ஜேம்ஸ் ஜோசப் சில்வெஸ்டர் வரலாறு

 

image

 

 • உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளரும், கணிதத்துறையின் பல பிரிவுகளில் முத்திரை பதித்தவருமான. ஜேம்ஸ் ஜோசப் சில்வெஸ்டர் (James Joseph Sylvester) பிறந்த தினம் இன்று செப்டம்பர் 3, 1814. (செப்டம்பர் 3, 1814 – மார்ச் 15, 1897) 19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலர்களில் ஒருவர். கெய்லியுடன் கூட்டாகக் கணித ஆய்வுகள் செய்தவர். கெய்லியைப்போல் கணிதத் துறையில் பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.

 

 • லண்டனில் யூதக் குடும்பத்தில் (1814) பிறந்தவர். தந்தை வியாபாரி. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, லண்டன் பல்கலைக்கழகப் பேராரிசியர் டிமார்கனிடம் பயின்றார். சிறுவயது முதலே கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

 

 • லிவர்பூல் ராயல் இன்ஸ்டிடியூட்டில் 2 ஆண்டுகள் பயின்றார். அங்கு பல பரிசுகளை வென்றார். யூதராக இருந்ததால் சில தொல்லைகளைச் சந்திக்க நேர்ந்தது. கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் படித்தபோது, மத விதிமுறைகளை ஏற்க மறுத்ததால், பல்கலைக்கழகப் பட்டங்கள், பல பரிசுகள் மறுக்கப்பட்டன.

 

 • இறுதியாக, டப்ளின் ட்ரினிட்டி கல்லூரியில் இவருக்கு பி.ஏ., எம்.ஏ. பட்டங்கள் பெற்றார். தேவாலயங்களின் பிடியில் இருந்து இங்கிலாந்து கல்வி நிலையங்கள் விடுபட்ட பிறகு, இவருக்கு மறுக்கப்பட்டிருந்த பட்டங்கள் கவுரவப் பட்டங்களாக வழங்கப்பட்டன.

 

 • லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். ராயல் சொசைட்டி ஃபெலோவாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக சிறிதுகாலம் பணியாற்றிவிட்டு, மீண்டும் இங்கிலாந்து திரும்பினார். ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் புள்ளியியல் நிபுணராக சேர்ந்தார்.

 

 • தனிப்பட்ட முறையில் சில மாணவர்களுக்கு கணிதம் கற்பித்தார். ‘கைவிளக்கேந்திய காரிகை’ என போற்றப்படும் பிரபல செவிலியர் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் இவரது மாணவி. 32-வது வயதில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.

 

 • அப்போது, கணித மேதை கெய்லியை சந்தித்தார். அவர் மூலமாக கணித ஆய்வுகள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டனர். அணிக்கோவைகள், அணிகள், இருபடிய அமைப்புகள், எண் பிரிவினைக் கோட்பாடு, சேர்வியல் குறித்து ஆராய்ந்து புதிய கோட்பாடுகளை வகுத்தனர்.

 

 • கிரேக்கம், லத்தீன் மொழிகளிலும் புலமை பெற்ற இவர், தனது ஆய்வுக் கட்டுரைகளை இந்த மொழிகளிலும் வெளியிட்டார். பல கணிதப் புதிர்களுக்கு விடை கண்டறிந்தார். பல இடங்களில் ஆராய்ச்சி உரைகள் நிகழ்த்தினார். கணிதத்தில் இன்றும் வழக்கில் இருக்கும் ‘டிஸ்கிரிமினன்ட்’, ‘மாட்ரிக்ஸ்’ ஆகிய பல கலைச்சொற்கள் இவர் உருவாக்கியவையே.

 

 • வுல்விச் ராயல் மிலிட்டரி அகாடமியில் 16 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். அப்போதும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல்வேறு கணித கோட்பாடுகள், தீர்வுகளைக் கண்டறிந்தார். அமெரிக்காவில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

 

 • அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மேத்ஸ் என்ற ஆய்விதழை 1878-ல் தொடங்கினார். கணித உலகில் இந்த இதழ் இன்றும் சிறப்பாக போற்றப்படுகிறது. தனியாகவும் பிறருடன் இணைந்தும் பல நூல்களை எழுதியுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எண் கோட்பாட்டு வல்லுநராக 70 வயதில் பணியாற்றினார்.

 

 • கற்பித்தல், கணித ஆராய்ச்சிகளில் இறுதிவரை ஈடுபட்டுவந்த சில்வெஸ்டர் 83-வது வயதில் (1897) மறைந்தார். இங்கிலாந்து ராயல் சொசைட்டி சார்பாக கணிதவியலுக்கான சில்வெஸ்டர் பதக்கம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. பல கணிதக் கோட்பாடுகள், விளைவுகளுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.