இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு

Image result for ஜவஹர்லால் நேரு

 

 

For group 1 preliminary and Mains

பாரத ரத்னா ஜவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889 -மே 27, 1964),

 

 • இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி என்னும் பெருமைகளுக்கு உரியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. 1947 ஆம் ஆண்டு முதல் தன் வாழ்நாளின் இறுதியான 1964 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணியாற்றியவர்.

 

இளமைக்காலம்

 

 • ஜவஹர்லால் நேரு, 14 நவம்பர் 1889 ஆம் ஆண்டு அலகாபாத்தில் மோதிலால் நேரு, சொரூப ராணி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

 

 • செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நேரு, தன்னுடைய 13 ஆம் வயதில் அன்னிபெசன்ட் அம்மையாரின் ’பிரம்ம ஞான சபை’ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். sinnfein, suffragette முதலிய புரட்சிகர இயக்கங்களால் ஐரோப்பாவில் இருந்த பொழுது நேரு பெரிதும் ஈர்க்கப்பட்டார். கம்யூனிசத்தின் மீது கரிசனமான பார்வை இருந்தாலும், ஜனநாயகத்தை நிராகரிக்கும் போக்கில்,வன்முறையை முன்னிறுத்தல் ஆகியவற்றால் கம்யூனிஸ்ட்களோடு முரண்பட்டார்.

 

 • கரிபால்டியின் போர்க் குணமும்,ஃபாபியன் இயக்கமும் இங்கிலாந்தில் அவரை ஈர்த்தன. ஹாரோ கல்லூரி, கேம்ப்ரிட்ஜ் ஆகியற்றில் படிக்கின்ற பொழுது அவரின் கலகலப்பான குணத்துக்காக நேருவை ‘ஜோ’ நேரு என்று அழைப்பார்கள் ஐரோப்பிய நண்பர்கள்.

 

 • நேரு ட்ரினிட்டி கல்லூரி, கேம்ப்பிரிட்ஜில் 1907ல் சேர்ந்தார். இயற்கை அறிவியல் மாணவராக நேரு இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றைக் கல்லூரியில் படிக்க வேண்டியிருந்தது. கணிதம் அவருக்கு உவப்பான பாடமில்லை என்பதால் ட்ரினிடி கல்லூரியில் தாவரவியலை தன்னுடைய விருப்பப்பாடமாக தேர்வு செய்து படித்தார்.

 

 • 1910 ஆம் ஆண்டு இயற்கை அறிவியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். நேருவின் சிந்தனையில் பெர்னார்ட் ஷா,H.G.வெல்ஸ், J.M.கெயின்ஸ்,ரஸ்ஸல்,மெரிடித் டவுன்செண்ட் ஆகியோரின் எழுத்துக்கள் தாக்கம் ஏற்படுத்தின

 

விடுதலைப்போராட்டம்

 

 

 

 • 1912 ஆம் ஆண்டு லண்டனில் வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்று பிரிட்டனில் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றபோதே நேருவிற்கு இந்திய அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. காங்கிரஸ் இயக்கத்தில் காந்தியின் தலைமையின் கீழ் செயல்பட்டார். 1913 ஆம் ஆண்டு காந்தியடிகளின் பொது உரிமை போராட்டத்திற்கு (Civil rights Campaign) நிதி வசூலித்துக் கொடுத்தார்.

 

 • 1916 ஆம் ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் நேரு முதன் முறையாகக் காந்தியைச் சந்தித்தார். இது காந்தி-நேரு இருவருக்குமான இணை பிரியா தோழமையின் தொடக்கமாக அமைந்தது. 1917-ம் ஆண்டு அன்னி பெசன்ட் துவங்கிய தன்னாட்சி இயக்கத்தின் செயலாளர் ஆனார்.

 

 • ‘தி இன்டிபென்டன்ட்’ இதழை தன்னுடைய தந்தை ,மோதிலால் நேருவுடன் இணைந்து 1919-ல் ஆரம்பித்தார்.

