காரணம் அவனது தாய் ஹோலுன். எப்போதும் ஊக்கப்படுத்தும் அவளது பாசிட்டிவ் வார்த்தைகள். “நீ மிகவும் வலிமையானவன்”, “உன்னால் முடியும்” என்ற உற்சாக வார்த்தைகளும் அதில் உண்டு. “மகனே, உன் நிழல் மட்டுமே எப்போதும் உனக்குத் துணை. வேறு யாருமில்லை” என்பன போன்ற எதார்த்த வார்த்தைகளும் அதில் உண்டு.
 • டெமுஜின், தன் நான்காவது வயதிலேயே ஓடும் குதிரையின் மீதேறி நின்று சவாரி செய்யுமளவுக்குத் திறமை கொண்டிருந்தான். வாள் பயிற்சி, வில் வித்தை, பிற ஆயுதங்களை அதிவேகத்துடன் கையாளுதல் என இளமையிலேயே போர்க்களக் கனவுகளுடன் தன் உடலைத் தகவமைத்துக் கொண்டிருந்தான்.
 • அவனுக்கு ஓர் ஆசை இருந்தது. சிதறிக் கிடக்கும் நாடோடி இனக்குழுக்களை எல்லாம், ‘நாம் மங்கோலியர்கள்’ என்ற ஒரே உணர்வுக் குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே அது. மங்கோலியர்கள் மட்டும் ஒன்றிணைந்து செயல்பட்டால், சீனர்கள் தொடங்கி சீறிவரும் எவரையும் வென்று உலகையே கைப்பற்றலாம். இந்த ஆசையை, லட்சியத்தை டெமுஜினுக்குள் விதைத்தது ஜமுக்கா என்ற அவனது ஆருயிர் நண்பன். ஆனால், காலமும் சூழ்நிலையும் நண்பர்களையே எதிரிகளாக்கியது.
 • கிபி டெமுஜினின் படைகளுக்கும், ஜமுக்காவின் படைகளுக்குமே போர் நிகழவிருந்தது. இந்தப் போரில் வெல்பவரே மங்கோலியர்கள் ‘தலைவன்’ ஆக அரியணை ஏற முடியும் என்னும் நிலை. டெமுஜினின் வீரர்கள், எதிரி முகாமை வேவு பார்த்து விட்டு வந்து சொன்ன தகவல் கலவரமூட்டக் கூடியதாகத்தான் இருந்தது.
 • “எதிரிப் படைகளின் எண்ணிக்கை நம்மைவிட பல மடங்கு அதிகம். குறிப்பாக அவர்களது குதிரைப் படையோடு நமது குதிரைப் படையை ஒப்பிடவே முடியாது.”
 • டெமுஜின் பதறவில்லை. அப்போது அவருக்குள் தன் தாய் சொன்ன போர் மந்திரம் ஒன்றுதான் மீண்டும் மீண்டும் ஒலித்தது. “மகனே, முதலில் எதிரி களுக்கு உன்மேல் ஒருவித அச்சத்தை உண்டாக்க வேண்டும். அதைச் செவ்வனே செய்துவிட்டாலே எதிரியின் பலம் பாதி குறைந்துவிடும். பயத்தோடு வந்து மோதும் எவனும் வெற்றி பெறவே மாட்டான்.”
 • எண்ணிக்கையளவில் எதிரிகள் அதிகமாக இருந்தால் என்ன? எனது வீரர்களின் மனவலிமை, எதிரி வீரர்களது மனவலிமையைவிட பல மடங்கு அதிகம். கென்டீ என்ற மலைப்பகுதிகளில் வீரர்களோடு முகாமிட்டிருந்த டெமுஜின் பதறவே இல்லை. எதிரியை நெருங்கிவிட்டோம். எந்தக் கணத்திலும் போர் ஆரம்பிக்கலாம்.
