ஓடி ஒளியும் வாழ்க்கை.. என்னதான் தீர்வு? ஒரு சாமான்யனின் ஆதங்கம்

Image result for ஓடி ஒளியும் வாழ்க்கை.. என்னதான் தீர்வு? ஒரு சாமான்யனின் ஆதங்கம்

 

  • வாசகர் ஒருவர் தான் அனுபவித்து வரும் வேதனையை, மனக்குமுறலாக கடிதம் மூலம் விகடனுக்கு எழுதி அனுப்பினார். அவருடைய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினோம். அலைபேசியில் அவர்

 

ஓடி ஒளியும் வாழ்க்கை!

 

  • “என் பெயர் தினேஷ்குமார், ஈரோடு. நான் பிஏசிஎல் நிறுவனத்தில் ஏஜென்ட் ஆக 2005-ல் சேர்ந்தேன். ஆரம்பத்தில் பிஏசிஎல் நிறுவனத்தின் செயல்பாடுகள் எல்லாம் நன்றாகவே இருந்தது. இதில் 2005 மற்றும் 2006ல் முதலீடுகளை மேற்கொண்டவர்கள் எல்லாம் 2011ல் 12 சதவிகித வட்டியுடன் முதிர்வுத் தொகையை பெற்றுக் கொண்டார்கள். முதிர்வுத் தொகை சரியாகக் கிடைக்கிறதே என்று பல பேர் இதில் சேர ஆரம்பித்தார்கள். ஆனால், 2013 ஜூன் மாதத்திற்குப் பிறகு முதிர்வுத் தொகையை பிஏசிஎல் நிறுவனம் யாருக்கும் திருப்பி செலுத்தவில்லை. ஏஜென்ட் ஆக இருந்த சமயத்தில் எனக்கு கீழும் 20க்கும் மேற்பட்டோரைச் சேர்த்தேன். இதன் ஒட்டுமொத்தத் தொகை 4 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும்.

Image result for ஓடி ஒளியும் வாழ்க்கை.. என்னதான் தீர்வு? ஒரு சாமான்யனின் ஆதங்கம்

  • இந்த நிலையில் முதிர்வுத் தொகை முடிந்தவுடன் ஒரு மாதம், இரண்டு மாதத்தில் பணம் திரும்பவந்துவிடும் என்று சொன்னீர்களே ஆனால் இன்னும் வரவில்லியே என என்னை நம்பி முதலீடுகளை மேற்கொண்டவர்கள் அடிக்கடி கேட்க ஆரம்பித்தனர். பல பேர் 6 மாதம், ஒரு வருடம் வரை பொறுத்தனர். அதன் பின்னர் பிஏசிஎல் நிறுவனத்தை நம்பியா பணத்தை முதலீடு செய்தோம்; உங்களை நம்பித்தானே பணத்தைப் போட்டோம்; எங்களுக்கு மருத்துவச் செலவு, கல்யாணச் செலவு, கல்விச் செலவு என ஏகப்பட்ட செலவு இருக்கிறது உடனடியாக எங்களுடைய பணத்தை திருப்பித் தாருங்கள் அல்லது வெளியிலாவது கடன் வாங்கிக் கொடுங்கள் எனப் பார்க்கும் இடமெல்லாம் பணத்தை கேட்டு நச்சரித்து டார்ச்சர் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது.

 