 

 • நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிக்கையை 1938-ம் ஆண்டு நேரு துவங்கி நடத்தினார். 379 அப்பாவி மக்களைக் கொன்று குவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையே நேருவை இந்திய விடுதலைப் போராட்டத்துக்குள் இழுத்தது

 

 • தந்தையை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய பெருமை நேருவை சேரும். “மோதிலால் நேரு இந்திய விடுதலைப் போரில் ஈடுபடக்காரணம் அவர் மகன் மீதான அன்பே. நேருவின் மீதான அன்பே தேசப் போராட்டத்தில் அவரை ஈடுபடுத்தியிருக்கிறது. “என்றார் காந்தியடிகள் 1920 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்திற்குத் நேரு தலைமை தாங்கினார். அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டார் என 1921 ஆம் ஆண்டு நேரு கைது செய்யப்பட்டார்.

 

 • நேருவின் தந்தையார் மற்றும் சி.ஆர். தாஸ் தொடங்கிய ‘சுயராஜ்ய கட்சி’யில் நேரு சேராமல், காந்தியுடனே பணியாற்றினார். நேரு, சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் இணைந்து பிற விடுதலை பெற்ற நாடுகளுடன் நல்லுறவைப் பேண விரும்பினார். பஞ்சாபின் நாபாவில் நடைபெற்ற அரசருக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாக தடையை மீறி அம்மாநிலத்துக்குள் நுழைந்ததற்காக செப்டம்பர் 22, 1923 அன்று சந்தானம்,கித்வானி ஆகியரோடு கைது செய்யப்பட்டார்.

 

 • 1923-ம் ஆண்டு ஹிந்துஸ்தானி சேவா தளத்தை .ஹார்டிகர் உடன் இணைந்து ஆரம்பித்தார். அதே வருடம் காங்கிரசின் காக்கிநாடா கூட்டத்தில் முதல் முறையாக கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டு அலகாபாத் நகராட்சி வாரியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

 

 • 1928-ல் INDEPENDENCE INDIA LEAGUE அமைப்பைத் துவங்கினார். 1935-ல் அனைத்து இந்திய மக்கள் மாநில மாநாட்டின் தலைவராக தேர்வானார். நேரு, வி.கே.கிருஷ்ண மேனனுடன் இணைந்து ஜனநாயகத்துக்காக போராடிக் கொண்டிருந்த ஸ்பெயின் தேசப் போராளிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். ஐரோப்பாவில் பயணம் செய்துகொண்டிருந்த நேருவை முசோலினி சந்திக்க விரும்பிய பொழுது ,”ரத்தக்கறை படிந்த கரங்களுக்கு சொந்தக்காரரை சந்தித்து கைகுலுக்க மாட்டேன்!” என்று கம்பீரமாக மறுத்துவிட்டார்.

 

 • 1929 ஆம் ஆண்டு நேரு தலைமையில் ராவி நதிக்கரையில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழுச் சுதந்திர தீர்மானம் (Poorna swaraj resolution) நிறைவேற்றப்பட்ட பிறகு காங்கிரஸில் நேருவின் முக்கியத்துவம் கூடியது. 1930 ஆம் ஆண்டிலிருந்தே காந்தியடிகளின் பிரதம சீடர் நேருதான் என்ற கருத்து பரவத் தொடங்கியது.காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தை நேரு முன்னெடுத்துச் சென்றார். நேரு உப்பு சத்தியா கிரகக் கூட்டத்தில் பேசியதற்காக 14 ஏப்ரல் 1930 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். காங்கிரஸில் இருந்த சர்தார் பட்டேல், டாக்டர் இராஜேந்திர பிரசாத், இராஜாஜி போன்ற வலது சாரித் தலைவர்கள் நேருவோடு கருத்து மாறுபாடு கொண்டிருந்தனர்.

 

 • 1938-ல் தேசிய திட்டக்கமிட்டியின் தலைவராக நேரு தேர்வு செய்யப்பட்டார். தேச உருவாக்கம் எப்படி அமைய வேண்டும் என்பதை திட்டமிடும் பொறுப்பு இந்த கமிட்டிக்கு வழங்கப்பட்டிருந்தது 3,269 நாட்களை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நேரு சிறையில் கழித்தார். அங்கே பல அற்புத மான நூல்களை எழுதினார் ஆங்கிலேயர் ஆட்சி செய்யாத மாகாணங்களை சேர்ந்தவர்களையும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக்கும் திட்டத்தை நேருவே செயல்படுத்தினார்

