கோலாகலமாகத் தொடங்குகிறது ஒலிம்பிக் திருவிழா - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

கோலாகலமாகத் தொடங்குகிறது ஒலிம்பிக் திருவிழா

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

olympic1

 

 • உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 31-ஆவது ஒலிம்பிக் போட்டி இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு (பிரேசில் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8 மணி) தொடங்குகிறது.

 

 • பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறுவதால் இந்தப் போட்டி ரியோ ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டி 21-ஆம் தேதி நிறைவடைகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். அதில் ஓர் அணி அகதிகள் அடங்கிய அணியாகும். 28 விளையாட்டுகளில் 306 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகள் 34 மைதானங்களில் நடத்தப்படுகின்றன.

 

தொடக்க விழா:

 

 • ரியோ டி ஜெனீரோவில் உள்ள புகழ்பெற்ற கால்பந்து மைதானமான மரக்காணா மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. இங்கு 75 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை ரசிக்கலாம். 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெறவுள்ள தொடக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் கொடி ஏற்றப்படும்.

 

 • அதன்பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெறும். ஒலிம்பிக்கின் பிறப்பிடம் கிரேக்கம் என்பதால் அந்நாட்டினர் முதல்வரிசையில் கொடியேந்திச் செல்வார்கள். அதைத் தொடர்ந்து மற்ற நாட்டினர் அணிவகுக்க, கடைசியாக போட்டியை நடத்தும் பிரேசில் வீரர், வீராங்கனைகள் அணிவகுத்துச் செல்வார்கள்.

 

 • பிரேசிலின் பிரபல பாப் பாடகர்களான அனிட்டா, கேட்டனோ வெலாஸ்கோ, கில்பெர்ட்டோ கில் ஆகியோர் தங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளால் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர். இதேபோல் பிரேசிலின் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையிலான கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. தொடக்க விழாவில் 4800 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். தொடக்க விழாவின் இறுதியாக இரவைப் பகலாக்கும் வாணவேடிக்கைகள் ரியோ டி ஜெனீரோவை அதிர வைக்கவுள்ளது.

 

தடைகளைத் தாண்டி…

 

 • பிரேசிலில் மலிந்து கிடக்கும் ஊழல், கடுமையான பொருளாதார நெருக்கடி, பெரும் போராட்டங்கள், ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி இந்த ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

 

பலத்த பாதுகாப்பு:

 

 • ஒலிம்பிக் போட்டிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கிறது. இதுதவிர ரியோ டி ஜெனீரோ, அதிக அளவில் குற்றங்கள் நடக்கக்கூடிய ஒரு நகரமாகும். அங்குள்ள ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் ஆஸ்திரேலியா, டென்மார்க், சீன அணிகளின் உடைமைகள் ஏற்கெனவே திருடு போயுள்ளன. இதனால் போட்டியின்போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 85 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

முதலிடத்தைப் பிடிப்பது யார்?

 

 • பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதற்கு வழக்கம்போல் இந்த முறையும் அமெரிக்கா, சீனா இடையேதான் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ரஷிய தடகள வீரர்கள் ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்டுள்ளதோடு, அந்நாட்டைச் சேர்ந்த மேலும் சில விளையாட்டு வீரர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டன் பெரிய சவாலின்றி 3-ஆவது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 • அமெரிக்கா 554 பேரை களமிறக்கியுள்ளது. இதில் 292 பேர் வீராங்கனைகள். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் அதிக வீராங்கனைகளை களமிறக்கிய அணி என்ற பெருமை அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது. சீனா 413 பேரையும், பிரிட்டன் 366 பேரையும், போட்டியை நடத்தும் பிரேசில் 465 பேரையும் களமிறக்கியுள்ளன.

 

ஒலிம்பிக் ஜோதி ஏற்றுகிறார் பீலே?

 

 • தொடக்க விழாவில் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் எப்போதுமே ஜோதி ஏற்றுபவர் யார் என்பது ரகசியமாகவே வைக்கப்படும். ஆனால் இந்த முறை பீலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது வெளியே கசிந்தது.

 

 • எனது பெயரை பயன்படுத்துவதற்கான உரிமம் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருப்பதால் அந்த நிறுவனத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே என்னால் ஜோதியை ஏற்ற முடியும் என பீலே தெரிவித்திருந்தார். எனினும் அந்த நிறுவனத்திடம் அனுமதி பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிகிறது. இதனால் பீலே நிச்சயம் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அணிவகுப்பில் இந்தியாவுக்கு 95 – ஆவது இடம்

 

 • தொடக்க விழாவில் இந்திய அணியினர் அணிவகுக்கும்போது துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான பிந்த்ரா, பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் போட்டி இதுவாகும்.

 

 • மொத்தம் 206 நாடுகள் அணிவகுக்க உள்ள இந்நிகழ்ச்சியில், இந்தியாவுக்கு 95-ஆவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை 6.07 மணிக்கு இந்தியாவின் அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்தியாவுக்கு முன்பாக யேமனும் (94-ஆவது), இந்தியாவைத் தொடர்ந்து இந்தோனேசியாவும் (96-ஆவது) அணிவகுக்க உள்ளன.

 

 • வில்வித்தை பிரிவில் தரவரிசைக்கான போட்டிகள் சனிக்கிழமை தொடங்க உள்ளதால், இந்திய வில்வித்தை அணி, ஒலிம்பிக் போட்டியின் அணிவகுப்பில் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.