Rules of Origin Regulations

நீதிக்கட்சியின் தோற்றம் மற்றும் ஆட்சி

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நீதிக்கட்சியின் தோற்றம் மற்றும் ஆட்சி

நீதிக்கட்சியின் தோற்றம் மற்றும் ஆட்சி, சாதனைகள் – Notes for TNPSC group 1 preliminary and Mains

 

1.( நீதிக்கட்சி தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது )

 

தென்னிந்திய நல உரிமைகள் சங்கம்

 • தமிழ்நாட்டில், பிராமணர் அல்லாதவர்களின் நலனுக்காக ஒரு இயக்கத்தைத் தொடங்க வேண்டு மென்று, வெள்ளுடை வேந்தர் “வெள்ளுடை வேந்தர்” சர்.பிட்டி தியாகராயர்திட்டமிட்டார். அதற்காக, பிராமணர் அல்லாதவர்களின் மாநாட்டை 1916ஆண்டு நவம்பர் 20-ந் தேதி சென்னையில் கூட்டினார். ஏற்கனவே, திராவிடர் சங்கம் என்ற பெயரில் பிராமணர் அல்லாதவர்களின் முன்னேற்றத்துக்காக ஒரு அமைப்பை நடத்தி வந்த டாக்டர். சி. நடேசனும், காங்கிரஸிலிருந்து ஒதுங்கியிருந்த டி.எம். நாயரும் இந்த மாநாட்டைக் கூட்டுவதில் முக்கியப் பங்கெடுத்துக் கொண்டனர்.

 

 • இந்த மாநாட்டில், தென்னிந்திய நல உரிமைச்சங்கம்” என்ற கட்சியைத் தொடங்குவதென்று தீர்மானிக்கப்பட்டது.கட்சியின் கொள்கைகளைப் பிரசாரம் செய்வதற்காக திராவிடன் (தமிழ்), ஜஸ்டிஸ் (ஆங்கிலம்), ஆந்திர பிரகாசினி (தெலுங்கு) ஆகிய பத்திரிகைகளைத் தொடங்க முடிவு செய்யப்பபட்டது. மூன்று பத்திரிகைகளும், நாளிதழ்களாக வெளிவரத் தொடங்கின. இதில் ஜஸ்டிஸ்” என்ற இதழ் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தது.அதன் காரணமாகக் கட்சியின் பெயரே, ஜஸ்டிஸ் கட்சி என்று பிறகு மாறியது. தமிழில் நீதிக் கட்சி என்று அழைத்தார்கள். நீதிக் கட்சி தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே, ஆதரவு பெருகியது.

 

மாண்டேகு வருகை

 • முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுக் காலம் நடந்தது. இப்போரில், பிரிட் டனுக்கு ஆதரவாக இந்தியர்கள் பெரும் அளவில் ராணுவத்தில் சேர்ந்து, யுத்தத்தில் அரும் பணியாற்றினர்.அதன் காரணமாக, இந்தியர் களுக்குச் சில அதிகாரங்களை வழங்கலாம் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் எண்ணியது. இது பற்றிப் பேச்சு நடத்த பிரிட்டிஷ் அரசாங்கத்தில் இந்திய விவகார மந்திரியாக இருந்த மாண்டேகு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். அவரும், இந்தியாவில் வைஸ்ராயாக இருந்த செம்ஸ் போர்டும், பல்வேறு இடங்களுக்கு சென்று, இந்தியப் பிரமுகர்களின் கருத்தை அறிந்தனர். இந்த இருவரும், 1917-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ந் தேதிசென்னை வந்தனர். அவர்களைநீதிக்கட்சி சார்பில் திவான் பகதுர பிராஜரத்தினமுதலியார் தலைமையில்ஒரு குழுவினர் சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை எடுத்துக் கூறினர்.