 

 • பேரன் பிறந்த பொழுது சிறையை விட்டு மன்னிப்பு கேட்டால் அனுப்புகிறோம் என்ற பொழுது மறுத்தவர் , தெருவில் போலீஸ் வாகனம் போகும் பொழுது விளக்கு வெளிச்சத்தில் பேரனை தூக்கி இந்திரா காண்பிக் கப் பார்த்து விட்டு, ”இவர்கள் வெளிச்சத்தில் வாழவேண்டும் என்றுதான் நாங்கள் இருளில் உழல்கிறோம்!” என்று கடிதம் எழுதினார்

 

விடுதலைக்குப் பிந்தைய இந்திய உருவாக்கம்

 

 • விதியோடு ஒரு ஒப்பந்தம் (Tryst with destiny) விடுதலையின் பொழுது அவர் நிகழ்த்திய உரை. “உலகமே உறங்கிக்கொண்டு இருக்கும் பொழுது நம் தேசம் விடுதலையை நோக்கி விழித்து எழுகிறது” என்று துவங்கியது அவ்வுரை .இந்தியாவில் முதல் தேர்தல் 1951ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கி, 1952 மே வரை நடைபெற்றது. முதல் இந்தியத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஜவஹர்லால் நேரு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றார்.

 

 • மிக அதிக காலம் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் என்கிற சாதனைக்குரியவர் நேரு. அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு வரப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங் கள், கலப்பு பொருளாதாரக் கொள்கை, வெளியுறவுக் கொள்கையில் பஞ்சசீலக் கொள்கை, அணிசேராக் கொள்கை, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இடப்பட்ட அடித்தளம், பாகிஸ்தான் சீனப் போர் நெருக்கடிகள், மாநிலங்களின் ஒற்றுமை மற்றும் நலன் கருதி கொண்டுவரப் பட்ட மாநில மறுசீரமைப்பு மற்றும் அலுவல் மொழி ஆணையம் ஆகியவை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளாகும்.

 

 • இந்திராவை ஒரு முறை பிறரின் விருப்பத்தால் காங்கிரஸ் தலைவராக இருக்க வைத்த காலத்தில்தான் கேரள அரசை கலைக்கிற ஜனநாயக விரோத நடவடிக்கையை நேரு எடுத்தார். அதற்குப் பின்னர் இந்திரா ஓரங்கட்டப்பட்டே இருந்தார் அலகாபாத் வீட்டுக்கு ஒழுங்காக வரிகட்டவில்லை என்கிற குற்றச்சாட்டைச் சோசியலிஸ்ட் கட்சித்தலைவர் ராம் மனோகர் லோகியா நாடாளுமன்றத்தில் எழுப்பிய பொழுது ஆதாரங்களோடு அதிகமாகவே வரி கட்டுவதை நிரூபித்தார். லோகியா மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்

 

 • வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களைத் தன்னுடைய செயலர்களாக வைத்துக்கொண்டு நாட்டின் மைய நீரோட்டத்தில் அப்பகுதி மக்கள் இணைவதை உறுதி செய்தார்.

 

 • தேசிய ஒருமைப்பாட்டுக்கான குழு அமைத்த பொழுது இந்தியாவை விட்டு கேரளாவை பிரிக்க எண்ணிய திருவாங்கூர் திவான் சி.பி.ராமசுவாமி ஐயரையே அதற்குத் தலைவர் ஆக்கினார்.
  மாடர்ன் ரீவியு என்கிற பத்திரிக்கையின் இந்த வரிகளைப்பாருங்கள் ,”நேரு சர்வாதிகாரி;அவருக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது; சீசரைப் போன்ற புகழ் மற்றும் அதிகாரத்தோடு அவர் திகழ்கிறார். அவரை இப்படியே இருக்க அனுமதிக்கக்கூடாது’’ இந்த வரிகளின் ஆசிரியர் நேருவேதான் பிரிவினையின்போது ‘காந்தி் சாகட்டும்!’ என்று கோஷம் எழுப்பப்பட்ட பொழுது ,”என்னை கொன்றுவிட்டு அவரை எது வேண்டுமானாலும் செய்யுங்கள்” என்றார். கலவரக்காரர்களிடம் இருந்து எண்ணற்ற இஸ்லாமியர்களை டெல்லியில் காப்பாற்றினார்.