 • விழிப்போடு இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு வீரனும் நினைத்துக் கொண்டிருக்கையில், டெமுஜினிடமிருந்து வித்தியாசமான கட்டளை ஒன்று வந்தது.“இன்று இரவு எல்லோரும் குளிருக்காக நெருப்பை மூட்டி நன்றாக ஓய்வெடுங்கள். ஓரிடத்தில் நெருப்பு மூட்டி ஐந்தைந்து பேராகக் குளிர் காயாதீர்கள். ஒவ்வொருவரும் ஐந்தைந்து இடங்களில் நெருப்பு மூட்டி குளிர் காயுங்கள். அதுபோதும்.”
 • அது நிலவில்லாத இரவு. எதிரிப் படையினர் அருகிலிருந்த மலைக்குன்றின் மேலிருந்து நோட்டமிட்டார்கள். வானில் நட்சத்திரங்கள் மினுமினுத்துக் கொண்டிருந்தன. கீழே பூமியில் நெருப்பு நட்சத்திரங்கள்… எக்கச்சக்கமாக… ஏராளமாக… எண்ணிக்கையில் அடங்காதபடியாக… விதிர்விதிர்த்துப் போனார்கள்.
 • ‘நம்பவே முடியவில்லையே, டெமுஜினின் படை இத்தனை பலம் வாய்ந்ததா?’அந்த நெருப்பு உத்தியால், எதிரிகளின் பார்வையில் டெமுஜினின் படை பல மடங்கு பெரியதாகத் தெரிந்தது. அது எதிரி வீரர்களை மனத்தளவில் படபடக்க வைத்தது. பலவீன எண்ணங்களை விதைத்தது. ஆக, எதிர் வீரர்களில் ஒரு பகுதியினர் பயந்து இரவோடு இரவாக தங்கள் முகாமிலிருந்து தப்பித்துச் சென்றார்கள். அப்படி ஓடும்போதே, பள்ளம், மேடு தெரியாமல் குதிரைகளோடு விழுந்து இறந்தவர்கள் பலர்.
 • எல்லாம் அன்னை சொன்ன மொழிதான். எதிரிகளை மனத்தளவில் பலவீனப்படுத்துதல். இப்படிப்பட்ட உத்திகளைக் கையாண்டு, அந்தப் போரில் பெரு வெற்றி பெற்றார் டெமுஜின். மங்கோலியர்களின் தலைவனாக, பேரரசர்களுக்கெல்லாம் பேரரசன் செங்கிஸ்கானாக முடிசூட்டிக் கொண்டார்.
 • “கழுதைகள் நிரம்பிய, சிங்கத்தைத் தலைவனாகக் கொண்ட ஒரு படை என்பது, சிங்கங்கள் நிரம்பிய, கழுதையைத் தலைவனாகக் கொண்ட படையைவிட பல மடங்கு வலிமையானது” என்பது செங்கிஸ்கான் மொழி. சிங்கம் என்பது நம் மனவலிமை. உடல் வலிமைகூட இரண்டாம்பட்சம்தான்.
 • மனவலிமை மிகுந்தவனே வென்று சிரிப்பான். ஆனால், உடல் வலிமையிருந்தாலும் மனத்தளவில் பலவீனமானவன் தோற்று அழிவான். நேர்மறை எண்ணங்களே மனத்தை வலிமைப்படுத்தும். நம்மை உத்வேகப்படுத்த நல்ல நண்பனோ, நல்ல குருவோ கிடைக்காமல் கூடப் போகலாம்.
 • ஆனால், நேர்மறை எண்ணங்கள் மட்டும் இருந்தால் போதும். அது எப்போதும் நம்மைக் கைவிடாது.கழுதைகள் நிரம்பிய, சிங்கத்தைத் தலைவனாகக் கொண்ட ஒரு படை என்பது, சிங்கங்கள் நிரம்பிய, கழுதையைத் தலைவனாகக் கொண்ட படையைவிட பல மடங்கு வலிமையானது
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.