 

 • இந்தக் குழுவில், டாக்டர் டி.எம். நாயர், சர். பி. தியாகராயர் ஆகி யோரும் இடம் பெற்றிருந்தனர்.இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, மாண்டேகு லண்டன் சென்றார்.இதன் பிறகு இங்கிலாந்து அரசின் அழைப்பின் பேரில் நீதிக் கட்சித் தலைவர்கள் சர்.ஏ. ராமசாமி முதலியார், சர்கேசி. ரெட்டி நாயுடு, டாக்டர்.டி.எம். நாயர் ஆகியோர் லண்டன் சென்றனர். இதே போல், பாலகங்காதர திலகர் தலைமையில் காங்கிரஸ் தலைவர்களும் லண்டனுக்குச் சென்றனர்.வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற இணைக்குழுவிடம் நீதிக்கட்சித்தலைவர்கள் வற்புறுத்தினார்கள். இதை, காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தார்கள். முடிவில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காக, சட்ட சபையில் சில இடங்களை ஒதுக்க பிரிட்டிஷ் அரசு ஒப்புக்கொண்டது.(லண்டனுக்குச் சென்றிருந்த டாக்டர்.டி.எம். நாயர், தமது 51வது வயதில் லண்டனிலேயே 1771919-ல் மரணம் அடைந்தார். அவர் உடல் லண்டனிலேயே தகனம் செய்யப் பட்டது.

 

இரட்டை ஆட்சி

 • மாண்டேகு கொடுத்த இந்த அறிக்கையை பிரிட்டிஷ் பாரளு மன்றம் ஏற்றுக் கொண்டு சட்டம் ஆக்கியது. 1919-ம் வருடத்திய சட்டம்” என்று அழைக்கப்பட்டஇந்தச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாவன

 

 • இந்தியாவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மந்திரி சபையினை அமைத்து, ஆட்சி நடத்துவார்கள்.

 

 • மந்திரிசபைக்கு மேலாக, உயரதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று இருக்கும். சட்டசபையோ, மந்திரிசபையோ இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது.கல்வி, சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி மன்ற நிர்வாகம் ஆகிய பொறுப்புகள் மந்திரிசபையிடம் இருக்கும். சட்டம், நீதி வருவாய்த் துறை, சட்டம்-ஒழுங்கு பராமரித்தல்ஆகிய பொறுப்புகள், உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவிடம் இருக்கும். இவை தான் 1919-ம் வருடத்திய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்.

 

 • இந்த இரட்டை ஆட்சி முறைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. தேர்தலில் கலந்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்தது.

 

முதல் தேர்தல்

 • 1919-ம் ஆண்டு நவம்பர் 30-ந் தேதி, தமிழ்நாட்டுடன் ஆந்திராவும் இணைந்திருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் முதலாவது தேர்தல் நடந்தது. அதில் நீதிக்கட்சி போட்டியிட்டது. காங்கிரஸ் போட்டியிடவில்லை. என்றாலும், காங்கிரசின் உள்பிரிவாகச் செயல்பட்ட அன்னிபெசண்ட் அம்மையாரின் ‘ஹோம் ரூல் இயக்கம் போட்டியிட்டது.இந்தத் தேர்தலில், மொத்தம் உள்ள 98 இடங்களில் 63 இடங்களில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

 

 • மந்திரிசபை அமைக்குமாறு, நீதிக்கட்சியின் தலைவர் சர்.பி. தியாகராயரை அன்றைய சென்னை மாகாண கவர்னர் வெல்லிங்டன் பிரபு அழைத்தார்.”என்னைவிடச் சிறந்தவர்கள் எத்தனையோ பேர் என் கட்சியில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார் எனக்கு மந்திரி பதவி வேண்டாம்” என்றுமறுத்துவிட்டார், தியாகராயர்,
  எனவே, திவான்பகதூர் சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் மந்திரிசபை அமைக்கப்பட்டது. இவர், தென் ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜில்லா போர்டு தலைவராகவும், கடலூர் நகரசபை தலைவராகவும் இருந்து வந்தார். பனகல் அரசர் (ராஜராமராய நிங்கார்) இரண்டாவது அமைச்ச ராகவும், கே.வி. ரெட்டி மூன்றாவது அமைச்சராகவும் பதவி ஏற்றனர்.

 

முதல் மந்திரி மரணம்

 • சில மாதங்களுக்குப் பின், முதல் மந்திரி சுப்பராயலு ரெட்டி மரணம் அடைந்தார். அதனால், புதிய முதல்மந்திரியாக பனகல் அரசர் பதவி ஏற்றார். கே. வி. ரெட்டி, ஏ. பி. பாத்ரோ ஆகியோர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். பனகல் அரசர் ஆட்சியின் போது (1921 ஆகஸ்ட் மாதம்) கம்யூனல் ஜீ.ஓ சமூக நீதிக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆதி திராவிடர்களை பஞ்சமர் என்று அழைக்கக்கூடாது என்று 25-3-1922-ல் உத்தரவிடப்பட்டது.