  • இதுபோன்ற தொடர் நச்சரிப்பு பிரச்சினையால் பிஏசிஎல் நிறுவனத்தில் ஏஜென்ட் ஆக இருந்த எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பெண்மணி தற்கொலை முயற்சியை மேற்கொண்டார்; இறுதியில் எப்படியோ அவரைப் போராடி காப்பாற்றிவிட்டார்கள். பணத்தை முதலீடு செய்தவர்கள் தினம் தினம் ஏஜென்ட்களுக்கு தொடர்ந்து தொல்லை தருவதால், பல ஏஜென்ட்கள் மெயின் ரோட்டில் செல்லாமல் குறுக்கு வழியில் சென்று வருகின்றனர். பகலில் வெளியில் செல்ல முடியவில்லை; பெரும்பாலும் இரவில் மட்டுமே வெளியில் சென்று வருகிறோம். இந்த ஓடி ஓளியும் வாழ்க்கை எப்பொழுது மறையும்? பிஏசில் நிறுவனத்திடம் இருந்து முதலீட்டாளர்களுக்கு எப்போது பணம் திரும்பக் கிடைக்கும்?” என்று தனது மனக்குமுறலை தினேஷ்குமார் வெளிப்படுத்தினார்.

 

என்னதான் தீர்வு?

தமிழகத்தில் தினேஷ்குமார் மட்டுமில்லை பிஏசில் நிறுவனத்திடம் இருந்து நூற்றுக்கணக்கான ஏஜென்ட்களும், லட்சக்கணக்கான முதலீட்டாளர்களும் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு என்னதான் தீர்வு என்பது குறித்து வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷிடம் கேட்டோம். அவர் இது குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
Image result for ஓடி ஒளியும் வாழ்க்கை.. என்னதான் தீர்வு? ஒரு சாமான்யனின் ஆதங்கம்

  • “இந்த நிதி நிறுவனத்தில் முகவராக (Agent) மட்டும் இருந்தால் இவருக்கு நிதி நிறுவனம் செய்யும் குற்ற நடவடிக்கைக்கு இவர் பொறுப்பு அல்ல. ஆனால், இவருக்கு இந்த நிதி நிறுவனம் ஏமாற்றுவது தெரிந்தோ, குற்ற மனதுடன் (mensria) ஏமாற்றும் எண்ணத்துடன் முதலீட்டார்களை சேர்த்து இருந்தால் கூட்டு சதி செய்து ஏமாற்றி இருந்தால் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அது போல இல்லை என்றால் இவர் பொறுப்பு ஏற்க வேண்டியதில்லை.

 

  • இந்த நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் காவல்துறையில் புகார் அளித்து இருந்தால் காவல்துறை (Economic offence wing) பொருளாதார குற்ற பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நிதி நிறுவனத்தின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்வார்கள். சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் இந்த வழக்கை விசாரிக்க TNPID (TamilNadu protection of interests of Depositors Act, 1997, சட்டத்தைத் தமிழக அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. இந்த நீதிமன்றங்கள் நிதி நிறுவன சொத்துக்கள் போன்றவை விற்று முதலீட்டார்களுக்கு அவர்களுடைய முதலீட்டுத் தொகை திரும்ப அளிக்கும். இந்த சட்ட நடவடிக்கை காலதாமதம் ஆக வாய்ப்பு உண்டு” என்றார்.

 

ஆவணங்கள் பத்திரம்!

 

  • கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை 12% வட்டி என ஆசை வார்த்தைக் கூறி, நாடு முழுவதும் உள்ள 5.5 கோடி சிறுமுதலீட்டாளர்களிடம் 45,000 கோடி ரூபாயை பிஏசிஎல் நிறுவனம் முறைகேடாகத் திரட்டியது. இந்திய நிதித் துறையில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இது. நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கு இன்னும் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது தெரியாது என்கின்றனர்.

 

  • இனிமேலாவது சிறு முதலீட்டாளர்கௐள் ஆசை வார்த்தைகளை நம்பாமல் நேர்மையான வழியில் முதலீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுங்கள். பிஏசிஎல் திட்டத்தில் முதலீட்டை மேற்கொண்டவர்கள் தங்களுடைய முதலீட்டுக்கான ஆவணங்களைக் கட்டாயம் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். தினந்தோறும் செய்வதறியாமல் முழிக்கும் தினேஷ்குமார் போன்றவர்களுக்கு இறுதியாக நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை பொறுமையுடன் காத்திருப்பதைத் தவிர இதற்கு வேறு வழியில்லை.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.