கவிதை இலக்கியம்

Review Score0

2016-04-01_16-19-54

மரபுக் கவிதை

  • ஆசிரியப்பா, வெண்பா என்னும் பா வகைகளும், ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் என்னும் பாவினங்களும் மட்டுமே இன்றைய நிலையில் மரபுக் கவிதை வகையில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. பா வகைகள் சீர், தளை பிறழாதன; பாவின வகைகள் குறிப்பிட்ட வாய்பாடுகளில் அமையும் நான்கு அடிகளை உடையன.
  • நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகவும் தொன்மையானதாக விளங்குவது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். இந்நூல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப் பெறுகின்றது. இதற்கும் முந்தையனவாக இலக்கண நூல்கள் இருந்திருக்கின்றன. அவ்விலக்கண நூல்கள் ‘எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுவது போல’ இலக்கியத்திலிருந்து இலக்கண நூல்கள் ஏற்படுகின்றன என்னும் விதிக்கு இணங்க, தமக்கு முற்பட்ட இலக்கியங்களைக் கொண்டு இலக்கணம் வகுத்தனவாகும். இலக்கண நூல்களில் செய்யுள் தொடர்பான எழுத்து, சொல், அகம்-புறம் என்னும் பாடுபொருள் குறித்த செய்திகள், யாப்பு, அணி ஆகியன பற்றிய வரையறைகள் இடம் பெற்றிருக்கும். எனவே இவற்றைக் கருதிப் பார்க்கும்போது, செய்யுள் என்னும் கவிதை வடிவம் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுக்காலத் தொன்மையுடையது என உறுதிபடக் கூறலாம்.
  • வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகியன குறித்த இலக்கணங்களைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. இறையனார் களவியல் உரையில் மறைந்து போன சங்க நூல்களின் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை ஆகிய தலைச் சங்க நூல்களும், கலி, குருகு, வியாழமாலையகவல், வெண்டாளி ஆகிய இடைச் சங்க நூல்களும் அவ்வகை நூல்களுள் அடங்கும். சிற்றிசை, பேரிசை என்பன கடைச்சங்கத்தில் இருந்து மறைந்தவற்றுள் அடங்கும். ‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என மயிலை சீனிவேங்கடசாமி, இவ்வகை நூல்கள் குறித்துத் தனியொரு நூலே எழுதியுள்ளார். அவற்றின்வழி மரபுக்கவிதையின் தொன்மையை நன்கு அறியலாம்.

 

Click Here To Get More Details