 

இரண்டாவது தேர்தல்

 • 1923-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில், சென்னை மாகாணத்தில் இரண்டாவது பொதுத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலிலும் நீதிக் கட்சியை எதிர்த்து, “ஹோம் ரூல்” இயக்கம் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி போட்டியிடா விட்டாலும், சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் நீதிக் கட்சியை எதிர்த்து தீவிரமாகப் பிரசாரம் செய்ததால், போட்டி கடுமையாக இருந்தது.

 

 • ஆயினும், நீதிக்கட்சியே வெற்றி பெற்றது. பனகல் அரசரை முதல் மந்திரியாகவும், சர்.ஏ.பி. பாத்ரோ, திவான்பகதூர் டி.என். சிவஞானம் பிள்ளை ஆகியோரை மந்திரி களாகவும் கொண்ட இரண்டாவது நீதிக்கட்சி மந்திரிசபை 19.11.1923-ல் பதவி ஏற்றது.இந்த மந்திரி சபை பதவியில் இருந்தபோதுதான், சென்னையில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆலய சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இந் நிலையில், ‘வெள்ளுடை வேந்தர் சர்.பி. தியாகராயர் 1925 ஜூன் 29ந் தேதி காலமானார். அவர் பெயரால், சென்னை நகரின் ஒரு பகுதிக்கு “தியாகராய நகர்” என்று பெயரிடப்பட்டது.

 

மூன்றாவது தேர்தல்

 • தியாகராயர் மறைவு, நீதிக் கட்சிக்கு பேரிடியாக அமைந்தது. அந்த சோகத்திலிருந்து மீளுவதற்கு முன்பாகவே, 1926-ம் ஆண்டில் மூன்றாவது பொதுத் தேர்தல் நடந்தது. அப்போது நீதிக்கட்சி பிளவு பட்டிருந்தது. அதனால் 30 இடங்கள் மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்தன. “சுயராஜ்ய கட்சி”க்கு கூடுதலான இடங்கள் கிடைத்திருந்த போதிலும், “மெஜாரிட்டி” கிடைக்கவில்லை.எனவே, சுயேச்சையாக இருந்த டாக்டர் பி. சுப்பராயனை முதல் மந்திரியாகவும், சுயராஜ்ய கட்சியைச் சேர்ந்த ஏ. ரெங்கநாத முதலியார், ஆரோக்கியசாமி முதலியார் ஆகியோரை மந்திரிகளாகவும் கொண்ட ‘கூட்டு மந்திரிசபை” அமைக்கப்பட்டது.
  சுப்பராயன் ஆட்சியின்போது, “சைமன் கமிஷன்” இந்தியாவுக்கு வந்தது. அதை எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீர்மானித்தது. அதன் காரணமாக, சைமன் கமிஷனைப் புறக்கணிப்பது என்ற தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்று “சுயராஜ்ய கட்சி” கூறியது. அதை சுப்பராயன் ஏற்காததால், அவர் மீது சுயராஜ்ய கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது

 

 • நம்பிக்கை இல்லாத் தீர்மானத் தின்மீது 28-1-1928-ல் ஒட்டெடுப்பு நடந்தது. தீர்மானம் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து மந்திரி சபையில் பிளவு ஏற்பட்டது. “சுயராஜ்ய கட்சி”யைச் சேர்ந்த ரெங்கநாத முதலியார், ஆரோக்கிய சாமி முதலியார் ஆகிய இருவரும் மந்திரி பதவியை விட்டு விலகினர். அவர்களுக்கு பதிலாக, முத்தையா முதலியார், எம்ஆர் சேதுரத்தினம் அய்யர் ஆகியோர் புதிய மந்திரி களானார்கள்.1928 டிசம்பர் 16-ந் தேதி பனகல் அரசர் மரணம் அடைந்தார். நீதிக் கட்சியின் தூண்களாக விளங்கிய நாயர், தியாகராயர், பனகல் அரசர் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக மறைந்ததால் நீதிக் கட்சி பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

 

