இந்திய விமானப் படை தின கோலாகலம்!

Review Score0

 

 

  • நமது இந்திய விமான படை நிறுவப்பட்டு 84வது ஆண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹின்டன் விமான தளத்தில் இன்று காலை 8.30 மணிக்கு இந்திய விமான படையின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள், வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய விமான படை விமானங்கள் வானில் பறந்து சென்று வண்ண வண்ண புகையை வெளியிட்டும், பலூன்களை பறக்க விட்டும் அப்பகுதியை வண்ண கோலமாக்கியது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் ஏராளமான விமான படை வீரர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய விமான படையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

 

  • தற்போது சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் வீரர்களைக் கொண்டுள்ள இந்திய விமானப்படையில் சுமார் 1,130 போர் விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய விமானப்படையாகத் திகழும் இந்திய விமானப்படையில் காலசூழலுக்கேற்ற வகையில் பெரிய அளவிலான நவீன மயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.மிகப்பெரிய வான் பரப்பை கொண்ட நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், நமது விமானப்படை மிக முக்கிய பங்காற்றி வருகிறது. கண்காணிப்பு, உளவுப் பணி, தாக்குதல் பணி, தளவாட போக்குவரத்து என பல்வேறு பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், நமது நாட்டின் வான்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய விமானப்படை ஏராளமான விமானங்களை பயன்படுத்தி வருகிறது.

 

 

  • இந்நிலையில் விமானப்படை விழாவையொட்டி ஜனாதிபதி பிரணாப் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘விமான படையால் இந்திய தேசமே பெருமை கொள்கிறது. கடந்த 80 ஆண்டுகளாக இந்திய விமானபடை போர்க்களத்தில் மட்டுமின்றி, பேரிடர் காலங்களிலும், மனிதாபிமான நடவடிக்கைகளின் வாயிலாகவும் சாதனைகள் புரிந்து வருகிறது. விமான படை வீரர்கள் துணிச்சலையும், உறுதியையும் வெளிப்படுத்தி வந்துள்ளனர். விமான படையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நவீனமயமாக்கம் இந்திய விமான படையை மேலும் வலுவானதாகவும், திறன் மிக்கதாகவும் மாற்றும் இந்த நாளில் இந்திய விமான படையின் வீரர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

  • பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘இந்திய விமான படை தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் அதன் வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு எனது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய வானத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அர்ப்பணிப்பால் நாடு பெருமை கொள்கிறது”தெரிவித்திருந்தார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
LATESTS GOVERNMENT JOBS