 

 • ஆரம்பக்கல்வியை பெரிய அளவில் முன்னெடுப்பதை நேரு செய்யாமல் போனது அவரின் சமதர்மக்கொள்கையின் மிக முக்கியமான பிழை என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.மக்களவைத் தேர்தலின் பொழுது நாடு முழுக்கப் பிரச்சாரம் செய்தவர் தன்னுடைய தொகுதியில் வாக்குச் சேகரிக்கப் போகவில்லை. காரணம் கேட்கப்பட்ட பொழுது ,”என்னுடைய திறந்த புத்தகமான நாற்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கையைப் பார்த்து மக்கள் எனக்கு ஓட்டுப் போடட்டும் !” என்றார்

 

 • ஜனவரி 1955-ல் காமராஜர் தலைமையில் நடந்த ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் சோசியலிச (சமதர்ம ) பாதையில் தேசத்தின் வளர்ச்சிப் பாதை பயணிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1963-ல் காமராஜர் நேருவுடன் இணைந்து மூத்த தலைவர்கள் அரசுப்பதவிகளை துறந்து கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்கிற ‘கே ப்ளானை (K Plan)’ கொண்டு வந்தார்.

 

விடுதலைக்குப் பிந்தைய இந்திய உருவாக்கம்-மொழிகள் :

 

 • 1948-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகிய மூவரையும் உறுப்பினராகக் கொண்டு காங்கிரஸ் கட்சி அமைத்த ‘ஜேவிபி’ குழுவின் மொழிவாரி மாகாண உருவாக்கததை ஆதரிக்கவில்லை.

 

 • பிரிவினையை மதரீதியாக நிகழ்த்தி தேசம் துண்டாடப்பட்டதால் மொழிவாரி மாநிலங்களுக்கு நேரு அனுமதி தர மறுத்தார்.நேருவின் தாய்மொழி இந்துஸ்தானி. அகில இந்திய வானொலியின் உரைகள் அதிக சமஸ்க்ருத வார்த்தைகள் கலந்த ஹிந்தியில் மேற்கொள் ளப்பட்ட பொழுது “எனக்கு இந்த உரைகள் புரியவே இல்லை !” என்று பிரதமராக இருந்த நேரு புலம்பினார்

 

 • சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாகாணமான ஆந்திரா உருவாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி, உண்ணாவிரதமிருந்து பொட்டி ஸ்ரீராமுலு 1953ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிர் நீத்தார். பொட்டி ஸ்ரீராமுலுவின் மறைவுக்கு மூன்று தினங்களுக்குப் பின் ஆந்திர மாநிலம் அமைக்கப்படுமென்று இந்தியப் பிரதமர் நேரு அறிவித்தார். 1953ல் நேருவால் அமைக்கப்பட்ட ஃபசல் அலி தலைமையிலான மாநில சீரமைப்புக் குழு 1955 செப்டம்பர் 30ல் தன் அறிக்கையை அளித்தது.

 

 • இந்தியை தேசிய மொழியாக்க முயற்சிகள் நிகழ்ந்த பொழுது இந்தி பேசாத மாநிலங்களின் அச்சத்தைக் கருத்தில் கொண்டு “நீங்கள் விரும்பும் வரை ஆங்கிலத்தையே பயன் படுத்தலாம்” என்று உறுதி மொழி தந்தார்.

 

பலர் பார்வையில் நேரு

 

 • “அரசாங்கம் என்பதை இந்திய மக்களின் வாழ்க்கையை விட்டு பிரிக்க முடியாத ஒரு அங்கமாக ஆக்கியதும், இந்தியத் தன்மையை இந்தியர்கள் மீது திணிக்காமல் தேசியத்தை வளர்த்ததும் நேருவின் சாதனைகள்-அரசியல் அறிஞர் சுனில் கில்னானி

 

 • “நேரு உருவாக்கித் தந்த நாடளுமன்ற ஜனநாயகம் அவர் சார்ந்த பிராமண வகுப்பை ஆட்சிக்கட்டிலை விட்டுப் படிப்படியாக நகர்த்திக் கீழ்தட்டில் இருக்கும் ஜாதியினருக்கு அதிகாரத்தை வழங்கும் !”-வால்டர் கிராக்கர், 1962-ல் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதுவர்.