பொப்பிலி அரசர்

 • 1930-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், சுயராஜ்ய கட்சியும் போட்டி யிடவில்லை. அதனால் நீதிக் கட்சி பெரும் வெற்றி பெற்றது. திவான் பகதூர் முனுசாமி நாயுடு தலைமையில் பி.டி. ராஜன், குமாரசாமி ரெட்டியார் ஆகிய இருவரையும் துணை மந்திரிகளாகக் கொண்ட அமைச்சரவை அமைக்கப் பட்டது. 1932-ல் முனுசாமி நாயுடு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், பொப்பிலி அரசர் முதல் மந்திரியானார்.மூன்று ஆண்டு காலமே இந்த மந்திரிசபை பதவியில் இருக்க வேண்டும். என்றாலும், சைமன் கமிஷன் அறிக்கை வெளிவரத் தாமதம் ஆனதால், இதன் பதவிக் காலம் 7 ஆண்டுகள் நீடித்தது. அந்தக் காலக்கட்டத்தில், செட்டி நாட்டு ராஜா முத்தையா செட்டியார், சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் ஆகியோர் அமைச்சர்களானார்கள்.

 

ராஜாஜி முதல்வர் ஆனார்

 • 1937-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், நீதிக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நடந்தது.அதில், காங்கிரஸ் கட்சி வென்றது. மொத்தம் உள்ள 215 தொகுதிகளில் 156 இடங்கள் காங்கிரசுக்கு கிடைத்தன.ஆயினும், “மாநில அரசுகளின் செயல்பாட்டில் கவர்னர்கள் தலையிட்டு குளறுபடி செய்கின்றனர். இப்படித் தலையிட மாட்டோம் என்று உறுதி கூறினால்தான், மாநிலங்களில் காங்கிரஸ் மந்திரி சபை அமைக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. அதனால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும், மந்திரிசபை அமைக்க முடிய வில்லை.

 

 • இதனால், இடைக்கால ஏற்பாடாக நீதிக்கட்சியும், சுயேச்சைகளும் கொண்ட மந்திரி சபை அமைக்கப்பட்டது. கே. விரெட்டி முதல் மந்திரியாகவும், சர் ஏ. டி. பன்னீர் செல்வம், ராஜா சர். முத்தையா செட்டியார், பி. கலி புல்லா சாகிப் பகதூர், மல்லை சின்னத் தம்பி ராஜா (எம்.சி. ராஜா), ஆர். எம். பாலத் ஆகியோர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர்.சில மாதங்கள் கழித்து, “அமைச்சரவையின் பணிகளில், கவர்னர்கள் அனாவசியமாகத் தலையிட மாட்டார்கள்” என்று பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதி மொழி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து, மாநிலங்களில் மந்திரிசபை அமைக்க காங்கிரஸ் தீர்மானித்தது.

 

 • இதன்படி 1937 ஜூலை 15ந் தேதி, ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் மந்திரிசபை பதவி ஏற்றது. ராஜாஜி மந்திரிசபையில் எம். பக்தவத்சலம் உள்பட 10 மந்திரிகள் இடம் பெற்றனர். ராஜாஜி பதவி ஏற்றதும், முதல் வேலையாக, தான் பிறந்த சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமுல் நடத்தினார். பிறகு, வேறு சில மாவட்டங்களுக்கும் இது விரிவு படுத்தப்பட்டது. இந்தியாவிலேயே மதுவிலக்கு அமுலுக்கு கொண்டு வரப்பட்ட முதல் மாநிலம் தமிழ்நாடுதான். (அதாவது பழைய “சென்னை மாகாணம்”)மதுவிலக்கினால் ஏற்பட்ட வருமான இழப்பைச்சரிக்கட்ட விற்பனை வரியை ராஜாஜி கொண்டு வந்தார். புகையிலை, பீடி, சுருட்டு, சிகரெட் ஆகியவற் றுக்கு உற்பத்தி வரி விதித்தார்.விவசாயிகளுக்கு நன்மை செய்யும் வகையில் கடன் நிவாரணச் சட்டம் கொண்டு வந்தார்.

 

இந்தித் திணிப்பு

 • இவ்வாறு நல்ல பெயர் வந்து கொண்டிருந்த சமயத்தில், இந்தியைக் கட்டாயப்பாடமாக்க ராஜாஜி முயன்றார். அவ்வளவுதான், தமிழ்நாடு முழுவதும் அவருக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது.எதிர்ப்பின் வேகத்தை உணராத ராஜாஜி, பள்ளிக் கூடங்களில் முதல் கட்டமாக 1-ம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை கட்டாய மாக இந்தியை போதிக்க வேண்டும் என்று 21-4-1938-ல் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்துப் போராடுவதென்று எதிர்க் கட்சிகள் முடிவு செய்தன.

