நியூசிலாந்து நிலநடுக்கத்துக்கும், சூப்பர் நிலாவுக்கும் என்ன சம்பந்தம்?

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நியூசிலாந்து நிலநடுக்கத்துக்கும், சூப்பர் நிலாவுக்கும் என்ன சம்பந்தம்?

  • பரந்துவிரிந்த வான்வெளி, எப்போதும் அதிசயங்களால் நிறைந்திருக்கும். சூரியக் குடும்பத்திலும் பல அறிய நிகழ்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவை எதுவுமே நமது கண்களுக்குப் புலப்படாத காரணத்தால் அவற்றை நம்மால் பார்த்து ரசிக்க முடியவில்லை. அந்த வகையில், சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியின் துணைக்கோளான நிலா, இன்று ஓர் அதிசயத்தை நிகழ்த்தப்போகிறது. இதில் என்ன ஓர் ஆச்சர்யம் என்றால், இந்த அதிசயத்தை நாம் அனைவரும் கண்டு ரசிக்கலாம். அதாவது, ‘சூப்பர் மூன்’ எனப்படும் மிகப்பெரிய நிலவானது, பெளர்ணமி தினமான இன்று பூமிக்கு அருகில் வரும். இந்த ‘சூப்பர் மூன்’ நிகழ்வானது 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். இது, இந்தத் தலைமுறையினர் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

‘சூப்பர் மூன்!

 

  • நிலவானது, பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. பூமி மற்றும் நிலவு ஆகியவை முறையே அதனதன் நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன. இந்த நீள்வட்டப் பாதையின் அதிக மற்றும் குறைவான தூரம் காரணமாக… நிலவு, வழக்கத்துக்கு மாறாக நெருங்கிவரும். அப்போது, அதன் ஒளி மற்றும் உருவம் நமக்குப் பிரகாசமாகவும், மேலும் பெரிய அளவாகவும் தோற்றமளிக்கும். அதாவது, இந்த சூப்பர் மூன் 14 சதவிகிதம் பெரியதாகவும், 30 சதவிகிதம் பிரகாசமாகவும் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

 

 

‘சூப்பர் மூன்’ எப்படி உருவாகிறது

  • சமச்சீரான நீள்வட்டப் பாதையில் நிலா, பூமியைச் சுற்றிவருகிறது என நாம் நினைத்தால்… உண்மையிலேயே அது தவறு. உண்மையில், நிலவின் நீள்வட்டப் பாதையின் ஒரு பக்க தூரம் அதிகமாகவும், மற்றொரு பக்க தூரம் குறைவாகவும் இருக்கும். இதற்கு ‘Apogee’ மற்றும் ‘Perigee’ என்று பெயர். அதாவது, Perigee என்பது மற்ற பக்கங்களைவிட 31,000 மைல்கள் குறைவாகும். Apogee என்பது மையப்புள்ளியிலிருந்து நீண்ட தூரமாகும். நிலவு, தன் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்போது Perigee நிலையை அடைகிறது. இந்த நிலையை அடையும்போது, பூமிக்கு மிக அருகில் வருகிறது. இதனால் நிலவு நமக்கு மற்ற நாட்களைவிட பெரியதாகவும், அதிக வெளிச்சமாகவும் இருக்கும். இதன் காரணமாக நிலவு, சிவப்பு நிறத்தில் பிரகாசமாக இருக்கும்.

‘சூப்பர் மூன்’ கருத்து வேறுபாடு!

  • பொதுவாக நிலவின் ஈர்ப்புச் சக்தியால்தான் கடலில் அலைகள் தோன்றுகின்றன. மேலும், நிலா பெரிதாக தெரியும் நேரத்தில்… கடலில், அலைகள் பெரிதாவதையும் சீற்றமாக இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். இதைத்தான் பிரபல வானவியலாளர் ரிச்சர்ட் நோலி, ‘‘நிலா, பூமியின் அருகில் வந்தால்… இயற்கையில் திடீரென மாற்றங்களும், சில அபாய நிகழ்வுகளும் ஏற்படும்’’ என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், இதைப் பெரும்பாலான விஞ்ஞானிகள் ஏற்கவில்லை

 

  • இதை அடிப்படையாகக் கொண்ட சில வருடங்களில் நிலா, பூமிக்கு அருகில் வந்தபோது சில மாற்றங்கள் ஏற்பட்டன. கடந்த 1995-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நிலா, பூமிக்கு அருகாமையில்
    இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் 2005-ல் நிலவு, பூமிக்கு அருகாமையில் வருவதற்கு முதல் மாதம்… அதாவது, 2004 டிசம்பரில்தான் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டது. ‘கேட்ரினா’ புயலும் இந்த நிகழ்வால் ஏற்பட்டதுதான் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. மேலும், நேற்று நியூஸிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதற்கும், சுனாமி அறிவிப்பு விடப்பட்டதற்கும் இந்த சூப்பர் மூன்தான் காரணம் என்று சில விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

  • ‘‘பொதுவாக சந்திரனின் ஈர்ப்புச் சக்தியால்… கடலில், அலைகள் வேண்டுமானால் சிறிது அளவு உயரத்தில் எழும்பலாம். ஆனால், பூமியின் தன்மையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, இயற்கை அழிவை உண்டாக்கும் அளவுக்கு நிலவின் ஈர்ப்பு விசை நம்மை நெருங்காது. எனவே, இந்த சூப்பர் மூனை அனைவரும் பார்த்து ரசியுங்கள்’’ என்கின்றனர் வேறு சில விஞ்ஞானிகள்.