 

 • 1950-ல் இந்தூரில் காந்தி ஜெயந்தி விழாவில் பேசிய படேல், ‘நேருவே நம் தலைவர். காந்தியடிகள் தன் வாரிசாக அவரையே நியமித்தார்.. பாபுஜியின் மரண சாசனத்தை நிறைவேற்றுவது நம் கடமை. காந்திஜி யின் அஹிம்சா படையில் நானும் ஒரு வீரன். நான் விசுவாசமற்றவன் அல்ல’ என்றார்

 

 • பெரியாரை 1958-ல் நேரு அவர்கள் விமர்சித்துப் பேசியதை கண்டித்த அண்ணா அப்பொழுதும் தன்னடக் கமாக ,”நேரு கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் ; நான் கொட்டிக்கிடக்கும் செங்கல்.” என்றது குறிப்பிடத்தக்கது.

 

 • நேருவின் மறைவின் பொழுது ராஜாஜி இப்படி அஞ்சலி செலுத்தினார் ,””என்னைவிட 11 ஆண்டு இளையவர். 11 மடங்கு நாட்டுக்கு முக்கியமானவர். மக்களுக்கு என்னை விட 11,000 மடங்கு பிரியமான வர் நேரு. அவரின் பிரிவால் மிகச்சிறந்த நண்பரை இழந்து விட்டேன் !””

 

 • வாஜ்பேயி மொரார்ஜி தேசாய் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனதும் அவரின் அறையில் இருந்த நேருவின் படத்தை எடுக்க முயன்றார் கள். “இல்லை ! அவரின் படம் அங்கேயே இருக்கட்டும் !” என்றார் வாஜ்பேயி.
  பல தரப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கி உரையாடலை நிகழ்த்துவதில் நேருவுக்கு இணையானவர்கள் யாருமில்லை.-ஜூடித் பிரவுன்

 

 • நேருவை ஆதர்சமாக உலகம் முழுக்கப் பல்வேறு தலைவர்கள் கருதுகிறார்கள். நெல்சன் மண்டேலா தன்னுடைய முன்மாதிரி என்று நேருவையே குறிப்பிட்டார். நேருவின் தரிசனம் மற்றும் பார்வையால் கவரப்பட்ட இன்னொரு தலைவர் சோவியத் ரஷ்யாவின் இறுதித் தலைவர் கோர்பசேவ்

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி

 

 • நேருவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதலாவது தேசிய ஆய்வுக் கூடமாகிய தேசிய இயற்பியல் ஆய்வுக் கூடமும், அதைத் தொடர்ந்து மேலும் 17 தேசிய ஆய்வுக் கூடங்களும் ஏற்படுத்தப்பட்டன. 1948 ஆகஸ்டில் ஹோமி ஜஹாங்கீர்பாபா தலைமையில் இந்திய அணுசக்தி ஆணையம் நிறுவப்பட்டது.

 

 • மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை முன்மாதிரியாகக் கொண்டு 1952ல் முதல் இந்திய தொழில் நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி.) கோரக்பூரில் தொடங்கப்பட்டது. 1954ல் இந்திய அணுசக்தித் துறையும், 1956ல் இந்தியாவில் முதல் அணுசக்தி நிலையமும் (பாம்பேக்கருகே டிராம்பே என்னுமிடத்தில்) தொடங்கப்பட் டன.

 

 • 1962ல் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழு (INCOSPAR) அமைக்கப்பட்டது. 1971ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அறிவியல் தொழில்நுட்பத் துறை அறிவியல் கொள்கையை வகுக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது.

 

 • வலுவான அறிவியல் மற்றும் கல்வி மையங்கள் நேருவின் காலத்தில் எழுந்தன. விண்வெளி மற்றும் அணுசக்தி துறையில் முன்னேற்றத்துக் கான விதைகள் அவர் காலத்திலே போடப்பட்டன. அயல்நாட்டில் இருந்த இந்திய விஞ்ஞானிகள் பலர் நேருவின் வேண்டுகோளால் இந்தியாவில் சேவை செய்ய வந்து சேர்ந்தார்கள்

 

 • நேரு காலத்தில் கொண்டு வரப்பட்ட முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோடு பெரும் அணைத்திட்டங்களும் கொண்டுவரப்பட்டன.

