அரசு உதவியில் வீடு கட்டலாம்

Image result for Government to help build the house

 

  • சொந்த வீடு என்பது மனித வாழ்க்கையில் பெருங்கனவு. அதிக வருவாய் ஈட்டுவோருக்குச் சொந்த வீடு கனவு எளிதாக நிறைவேறிவிடும். நடுத்தரக் குடும்பத்தினர் பெரும்பாலும் வங்கிகளில் கடன் வாங்கி சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக்கொள்கிறார்கள். ஆனால், ஏழை மக்களுக்குச் சொந்த வீடு என்பதெல்லாம் கனவாக மட்டுமே இருக்கும். காலம் முழுவதும் வாடகை வீட்டிலேயே வாழக்கையை நகர்த்தும் அவர்களுக்கும் வீடு கட்டும் ஆசையை நிறைவேற்றுகிறது அனைவருக்கும் வீடு திட்டம்.

 

  • தற்போது தமிழகத்தின் பல பகுதிகளிலும் அனைவருக்கும் வீடு திட்டத்தின்படி தகுதியுள்ள பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற சொந்தமாக 325 சதுர அடிக்குச் குறையாமல் இடம் இருக்க வேண்டும். மூன்று லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு வங்கியில் 2.10 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாத கடன் வழங்கப்படும் என்று அறிவிப்புகளைச் செய்தித் தாள்களிலும், அரசு அலுவலக அறிவிப்புப் பலகைகளிலும் பார்த்திருப்பீர்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எனப் பல அலுவலங்களில் இதற்கான விண்ணப்பங்களை வாங்க மக்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

 

‘அனைவருக்கும் வீடு’ திட்டம் என்பது என்ன?

 

  • ‘அனைவருக்கும் வீடு’ என்பது மத்திய அரசின் திட்டம். 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் இதை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரும் வீடு கட்டலாம். அடிப்படை உரிமையான சொந்த வீட்டை ஏழை மக்களும் அடைய வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள திட்டம். ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (பிரதம மந்திரி குடியிருப்புக் கட்டும் திட்டம்) என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

  • பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும் ‘அனைவருக்கும் வீடு’ என்று அறிவிக்கப்பட்ட திட்டம்தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற திட்டமாக மாறியது. இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த 7 ஆண்டுகளில் இரண்டு கோடிக்கும் அதிகமாக வீடுகளை நாடு முழுவதும் கட்ட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் குறிக்கோள். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2022-ம் ஆண்டில் நிறைவு பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவார்கள்?

 

  • இந்தத் திட்டத்தை மூன்று கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுக்குள் 100 நகரங்களில் ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதற்கான மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி முடிப்பது, அடுத்த கட்டமாக 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மொத்தம் 200 நகரங்களில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்வது, மூன்றாவது கட்டமாக எஞ்சிய நகரங்களில் 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுக்குள் வீடு கட்டும் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்வது எனத் திட்டமிடப்பட்டு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

வீடு கட்டுவதில் மானியம்

 

  • இந்தத் திட்டம் பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரை இலக்காகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவினர் முதன் முறையாக வீடு கட்டினாலோ வாங்கினாலோ மானியம் அளிப்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயம். ஒரு லட்சம் ரூபாய் முதல் 2.30 லட்சம் ரூபாய் வரை மானியமாகக் கிடைக்கலாம்.

 

  • இந்தத் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் பெறும் பயனாளி ஒருவருக்கு வட்டியில் 6.5 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் பெண் உறுப்பினர்களுக்கு இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. பொதுவாக வீடு பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டால் முன்னுரிமை கிடைக்கும். எனவே இந்தத் திட்டத்தைப் பெண்கள் நலம் சார்ந்த திட்டம் என்றும் அழைத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காத (பசுமை வீடு) வகையிலான தொழில்நுட்பங்களைப் புகுத்திக் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.

 

  • அதிக வருவாய் ஈட்டுவோராக இருந்தாலும், நடுத்தரக் குடும்பத்தினராக இருந்தாலும் வீட்டுக் கடன் வாங்கி தவணையைச் செலுத்தி முடிப்பதற்குத் திணறிவிடுவார்கள். பொருளாதரத்தில் நலிந்த பிரிவினர் என்றால் அவர்களுக்கு இன்னும் சிக்கலாகிவிடும். இதைக் கருத்தில்கொண்டு இந்தத் திட்டத்தில் வீட்டுக் கடன் பெறுவர்களுக்கு மாதத் தவணை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்தியாவில் வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி வீதம் 9.40 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உள்ளது.

 

  • ஆனால், வீடு வாங்க 6 லட்சம் ரூபாயை 15 ஆண்டு கால அவகாசத்தில் கடனாகப் பெற்றால் மாதத் தவணை மாதந்தோறும் 6,632 ரூபாய் என்ற அளவில் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 6.5 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளதால், கடன் பெற்றவர் மாதந்தோறும் 4,050 ரூபாய் செலுத்தினாலே போதுமானது. எனவே தவணைத் தொகையில் சுமார் 2000 ரூபாய் குறைந்துவிடும்.

 

  • இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு மத்திய அரசு சராசரியாக ஒரு லட்சம் ரூபாயை வழங்கும். பொருளாதரத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருவாய் ஈட்டுவோருக்கு 6.5 சதவீதம் மானியமும் வழங்கப்படும். நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்கள் கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய் பெறலாம். இவர்கள் நகர்ப்புறங்களில் சொந்த வீட்டை கட்டலாம் அல்லது ஏற்கெனவே வீடு இருந்தால் அந்த வீட்டைப் புதுப்பித்துக்கொள்ளவும் செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் பெறுவதற்கு வசதியாக மானியம் இணைக்கப்பட்ட கடன் திட்டம் வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சில தனியார் வங்கிகளில்கூட இந்த வீட்டுக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.