இந்தியா ஏழாவது பணக்கார நாடு! எப்படி தெரியுமா..?

Deal Score0

 

 • சமீபத்திய நாடுகளின் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டது. அதில், இந்தியா 5,600 பில்லியன் டாலருடன் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா 48,900 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் சீனாவும், ஜப்பானும் உள்ளன. கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலியை முந்தி இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.

 

டாப் 10 பணக்கார நாடுகள்!

 • அமெரிக்கா (48,900 பில்லியன் டாலர்) 2. சீனா (17,400 பில்லியன் டாலர்) 3. ஜப்பான் (15,100 பில்லியன் டாலர்) 4. இங்கிலாந்து (9,200 பில்லியன் டாலர்), 5. ஜெர்மனி (9,100 பில்லியன் டாலர்) 6. பிரான்ஸ் (6,600 பில்லியன் டாலர்) 7. இந்தியா (5,600 பில்லியன் டாலர்) 8. கனடா (4,700 பில்லியன் டாலர்) 9. ஆஸ்திரேலியா (4,500 பில்லியன் டாலர்) 10. இத்தாலி (4,400 பில்லியன் டாலர்).

 

எப்படி என்கிறீர்களா?

 • இந்தச் சொத்துக் கணக்கானது, அசையாத சொத்துக்கள், இருப்புப் பணம், பங்குகள் என அனைத்தையும் உள்ளடக்கித்தான் கணக்கிடப்பட்டு உள்ளது. மொத்தத் தொகையில் இருந்து கடன் மதிப்பு கழிக்கப்பட்ட பிறகு வரும் மதிப்புகள்தான் இவை. அது சரி, ஏழாவது இடத்தை இந்தியா எப்படிப் பிடித்தது? ஒரே காரணம், மனிதவளம்.

 • இந்தியாவின் மனிதவளம்தான் இந்த வளர்ச்சிக்கான மூலதனம். நகரமயமாதலும் உலகமயமாதலும் புதுப்புது தொழில்களைச் செய்வதற்கான கதவுகளை இந்தியாவுக்குத் திறந்துவிட்டன. வெளிநாட்டினர் இங்கு எளிதில் தொழில் செய்வதற்கான சூழல்களை அரசு ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் முதலீடுகள் குவிந்தன. அதுவரை விவசாயத்தில்தான் 70 சதவிகித வேலை வாய்ப்புகள் இருந்தன. ஆனால், மெல்ல அது சேவைத் துறைக்கு மாறியது.

 

புதிதாய் முளைத்த துறைகள்!

 • குறைந்த ஊதியத்தில் அதிக அளவிலான பணியாளர்கள் கிடைத்ததால் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கும் தொழில்நுட்பமும், சேவையும் கொண்டு செல்லப்பட்டன. மனிதவளத்தை மட்டுமல்லாமல் மின்சாரம், தண்ணீர், கனிமங்கள் என அனைத்து வளங்களையும் கார்ப்பரேட்கள் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கின. இதனால் இந்தியத் தொழில் துறை வேகமாக வளர்ந்தது… இந்திய மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்தது. அதே நேரத்தில், நுகர்வுத் தன்மையும் அதிகரித்தது. மக்களின் வாழ்க்கை முறை வெகுவாக மாறத் தொடங்கின. செல்போன், மல்டி ஃப்ளெக்ஸ், ஆன்லைன் ஷாப்பிங் என இந்தியாவே டிஜிட்டல் மயமானது. இதனால் அனைத்துத் தொழில்களிலும் இ-காமர்ஸ் என்ற இணைய வணிகம் அதிகரித்தது. மிக இளம் வயதிலேயே ஏராளமானோர் பணக்காரர்களாக விஸ்வரூபம் எடுத்தார்கள்.

 • கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக இளம் வயதிலேயே தொழில்நுட்பத்தை மட்டுமேவைத்து பில்லியனர் ஆனவர்களில் ஓலா நிறுவனத்தின் நிறுவனர்கள் அங்கித் பாட்டி, பாவிஷ் அகர்வால், ஸ்னாப்டீல் நிறுவனர் குனால் பால் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் பின்னி மற்றும் சச்சின் பன்சால் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் வயது 28 – 32-க்குள்தான். அம்பானிகளும், பியானிகளும் ஆண்டாண்டுகளாய் சேர்த்த பணத்தை, ஐந்தே ஆண்டுகளில் இவர்களால் சேர்க்க முடிந்ததுதான் தொழில்நுட்ப வளர்ச்சியின் சக்திக்குச் சான்று.

 

இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை!

2011 62,000
201281,000
20131,00,900
20141,17,000
20151,37,100

 

இங்கு எல்லோரும் பணக்காரர்களா?

 • இந்தியா ஏழாவது பணக்கார நாடு என்ற இடத்தைப் பிடித்துள்ளது. மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 375 லட்சம் கோடி. இந்தியாவில் 2015 கணக்கெடுப்பின்படி 1,37,100 மில்லியனர்கள் இருக்கிறார்கள். இவர்களில் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ள பணக்காரர்கள் மட்டுமே 8.5 லட்சம் கோடிக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். எனில், மிச்சமுள்ள 1,37,090 மில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு என்னவாக இருக்கும்? 130 கோடி பேரில் இவர்கள் தவிர, மிச்சமுள்ள நபர்களின் மொத்த சொத்து மதிப்பு என்னவாக இருக்கும்?