 

 • ஹிஜ்லி கைது முகாமை ஆங்கிலேயர்கள் விடுதலைப்போராட்ட வீரர்களை சித்திரவதை முகாமாக இருந்த இடத்தில் புதிய எழுச்சியின் அடையாளமாக ஐ.ஐ.டி. கரக்பூரை நேரு உருவாக்கச் செய்தார்.

 

 • இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டத்தில் இந்தியாவில் பல கனரகத் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை, ஆவடி டாங்கி தொழிற்சாலை, திருச்சி பாய்லர் தொழிற்சாலை முதலிய பெரிய தொழிற்சாலைகள் நேரு ஆட்சிக் காலத்தில் உருவானவை.

 

 • சுதந்திர இந்தியாவில் 1947-&1964 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணியாற்றினார். இந்தியாவில் திட்டக் குழு (Planning Commission of India) வை உருவாக்கினார். முதல் ஐந்தாண்டு திட்டம் 1951 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. நேரு கலப்பு பொருளாதார முறை (Mixed Economy)யைக் கொண்டு வந்தார்.

 

 • இந்தியாவை நிலச் சீர்திருத்தம், குடிசைத் தொழில்களை ஊக்குவித்தல், நீர் மின்சாரம், அனுசக்தி ஆற்றல், எனப் பல துறைகளில் முன்னேற்றினார். அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS), இந்திய தொழில் நுட்பக் கழகம் (IIT), இந்திய மேலாண்மைக் கழகம் (IIM), தேசிய தொழில் நுட்பக் கழகம் ( NIT) போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் நேருவின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டவை.

 

வெளியுறவுக் கொள்கை

 

 • நேரு இந்திய வெளியுறவுக் கொள்கையின் சிற்பி எனப் போற்றப்படுகிறார். இந்திய & சீன உறவைப் பேணுவதற்காகவும், அண்டை நாடுகளோடு நட்புறவை நிலைநிறுத்துவதற்காகவும் 1955ம் ஆண்டு நடைபெற்ற பான்டுங் மாநாட்டில் நேரு பஞ்சசீலக் கொள்கையை வெளியிட்டார்.

 

 • நாடுகள் ஒன்றுக்கொன்று பிரதேச ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மதித்தல், ஆக்கிரமிப்பைத் தவிர்த்தல், பிற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல், சமத்துவம், பரஸ்பர உதவி மற்றும் சமாதான சகவாழ்வு ஆகியவையே பஞ்சசீலக் கொள்கைகளாகும்.

 

 • அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே இரண்டாம் உலகப் போருக்குப் பின் பனிப்போர் நிலவிய நிலையில் நேரு இரு நாடுகளோடும் சேராமல் மூன்றாம் உலக நாடுகள் தனி அமைப்பாகச் செயல்படுவதற்காக எகிப்து அதிபர் நாசர் மற்றும் யூகோஸ்லோவாகியா மார்ஷல் டிட்டோ ஆகியோரோடு சேர்ந்து 1961ம் ஆண்டு பெல்கிரேடு நகரில் அணிசேரா இயக்கத்தை (Non-alignment Movement) தொடங்கினார்.

 

 • முன்னாள் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பில் இந்தியா தொடர்வதற்கு நேரு வழிவகை செய்தார். ஐ.நா.வோடு நட்புறவைப் பேணி கொரியா, இந்தோ சீனா, சூயஸ் கால்வாய், காங்கோ போன்ற நாடுகளில் செயல்பட்ட ஐ.நா. பாதுகாப்புப் படைக்கு இந்தியாவிலிருந்து படை வீரர்களை நேரு அனுப்பி வைத்தார்.

 

 • சூயஸ் கால்வாயை பிரிட்டன், பிரான்ஸ் படைகள் இஸ்ரேலோடு இணைந்து ஆக்ரமித்த பொழுது அதைக் கடுமையாகக் கண்டித்து அப்பகுதி எகிப்துக்குப் போவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றினார்

 

 • கொரியப்போரின் பொழுது அமைதியை கொண்டு வருவ தில் முக்கியப் பங்காற்றினார். திம்மையா என்கிற இந்தியத் தளபதியை தலைவராகக் கொண்டு போர்க்கைதிகளை இருபக்கமும் ஒப்படைக்கும் குழுவின் தலைமைப்பொறுப்பு இந்தியா வசம் ஒப்படைக்கப் பட்டது.

