பட்டா வாங்குவது எப்படி? பட்டா என்றால் என்ன?

 

document patta

 

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் வருவாய்த்துறை அளிக்கும் சான்றிதழ். சொத்துப் பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக மாறியிருக்கிறது.

 

 

எனவே, இத்தகைய பரிமாற்றங்களுக்குச் சட்டப் பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மன்னராட்சிக் காலத்தில் இருந்தே சொத்துப் பரிமாற்றங்களை ஆவணப்படுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.

 

 

கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்களைப் போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.

 

 

இதற்கான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பதிவுச் சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபாடுகளைச் சரிச் செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

 

 

பட்டா என்பது சட்டப்பூர்வ ஆவணம். பட்டா இருந்தால்தான் ‘சிட்டா’ வாங்க முடியும். சிட்டா என்பது, குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம். இதைக் கிராம நிர்வாக அலுவலர் வழங்குவார். அந்த நிலத்தில் (சம்பந்தப்பட்ட சர்வே எண் உள்ள இடத்தில்) என்ன பயிர் வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் குறிப்பிடப்பட்டால் அதை ‘அடங்கல்’
என்பர். இதையும் கிராம நிர்வாக அலுவலரே வழங்கலாம்.

 

 

நிலத்தை வாங்குவதில் பத்திரப்பதிவு செய்தால் மட்டும் போதாது. அதை முறையாக வருவாய்த்துறையில் பதிவுசெய்து பட்டா பெற வேண்டும். ஆகப் பத்திரப்பதிவு போலப் பட்டாவும் அவசியமான ஒன்று. ஒரு சொத்தை வாங்கும்போதோ, நமக்கு வாரிசு உரிமைப்படி எழுதி வைக்கப்படுவதாக இருந்தாலோ அந்த நிலத்தின் .பட்டாவை நம்முடைய பெயரில் மாற்றம் செய்ய வேண்டும்.

 

 

பட்டா பெறுவது எப்படி?

 

 

நாம் வாங்கிய அல்லது நமக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்து, எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்டதோ அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் சம்பந்தமாக விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

இந்த விண்ணப்பம் www.tn.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. அதைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தாலுகா அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். எத்தனை நாட்களுக்குள் பட்டா கிடைக்கும்..?

 

 

ஒரு சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்தால் 15 நாட்களிலும், ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி மட்டும் வாங்கியிருந்தால் 30 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்படவேண்டும். இதற்கான கட்டணம் ரூ.80. அதை தாலுகா அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.விண்ணப்பத்தில் என்னென்ன விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்?

 

 

விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார்/கணவர் பெயர், இருப்பிட முகவரி, பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம் (அதாவது மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண்/மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர், தெருவின் பெயர், மனைப்பிரிவு மனை எண் போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்), மனை அங்கீகரிக்கப்பட்டதா, அங்கீகாரம் இல்லாத மனையா என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு வரைபடத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பிறகு சொத்து எந்த வகையில் விண்ணப்பதாரருக்குக் கிடைக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

 

 

சம்பந்தப்பட்ட சொத்தை விண்ணப்பதாரர் அனுபவித்து வருவதற்கான சான்றுகளையும் இணைக்க வேண்டும். அதாவது, சொத்து வரி ரசீது, மின் கட்டண அட்டை, குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்ற சான்று களில் ஒன்றை இணைக்க வேண்டும். பதிவு மாற்றம் கோரும் இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பின் உட்பிரிவிற்குக் கட்டணம் செலுத்திய விவரம். (சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின் பெயர்) போன்ற விவரங்கள் விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டும்.

 

 

குறித்த காலத்திற்குள் பட்டா தரப்படவில்லை என்றால்? குறிப்பிட்ட காலத்திற்குள் பட்டா தரப்படவில்லை என்றாலோ, அல்லது யாரேனும் லஞ்சம் கேட்டாலோ கோட்டாட்சியர் (RDO) மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யலாம். மேலும் தகவல் பெறும் உரிமம் சட்டம் மூலமும் நிவாரணம் தேடிக்கொள்ளலாம்.மிக முக்கியமாகத் தங்கள் விண்ணப்பத்தைத் தாலுகா அலுவலகத்தில் கொடுத்து ஒப்புதல் ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும்.

 

 

அல்லது தங்கள் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவுத்தபாலில், ஒப்புதல் அட்டை இணைத்து தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்விண்ணப்பத்தை நேரில் அளிக்கும் பட்சத்தில் ஒப்புதல் ரசீது வாங்கிக்கொள்வது அவசியம். குறித்த காலத்துக்குள் பட்டா வழங்கப்படவில்லை என்றால் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம்.

 

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS

 

No Comments

Sorry, the comment form is closed at this time.