 

 • மே மாதம் 28-ந் தேதி, நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் திருச்சியில் ‘தமிழ்ப்பாசறை” கூட்டம் நடந்தது. இதில், பெரியார் ஈ.வெ.ரா., முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், டபிள்யு. பி. ஏ. செளந்தரபாண்டியனார், உமா மகேஸ்வரன், கே.எம். பாலசுப்பிரமணியம் உள்பட பலர் முக்கிய பங்கெடுத்துக் கொண்டனர்.
  1938-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி சென்னையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. ராஜாஜி வீட்டு முன்பாக மறியல் செய்து பலர் கைதானார்கள்.
  இந்தி எதிர்ப்பின் அவசியத்தை மக்களிடம் பரப்ப ‘தமிழர் பெரும்படை” என்ற பெயரில் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. இந்தப் படையினர் ஐ.குமாரசாமிபிள்ளை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, “நகரதூதன்’ ஆசிரியர் திருச்சி திருமலைசாமி ஆகியோர் தலைமையில், திருச்சி உறையூரிலிருந்து பாதயாத்திரையாக சென்னையை நோக்கிப் புறப்பட்டனர்.234 ஊர்களின் வழியாக, 42 நாட்கள் நடந்து இவர்கள் சென்னை நகரை அடைந்தனர். சென்னையின் எல்லையில் இவர்களை மறைமலை அடிகளார் வர வேற்றார். கட்டாய இந்தியை எதிர்த்து 14-11-1938 அன்று டாக்டர் தர்மாம்பாள் தலைமையில் பெண்கள் மறியல் செய்தனர். அதில் பலர் கைது செய்யப்பட்டனர்.

 

 • ராஜாஜி வீட்டு முன் உண்ணா விரதம் இருந்து கைது செய்யப்பட்ட பல்லடம் பொன்னுசாமிக்கு 4 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.பெரியார், அண்ணா கைது போராட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா கைது செய்யப்பட்டார். 5-12-1938-ல், ஜார்ஜ் டவுன் நீதி மன்றத்தில் அவருக்கு 2 குற்றச் சாட்டுகளுக்காக தலா ஒராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டது. தண்டனையை ஒன்றின் பின் ஒன்றாக (அதாவது 2 ஆண்டுக் காலம்) அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் ரூ. 2000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்தால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

 

 • பெரியார் அபராதம் கட்ட மறுத்து 2 1/2 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறை சென்றார். அவரை பெல்லாரி சிறையில் அடைத்தனர். அபராதத்தொகைக்காக அவருடைய கார் பறிமுதல் செய்யப்பட்டது.1938 செப்டம்பர் 26-ந் தேதி, இந்தி எதிர்ப்பு போரில் அண்ணா கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.மற்றும் ஈழத்து சிவானந்த அடிகளாருக்கு 9 மாதம், கே.எம். பாலசுப்பிரமணியத்துக்கு 6 மாதம், மறைமலை அடிகளாரின் மகன் மறை திருநாவுக்கரசுக்கு 6 மாதம் குடந்தை எஸ்.கே. சாமிக்கு 18 மாதம், வண்ணை சாது நாராயண மடாலய பீடாதிபதி அருணகிரி அடிகளாருக்கு 2 வருடம், பாவலர் பாலசுந்தரத்துக்கு (பிற்காலத்தில் “பராசக்தி” கதையை எழுதியவர்) 3 வருடம் இப்படி பலவாறாக ஜெயில் தண்டனை விதிக்கப் பட்டது.

 

சிறையில் மரணம்

 • இந்தி எதிர்ப்புப் போரில் கைதாகிச் சிறை சென்ற தாளமுத்து, 1934 மார்ச் 12ந் தேதி சிறையிலேயே மரணம் அடைந்தார். இந்தச் சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.கட்டாய இந்தி காரணமாக தமிழகம் போர்க்களமாகி விட்டதை சட்டசபையில் சர் ஏ.டி. பன்னீர் செல்வம், ராஜா சர். முத்தைய செட்டியார், திவான் பகதூர் அப்பாதுரைப் பிள்ளை ஆகியோர் விரிவாக எடுத்துக் கூறி, இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையேல் நிலைமை விபரீதமாகிவிடும் என்று எச்சரித்தனர்.

