எல்லாப் புகழும் ரியோவுக்கு

Deal Score0

 

 

ரியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இந்த நேரத்தில், பிரேசில் நாட்டைப் பற்றியும் ரியோ டி ஜெனிரோ நகரத்தைப் பற்றியும் இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்துகொள்வோமா?

 

ரியோ பெருமைகள்

 

 •  பிரேசில் தமிழகத்தைப் போல 65 மடங்கு பெரியது. மிக முக்கியமான வளரும் நாடு.

 

 •  தன்னுடைய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களைக் காட்டிலும் ரியோ மிகவும் அற்புதமானது’ என்று பரிணாமவியலின் தந்தை சார்லஸ் டார்வின் ரியோ டி ஜெனிரோ பற்றிக் கூறியுள்ளார்.

 

 •  ரியோவில் 90 கிலோ மீட்டர் நீளத்துக்குக் கடற்கரை இருக்கிறது. சார்லஸ் டார்வின் ரியோவைப் பற்றிக் கூறியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

 •  1815 முதல் 1821 வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்துள்ள ரியோ, போர்ச்சுகல் நாட்டுக்கும் தலைநகராக இருந்திருக்கிறது. போர்த்துகீசிய இளவரசர் ஆறாம் ஜான் தாய்நாட்டிலிருந்து தப்பி, தன் அதிகார வர்க்கத்தினருடன் ரியோவில் குடியேறியதே இதற்குக் காரணம்.

 

 •  பூமிப்பந்தின் மேற்பகுதியை வடக்கு அரைக்கோளம், கீழ்பகுதியை தெற்கு அரைக்கோளம் என்று பிரித்தால், தெற்கு அரைக்கோளத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் நகரம் ரியோதான்.

 

 •  ‘ரியோ கார்னிவல்’ எனப்படும் உலகப் புகழ்பெற்ற மாபெரும் கேளிக்கைத் திருவிழா, ஈஸ்டர் தவக்காலம் தொடங்குவதற்கு முன்பு மார்ச் மாதத்தில் ஆண்டுதோறும் ரியோவில் நடைபெறுகிறது.

 

 •  உலகின் மிகவும் பழமையான மின்சார டிராம் ரயிலான ‘சான்டா தெரசா டிராம்’ ரியோவில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

 •  புகழ்பெற்ற பிரேசில் நீலக்கிளிகளைப் பற்றிய ‘ரியோ’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கிய கார்லோஸ் சால்டானா, ரியோ நகரத்தைச் சேர்ந்தவர்தான். புகழ்பெற்ற ‘ஐஸ் ஏஜ்’ அனிமேஷன் படங்களின் மூன்று பாகங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

 

பிரேசிலும் விளையாட்டும்

 

 •  ஒலிம்பிக் போட்டிகள் தென்னமெரிக்கக் கண்டத்தில் நடைபெறுவது இதுவே முதன்முறை. ரியோவையும் சேர்த்து, பூமிப்பந்தின் கீழ் அரைக்கோளத்தில் (தெற்கு) உள்ள நகரங்கள் இதுவரை மூன்று ஒலிம்பிக் போட்டிகளை மட்டுமே நடத்தியுள்ளன. எஞ்சிய 25 ஒலிம்பிக் போட்டிகள் மேல் அரைக்கோளத்தில்தான் (வடக்கு) நடந்துள்ளன.

 

 •  கைப்பந்தாட்டம், படகு செலுத்தும் போட்டிகளில் பிரேசில் நாடு அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வென்றிருக்கிறது.

 

 •  இந்த முறை ஒலிம்பிக் தொடக்க விழாவும் நிறைவு விழாவும் நடைபெறும் இடம் ரியோவில் உள்ள மரகானா மைதானம். இங்கேதான் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளும் நடைபெற்றுள்ளன. 1950-ல் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்காக மரகானா மைதானம் கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் இரண்டு லட்சம் பேர் உட்கார முடியும்.

 

 •  பிரேசிலில் மற்ற விளையாட்டுகளைவிட கால்பந்து மிகமிகப் பிரபலம். இதுவரை ஐந்து கால்பந்து உலகக் கோப்பைகளை பிரேசில் வென்றுள்ளது. பிரேசிலின் மிகப் பிரபலமான கால்பந்து வீரர்கள் பீலே, ரொனால்டோ, ரொனால்டினோ. இப்போது நெய்மார்.
GOVERNMENT EXAM