 • புள்ளிவிவரங்களின்படி 130 கோடி பேர் கொண்ட இந்த நாட்டில் 1.6 கோடி பேர் மட்டுமே வருடத்துக்கு ரூ.17 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுகிறார்கள். 16 கோடி பேர் வருடத்துக்கு 3 லட்சத்துக்கும் மேல் வருவாய் பார்க்கும் மிடில் க்ளாஸ் மக்கள். 36 கோடி பேர் வருடத்துக்கு 1.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்கள். 70 கோடி பேர் 1.5 லட்சத்துக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்கள். மீதமுள்ள 5 கோடி பேர் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள்.

 

காணி நிலம் வேண்டும்!

 • கிரெடிட் சூயிஸி சொத்து அறிக்கை 2014-ன்படி இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 1 சதவிகிதத்தினர், 49 சதவிகித இந்திய நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். 9 சதவிகிதத்தினர், 25 சதவிகித நிலத்தையும், 40 சதவிகிதத்தினர், 21.5 சதவிகித நிலத்தையும் பகிர்ந்துகொண்டிருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 50 சதவிகிதம் இந்திய மக்கள் வெறும் 4.5 சதவிகித நிலங்களுக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படித்தான் இந்தியாவில் சொத்துக்களின் பரவல், பணப்புழக்கத்தின் அளவு இருக்கிறது. இந்தியாவின் 80 சதவிகிதச் சொத்துக்கள் 20 சதவிகித மக்களிடம் இருக்கிறது. மிச்சமுள்ள 20 சதவிகிதச் சொத்துக்களைத்தான் 80 சதவிகித மக்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

 

உணவின்றி உயிர் போகிறது!

 • மொத்த மதிப்பீட்டில் இந்தியா வளர்ந்து இருப்பது வெளிநாட்டினரிடம் பெருமையடித்துக்கொள்ள பயன்படலாம். ஆனால், உள்நாட்டில் நிலை என்ன? நேஷ்னல் சர்வே புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில், நகரங்களில் சராசரியாக ஒருநாளைக்கு ஒருவர் செய்யும் செலவு ரூ.88, கிராமங்களில் ரூ.48. இன்றைய விலைவாசியில் இந்தத் தொகையில் ஆரோக்கியமான உணவுகளை உண்ண முடியுமா? இந்தியாவில் மொத்த உயிரிழப்புகளில் 53 சதவிகிதம் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் நடக்கும் உயிரிழப்புகள் ஆகும்.

 • ஆரோக்கியமான ஊட்டச்சத்துமிக்க உணவு இல்லாததால் எந்த நோய் எதிர்ப்புத் திறனும் இன்றி நோய்வாய்ப்பட்டு உயிரிழப்புகள் நடக்கின்றன. இவற்றில் 70 சதவிகிதத்துக்கும் மேலான உயிரிழப்புகள் 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள். மொத்தத்தில், ‘இந்தியா உலக அரங்கில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஏழாவது அழகான பங்களா’ என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், வீட்டுக்குள் இருப்பவர்கள்தான் பட்டினியில் கிடக்கிறார்கள். அது வெளியே நின்று வேடிக்கைப் பார்ப்பவர்களுக்குத் தெரியுமா என்ன?

 

இங்கு என்ன வளம் இல்லை, ஆனால் ஏன் இந்த நிலை?

 • வளங்களின் அடிப்படையில் ஒப்பிடும்போது இந்தியாவும், சீனாவும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால், சீனாவால் மட்டும் எப்படி உலகில் இரண்டாவது பணக்கார நாடு என்ற இடத்தைப் பிடிக்க முடிந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக வேகமாக சீனா வளர்ந்துள்ளது. அதற்குக் காரணம், சீனா தனக்கென தனி வியாபாரக் கொள்கைகளை வகுத்தது. எந்தவொரு நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கும் போட்டியாகத் தனது நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்தது. உலகில் உள்ள மேல்தட்டு மக்களுக்கான சந்தையை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் பிடித்த நிலையில், நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களுக்கான சந்தையைச் சீனா பிடித்தது. வால்யூம் அடிப்படையிலான ஓட்டத்தில் சீனா மற்ற நாடுகளைக் காட்டிலும் நீண்ட இடைவெளியில் ஓடி வென்றது.

 • சீனப் பொருட்கள் இல்லாத நாடுகளே இல்லை. ஆனால், இந்தியாவில் இல்லாத நாடுகளின் பொருட்களே இல்லை. இந்தியா வெளிநாட்டினரின் கூடாரம். பிராண்டுகள் என்று நாம் மயங்கும் அனைத்தும் வெளிநாட்டு இறக்குமதிகள். இந்தியா இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதே நம்முடைய வளர்ச்சிக் குறைவாக இருக்கக் காரணம். மேலும் இங்கு ஈட்டப்படும் பெரும்பாலான வருவாய் வெளிநாட்டு முதலீடுகளால் வருபவை என்பதால், அவை இங்கே தங்குவதில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் ஊதியம் மட்டும்தான் மிச்சம்.

 

 • ஆனால், வெளிநாட்டினரை நுழையவிடாமல் இருந்திருந்தால், நமது அரசியல்வாதிகளால் நமக்கு இந்த வளர்ச்சிகூடக் கிடைத்திருக்காதோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது?
LATEST GOVERNMENT JOBS