 

விடுதலை

 • இந்திக்கு இவ்வளவு கடும் எதிர்ப்பு இருக்கும் என்று ஆரம்பத்தில் ராஜாஜி நினைக்க வில்லை. போராட்டம் தீவிரமான தைத்தொடர்ந்து பெரியாரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். 167 நாள் சிறையிலிருந்த பெரியார், 22-4-1939-ல் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையான 6 மாதங் களுக்குப் பின், போராட்ட வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர்.
  ” போராட்ட வீரர்களனைவரையும் விடுதலை செய்ததற்கு நன்றி. கட்டாய இந்தி உத்தரவை வாபஸ் பெறும் வரை போராட்டம் ஒயாது” என்று பெரியாரும், மற்ற தலைவர் களும் அறிக்கை வெளியிட்டனர்.
 • ராஜினாமா இந்தச் சமயத்தில், பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைப்பதில்லை என்ற தீர்மானத்தைக் காங்கிரஸ் மேலிடம் நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து, மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரி சபைகள் பதவியைவிட்டு விலகின.
  ராஜாஜி மந்திரி சபையும் 28-10-1939 அன்று ராஜினாமா செய்தது. 21-2-1940 அன்று கட்டாய இந்தி உத்தரவு ரத்து செய்யப்பட்டது..

நீதிக்கட்சியின் பெயர் மாற்றம்

 • 1919 – ம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்த பெரியார், 1925-ம் ஆண்டு வரை காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1925 நவம்பர் மாதம், காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டுக்கு திரு.வி.க. தலைமை தாங்கினார். அந்த மாநாட்டில், ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும்’ என்ற தீர்மானத்தைப் பெரியார் கொண்டு வந்தார். தீர்மானத்துக்கு திருவி.க. அனுமதிமறுத்தார்.

 

 • இதனால் கோபம் அடைந்த பெரியார், “காங்கிரஸ் கட்சியினால், பிராமணர் அல்லாதார் பயன் அடைய முடியாது. இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை” என்று சபதம் செய்து விட்டு, மாநாட்டை விட்டு வெளியேறினார் பின்னர் நீதிக்கட்சியை ஆதரித்தார்.,1944-ல் சேலத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். அந்த மாநாட்டில், நீதிக் கட்சியின் பெயரை ‘திராவிடர் கழகம்’ என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது.

 

நீதிக்கட்சியின் சாதனைகள்

 • மொத்தம் 13 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தது. சமூக நீதியும் சமூக சீர்திருத்தங்களுமே இந்த ஆட்சியின் சிறப்புகளாகும். அரசப் பணியிடங்களில் பிராமணர் அல்லாத சமூகத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவத்தை நீதிக்கட்சி வழங்கியது. கல்வி சீர்திருத்தங்கள் மூலம் தாழ்த்தப்பட்டோர் நிலை உயர்வதற்கு அது பாடுபட்டது.

 

நீதிக்கட்சியின் கல்விச் சீர்திருத்தங்கள்

 • கட்டணமில்லாத கட்டாயக் கல்வி முதன் முறையாக சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏறத்தாழ 3000 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்களுக்கு மீன்வளத்துறையின் மூலமாக இலவச மீன் பிடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
  சென்னையில் தோற்தெடுக்கப்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் இலவச மத்திய உணவு அளிக்கப்பட்டது.ஆயிரம் விளக்கு பகுதியில் முதல் முதலாக திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.1934ம் ஆண்டு சென்னை துவக்க கல்வி சட்டம் திருத்தப்பட்டு 1335ல் துவக்க கல்வியின் தரம் மேம்படுத்தப்பட்டது.

 

 • பெண் கல்வி நீதிக் கட்சியின் ஆட்சியில் ஊக்குவிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் கல்வி தொழிலாளர் நலத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட முன்சீப்புகளை நியமிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திடமிருந்து பறிக்கப்பட்டது. 1921 மற்றும் 1922 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டு அரசாணைகள், உள்ளாட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பிராமணர் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தன. தேவதாசி முறையை ஒழிப்பதற்காக டாக்டர் முத்து லட்சுமி கொண்டு வந்த சட்டத்தை 1930 ஆண்டு நிறைவேற்றியது.

www.iyyasamy.com