வங்கித் தேர்விலும் வட இந்தியர்கள் ஆதிக்கம்! -தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட மற்றொரு அநீதி

  • ‘ பாரத ஸ்டேட் வங்கி நடத்தும் ஜூனியர் அசோசியேட் தேர்வில் தமிழகத்தை முற்றிலும் வஞ்சித்துவிட்டனர்’ எனக் கொதிக்கின்றனர் தேர்வர்கள். ‘ தமிழ்நாட்டுப் பிரிவில் வட இந்தியர்களே அதிகம் தேர்வாகியுள்ளனர்’ எனவும் வேதனைப்படுகின்றனர்.

 

  • இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கிளார்க் மற்றும் அதிகாரி பணியிடங்களில் சேருவதற்கு ஐ.பி.பி.எஸ் நடத்தும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஆனால், பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும், தன்னிச்சையாகவே கிளார்க் உள்ளிட்ட சிறப்பு அதிகாரிகளைத் தேர்வு செய்ய போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு கிளார்க் அந்தஸ்தில் (ஜூனியர் அசோசியேட்) உள்ள 17,400 காலி பணியிடங்களை நிரப்புகிறது பாரத ஸ்டேட் வங்கி. இதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரலில் வெளியானது. இதில், தமிழ்நாட்டுக்கு மட்டும் 1,420 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.

 

 

  • “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தன. இதற்கடுத்து, ஆந்திராவில் 1,385 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1,200 இடங்களும் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. நமக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதால், மகிழ்ந்து போய் விண்ணப்பித்தோம். இதில், முதல்கட்டத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கும் மெயின் தேர்வு எனப்படும் இரண்டாம் கட்டத் தேர்வில் 200 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டன. இவற்றில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு நேர்முகத் தேர்வும் நடந்தது. ஆனால், தமிழ்நாட்டு பிரிவுக்கு வட இந்தியா மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னால் மிகப் பெரிய சதிவேலை நடந்திருக்கிறது” என வேதனையோடு தொடங்கினார் வங்கித் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர்.

 

  • “கிளார்க் தேர்வு தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கி தொடர்பாக வெளியிட்ட முதல் அறிக்கையில், ‘ தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் தேர்வு எழுதலாம்’ எனத் தெரிவித்திருந்தனர். அதேபோல், ‘ பாண்டிச்சேரியிலும் தமிழில் எழுதலாம்’ என அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியான இருபது நாட்களுக்குப் பிறகு, பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து மற்றொரு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுதலாம்’ என தெரிவித்திருந்தனர். இது அப்பட்டமான மோசடி. ஆங்கிலம் என்றொரு பிரிவு வகைப்படுத்தப்பட்டதால், டெல்லி, கேரளா உள்பட பிற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாடு பிரிவில் தேர்வு எழுத விண்ணப்பித்துவிட்டனர். ஏனென்றால், காலிப் பணியிடத்தில் தமிழ்நாட்டில்தான் அதிக இடங்கள் வருகின்றன. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எழுதும்போது 95 சதவீத இடங்களில் அவர்களே வெற்றி பெறவும் வாய்ப்பு அதிகம். இதனை எதிர்த்து குரல் கொடுக்க யாரும் வரவில்லை. தற்போது வெளியான ஸ்டேட் வங்கித் தேர்வு முடிவில், கேரளா மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கமே தமிழ்நாட்டுப் பிரிவில் அரங்கேறியுள்ளது. நமக்கு எதிராக, மத்திய அரசின் துரோகங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. டெல்லியில் தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாக 50 எம்.பி.க்கள் இருந்தும் என்ன பயன்?” எனக் கொந்தளிப்போடு பேசி முடித்தார்.

 

  • திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம். ” ஸ்டேட் வங்கித் தேர்வு அறிவிப்பு, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக கருதப்பட்டது. மற்ற மாநிலங்களைவிடவும், தமிழ்நாட்டுப் பிரிவில் ஏராளமான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டன. கேரளாவில் உள்ளவர்கள் மலையாளத்தில் எழுதலாம் என்ற முடிவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் ஆங்கிலம் என்றொரு பிரிவை கூடுதலாக சேர்ப்பதன் மூலம், அதிகப்படியான வட இந்தியர்களைத் திணிக்கும் முயற்சியில் வங்கி நிர்வாகம் செயல்பட்டது என்றே கருத வேண்டியுள்ளது. திட்டமிட்டே இப்படியொரு செயலை வங்கி நிர்வாகம் அரங்கேற்றியுள்ளது. வங்கிப் பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கக் காரணமே, கிராமப்புற சேவைகளில் அந்தந்த மாநில மொழி பேசுபவர்கள் இருந்தால், மக்களுக்குச் சேவை எளிதாகச் சென்று சேரும் என்பதற்காகத்தான்.

 

  • இப்போது அந்தப் பணிகளில் வடஇந்தியர்கள் அமர்வது என்பது நமக்குக் கொடுக்கப்படும் தண்டனையாகத்தான் பார்க்கிறோம். இந்த நடைமுறை மூலம், உத்தரப்பிரதேசத்தில் உள்ளவர்களும் கேரளத்தவர்களும் தமிழ்நாட்டுக்கு வந்து தேர்வு எழுதுகின்றனர். ஆனால், நாம் அங்கு சென்று தேர்வு எழுத முடியாது. இது அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள சம உரிமைக்கு எதிரானது. இதைப் பார்க்கும் தமிழக மாணவர்கள் என்ன மாதிரியான மனநிலைக்கு இட்டுச் செல்வார்கள் என்பதைப் பற்றி அரசுகள் அக்கறைப்படவில்லை. எனவே, வங்கி நிர்வாகத்தின் நடைமுறைக்கு எதிராக அறவழியிலும் சட்டரீதியாகவும் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறோம்” என்றார் ஆதங்கத்துடன்.

 

  • மாகாணங்களின் நலனுக்காக மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக, ‘தமிழ்நாடு 60’ என்ற பெயரில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழகத்தின் அடிப்படை உரிமைகளை நசுக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

 

MAANAVAN PEDIA STATE AND GOVERNMENT PLANNING WORLDS AWARDS AND REWARDS MAANAVAN ARTICLE EXAM TIPS AUDIO CURRENT AFFAIRS TAMIL VIDEOS MATHS VIDEOS ONLINE TEST DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS GOVERNMENT EXAM
No Comments

Sorry, the comment form is closed at this time.