Nandakumar IRS

நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் – “The Real State Rank Holder”

  • “5 வயசுக்குள்ள பல நோய்களால் உடம்பு நோய்க் கூடாரமா ஆயிடுச்சு. அதனால எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போச்சு; எப்பவும் சோர்வாகவே இருக்கும்; படிச்சா மனசுல தங்காது; டீச்சர் சொல்றதை புரிஞ்சுக்க முடியாது; புரிஞ்சுக்கிட்ட விஷயத்தை சரியா வெளிப்படுத்தவும் முடியாது; போர்டுல எழுதிப் போடுறதை எழுத முடியாது; அப்படியே எழுதினாலும் தப்புத் தப்பா எழுதுவேன். இதுக்கெல்லாம் காரணம் ‘டிஸ்லெக்ஸியா’ என்று சொல்லப்படுற ‘கற்றல் குறைபாடு’ தான்ன்னு சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்ணும் போது தான் தெரிய வந்துச்சு.

 

nandakumar irs3

 

  • ஒரு வழியா 8-ம் வகுப்பு வரைக்கும் வந்துட்டேன். அதுக்கு மேல என்னைச் சிரமப்படுத்த அப்பா விரும்பல. படிப்பு தான் வரல.. லாட்டரிச்சீட்டு வியாபாரம் பண்ணியாவது பொழச்சுக்கோன்னு ஆவடியில இருந்த கடையில உட்கார வச்சுட்டார். தெருக்கள்ல போய் விப்பேன். கடையையும் பாத்துக்குவேன். தீடீர்னு லாட்டரிச் சீட்டை தடை பண்ணிட்டாங்க. கடையை மூடிட்டு சித்தாள் வேலைக்கு போனேன். என் உடல்வாகுக்கு செங்கல்லும், மண்ணும் சுமக்க முடியலே. ஜெராக்ஸ் கடைக்குப் போனேன். அதுவும் சரியா வரல. அப்புறம் சவுண்ட் சர்வீஸ், டி.வி. மெக்கானிக் சென்டர் என வாழ்க்கையில ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க அலையா அலைஞ்சேன்.

 

  • கடைசியா மெக்கானிக் ஷாப். அங்கே வேலை செஞ்சிக்கிட்டே +2க்குப் அப்ளை பண்ணினேன். அந்த வருஷம் எக்கானமிக்ஸ் சிலபஸ் மாறிடுச்சு. அது தெரியாம பழைய புக்கையே படிச்சதால அந்தப் பாடத்தில் பெயிலாகி, அட்டெம்ட்ல பாஸ் பண்ணினேன். ஆனா தனித்தேர்வரா எழுதினதால எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கல. கடைசியில வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் B.A English சேர்ந்தேன்.

 

  • கல்லூரியில் சேர்ந்த ஒரே வாரத்தில் என்னுடைய ஆங்கில அறிவைப் பார்த்து மிரண்டு போன பேராசிரியர்கள் நீயெல்லாம் படிச்சு பாஸ் பண்ண முடியாது…ஒர்க்ஷாப்புக்கு போய் ஒழுங்கா தொழிலைக் கத்துக்கோ என்று அறிவுரை சொன்னார்கள். போகப் போக சரி பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு, தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். முதல் செம்-ல அம்மை நோய் அடுத்த செம்-ல ஒரு பெரிய விபத்து இப்படி பல தடைகளை தாண்டி இறுதியா என் பேட்சுல அரியர் இல்லாம டிகிரி வாங்கின ஒரே ஆள் நான் மட்டும் தான். பி.ஏ-வுக்கு முடிச்சதும் எம்.ஏ-வுக்கு நிறைய கல்லுரியில் அப்ளை பண்ணினேன். மாநிலக் கல்லூரியில் ‘வராண்டா அட்மிஷன்’ கிடைச்சது. வராண்டா அட்மிஷன்னா போனாப் போகுதுன்னு கொடுக்கிறது. அங்கு தான் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.

 

  • TNPSC, UPSC தேர்வுகளை எல்லாம் அறிமுகம் செய்தார்கள். எல்லாரும் தீவிரமா பிரிப்பேர் பண்ணினோம். ஆனா அவங்க வேகத்துக்கு படிக்க முடியலே. ஆனாலும் ஆர்மில செகண்ட் லெப்டினென்ட் வேலைக்கு தேர்வானேன். ஆனா பயிற்சிக்குப் போறதுக்கு முன்னாடி திரும்பவும் பெரிய விபத்து. 54 கிலோவாக இருந்த எடை 38 கிலோவாயிடுச்சு. டாக்டர்கள் கை விட்டுட்டாங்க. ஆனா நான் மனம் தளரலே. அதிலிருந்து மீண்டு வந்தேன். ஆனா, வேலை கைவிட்டுப் போயிடுச்சு.

 

  • பின்பு TNPSC குரூப் 2 எழுதி பாஸ் பண்ணினேன். A.S.O-வாக வேலை கிடைச்சுச்சு. அடுத்து குரூப் 1 தேர்வு எழுதினேன்…வெற்றி! கூட்டுறவு துறையில் துணைப் பதிவாளராக 3 வருஷம் வேலை செஞ்சேன். D.C ரேங்க் வர்ற நேரம், UPSC பாஸ் பண்ணிட்டேன். I.P.S கிடைச்சுச்சு. ஆனா எனக்கு தமிழ்நாடு கேடர் கிடைக்கல. அதனால I.R.S-ல சேர்ந்துட்டேன்…” என சிலிர்க்க வைக்கிறார் இந்திய வருமான வரித்துறையின் இணை ஆணையர் நந்தகுமார்.

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS GOVERNMENT EXAM
No Comments

Sorry, the comment form is closed at this time.