 

 • ஹங்கேரியை சோவியத் ரஷ்யா தாக்கி ஆட்சியைப் பிடித்துக்கொண்ட பொழுது நேரு அந்நாட்டை விமர் சிக்க காலம் தாழ்த்தியதை அமெரிக்கா,இங்கிலாந்து முதலிய நாடுகள் கடுமையாக விமர்சித்தன.

 

 • காலனிய ஆதிக்கத்தில் இருந்த ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகள் விடுபடத் தொடர்ந்து பாடுபட்டவர். இரண்டு ஆசிய-ஆப்ரிக்கக் கூட்டத்தை இதற்காகக் கூட்டினார். ரகசிய உதவிகளையும் விடுதலைக்குப் போராடுகிற குழுக்களுக்கு வழங்கினார்

 

 • சீன மக்கள் குடியரசை அமெரிக்கா அங்கீகரிக்க மறுத்ததால் நேரு ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்து நேரு பெருந்தவறு செய்தார் என்று சசி தரூர் தன்னுடைய ‘NEHRU- THE INVENTION OF INDIA’ நூலில் பதிவு செய்கிறார்

 

 • 1959-ல் திபெத் மீது சீனா படை எடுத்து, அந்த நாட்டை சீனாவுடன் இணைத்துக் கொண்டது. திபெத் அதிபரா கவும், புத்த மதத் தலைவராகவும் இருந்த தலாய்லாமா அங்கிருந்து தப்பி ஒன்பது ஆயிரம் பேர்களுடன் இந்தியாவுக்கு ஓடி வந்தார். அவருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது.

 

 • திம்மையா என்கிற திறன் வாய்ந்த ராணுவத்தளபதியின் அறிவுரையை சட்டை செய்யாமல் தன்னுடைய நண்பரான ராணுவ அமைச்சர் கிருஷ்ண மேனனை நம்பி சீனா ஆக்ரமித்த பகுதிகளை மீட்க முன்னகரும் கொள்கையை (FORWARD POLICY) அமல்படுத்தி நேரு சரிவைச் சந்தித்தார்.

 

 • சீனா உடனான போரில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நேரு மீது முதன்முதலாக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், தீர்மானம் தோல்வி அடைந்தது

 

 • சீனாவைப்பற்றி அவரின் ‘உலக வரலாற்றுத்துளிகள் (Glimpses of World History)’ நூலில் நூற்றுக்கும் மேற் பட்ட குறிப்புகள் காணப்படுகின்றன. அந்த தேசம் திடீர் தாக்குதல் தொடுத்து எல்லைச்சிக்கலை தீர்க்க பார்த்தது பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் ஐந்து மாதங்களில் மூன்று முறை பக்கவாதத்துக்கு உள்ளாகி இறுதி நாட்களை நோக்கி நகர்ந்தார்.

 

நேரு எழுதிய நூல்கள்!

 

 • விடுதலையை நோக்கி (Towards Freedom):
  கண்டுணர்ந்த இந்தியா (Discovery of India):
  உலக வரலாற்றுத் துளிகள்(Glimpses of World History):
  1964, ஜனவரி 10-ம் நாள் புவனேஸ்வரத்தில் (ஒடிசா) அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட நேருவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மே 27-ம் நாள் பிற்பகல் இரண்டு மணிக்கு காலமானார். நேரு மறைவிற்கு பின் குல்சாரி லால் நந்தா தற்காலிகப் பிரதமராக பதவியேற்றார்.

 

 

www.iyachamy.com

MAANAVAN PEDIA STATE AND GOVERNMENT PLANNING WORLDS AWARDS AND REWARDS MAANAVAN ARTICLE EXAM TIPS AUDIO CURRENT AFFAIRS TAMIL VIDEOS MATHS VIDEOS ONLINE TEST DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS GOVERNMENT EXAM
No Comments

Sorry, the comment form is closed at this time.