Rajguru history

ராஜகுரு (Rajguru) வரலாறு

 

2016-10-07_15-39-21

 

 • சுதந்திரப் போராட்ட புரட்சி வீரரும் பகத்சிங், சுகதேவ் ஆகியோரின் நெருங்கிய தோழருமான ராஜகுரு (Rajguru) பிறந்த தினம் இன்று ஆகஸ்ட் 24 1908

 

 • மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தின் கேடா என்ற கிராமத்தில் பிறந்தவர் (1908). இவரது முழுப்பெயர் ஷிவ்ராம் ஹரி ராஜகுரு. சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். சத்ரபதி சிவாஜியும் திலகரும் இவரது ஆதர்ச நாயகர்கள்.

 

 • கல்வி கற்பதற்காக பனாரஸ் சென்றார். அங்கே வில் அம்பு, குஸ்தி, துப்பாக்கி சுடுதல் ஆகிய வற்றையும் கற்றார். 1919-ல் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையால் பிரிட்டிஷ் அரசு மீது வெறுப்புக் கொண்டார்.

 

 • இவரது அண்ணன் அரசாங்க வேலையில் இருந்ததால் இவரது நடவடிக்கைகளைக் கண்டித்தார். அதனால் தனது 16-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். சந்திரசேகர ஆசாத்தை சந்தித்த இவர், அவர் மூலமாக இந்துஸ்தான் சோஷலிச குடியரசு அமைப்பில் இணைந்தார். இவரை விரைவில் சிறந்த போர் வீரராக மாற்றினார் ஆசாத்.

 

 • புரட்சிப் படையில் இருந்த ஆப்த நண்பர்களான பகத்சிங், சுகதேவ் இருவரும் இவரையும் தங்களது நெருங்கிய நண்பராக ஏற்றனர். இந்த மூவரும் சந்திரசேகர ஆசாத் உள்ளிட்ட பலருடன் இணைந்து பல புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். லாலா லஜ்பத்ராயின் படுகொலைக்குப் பழிவாங்குவது என சபதமேற்றனர்.

 

 • அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரி சான்டர்சனைக் கொலை செய்யும் பொறுப்பு ராஜகுரு, பகத்சிங் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1928-ல் பகத்சிங்குடன் சேர்ந்து லாகூரில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். போலீஸார் நகர் முழுவதும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதே இயக்கத்தைச் சேர்ந்த புரட்சி வீராங்கனை துர்காவதி தேவியின் துணையுடன் இருவரும் தப்பிச் சென்றனர்.

 

 • வேறு ஒரு புரட்சித் திட்டத்தில் மற்ற இருவரும் கைது செய்யப்பட்டாலும் போலீஸாரிடம் பிடிபடாமல் இவர் தப்பி விட்டார். ஆசாத்தின் அறிவுரைப்படி மகாராஷ்டிரம் சென்று தலைமறைவாக இருந்தார். ஆனால் 1929-ல் புனேயில் ஒரு கவர்னரை கொல்ல முயற்சி செய்தபோது பிடிபட்டார். ஆசாத் இருக்கும் இடத்தைக் கூறுமாறு போலீசார் இவரை சித்ரவதை செய்தனர். ஆனால், இவரோ சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.

 

 • மற்ற வீரர்களுடன் இவரையும் லாகூர் சிறையில் அடைத்தனர். அப்போது இவர் மேல் லாகூர் சதி வழக்கும் சேர்த்து போடப்பட்டது. பெயரளவில் நடத்தப்பட்ட வழக்கின் முடிவில் இந்த மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

 

 • சிறையில் கைதிகள் மிருகத்தனமாக நடத்தப்படுவதை எதிர்த்து பகத்சிங்குடன் சேர்ந்து இவரும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். மக்கள் பொங்கி எழுந்தனர். நடுங்கிப்போன ஆங்கில அரசு இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றியது.

 

 • தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய சமயத்தில் மக்களின் ஆவேசத்தால் அச்சமுற்ற அரசு, குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய நாள் மாலையே யாருக்கும் தெரிவிக்காமல் அவசர அவசரமாக 1931-ம் ஆண்டு மார்ச் மாதம் மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது.

 

 • இவர்களது மரணத்தினால் தேசம் முழுவதும் எழும்பிய புரட்சிக்கனலைக் கண்டு பயந்த பிரிட்டிஷ் அரசு இவர்களது உடலுக்கு திருட்டுத்தனமாக எரியூட்டியது. ‘அஜேய க்ராந்திகாரி’ என்ற இவரது வாழ்க்கை வரலாறு இந்தி மொழியில் 2008-ல் நூலாக வெளிவந்தது

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.