வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஆன்லைன் வாய்ப்புகள்!

Image result for online jobs work from home

 

 • இளம் பெண்கள் குழந்தை வளர்ப்பு, குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், தங்கள் படிப்பும் திறமையும் வீணாகிறதே என்று வருந்துகிறார்கள்.

 

 • குழந்தைகள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பிறகு, இனியாவது தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதுடன், குடும்பத்தையும் மேம்படுத்தலாமே என்ற எண்ணம் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வந்துவிடுகிறது.

 

 • கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே எப்படியாவது தங்கள் திறமையை நிரூபித்து, சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இளம் பெண்களுக்கும் நடுத்தர வயதுப் பெண்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது.

 

இவர்களைச் சுண்டி இழுப்பது ‘ஆன்லைன் ஜாப்’ என்ற விளம்பரம்.

 

வலை விரிக்கும் வலைதளங்கள்

 

 • ‘நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் டாலர்களில் சம்பாத்திய மாக மாற்ற வேண்டுமா?’

 

 • ‘ஒரு மணிநேரம் வெப்சைட் லிங்க்கை மவுஸால் க்ளிக் செய்தால் போதும், உங்கள் வங்கிக் கணக்கில் பணம் கிரெடிட் ஆகும்!’

 

 • ‘உங்களுக்கு வருகிற இமெயில்களை க்ளிக் செய்து, அப்படியே உங்கள் நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்தால், எத்தனை இமெயில்களுக்கு ஃபார்வேர்ட் செய்கிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல உங்கள் அக்கவுண்ட்டில் பணம் ஏறும்.’

 

 • ‘வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் சம்பாதிக் கலாம். 2 மணிநேரம் வேலை செய்தால் போதும். முன்பணமாக இவ்வளவு கட்டுங்கள். மாதாமாதம் பணம் ‘கொட்டோ கொட்டென்று கொட்டும்.’

 

 • இதுபோன்ற ஆசை வார்த்தைகளைப் பார்க்கும்போது அனுபவம் இல்லாதவர்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு வரத்தான் செய்யும். இத்தனை நாட்கள்தான் வீணடித்துவிட்டோம். இனியாவது சாதிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவது இயல்பு.

 

 • ‘உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்’ என்று சொன்னவுடன் கண்களை மூடிக்கொண்டு பல ஆயிரங்களை முன்பணமாகக் கட்டி, செலுத்திய பணத்துக்கு பிஸினஸும் முறையாகக் கிடைக்காமல், ஆர்டர் எடுத்து ஓரிரண்டு மாதங்கள் செய்து கொடுத்த வேலைக்கும் ஊதியம் கிடைக்காமல் கண்ணீர் விடுபவர்கள் பெருகிவருகிறார்கள். முன்பணம் பெற்றுக்கொண்டு, தலைமறைவாகிவிடும் நிறுவனங்கள் ஏராளம்.

 

இணையம் என்ற ‘அலாவுதீன் பூதம்’

 

 • “என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் இருக்கு மேடம், வீட்டில் இருந்தே ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா?’’ என்று பலரும் கேட்கிறார்கள். இவர்களில் 99% பேர் ஏற்கெனவே பணம் கட்டி ஏமாந்து போனவர்களாகத்தான் இருப்பார்கள்.

 

 • முகமே தெரியாத நபர்களுக்கு முன்பணம் செலுத்திவிட்டு வெளியில் சொல்லவும் முடியாமல், மன உளைச்சலில் புழுங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சில கேள்விகள்.

 

 • உங்கள் நேரத்தையும் உழைப்பையும் போட்டுச் செய்து கொடுக்கிற வேலைக்கு, நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்?

 

 • யாராவது வேலையே செய்யாமல் பணம் கொடுப் பார்களா, அல்லது குறைந்த உழைப்புக்கு அள்ளி அள்ளிப் பணம் கொடுப்பார்களா?

 

 • வெப்சைட் லிங்கை க்ளிக் செய்யச் சொல்கி றார்கள் என்றால், அந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுபவையாக இருந்தால்?

 

 • வெளிநாட்டு நிறுவனத்துக்கு உங்களை ஏஜெண்ட்டாகப் போட்டு உங்கள் வங்கி அக்கவுண்ட்டை தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக்கொண்டால்?

 

கவனமாகச் செயல்படுங்கள்!

 

 • உங்களைப் பண மழையில் நனைய வைக்க அவர்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை? ஆன்லைனில் முகம் தெரியாதவர்களிடம் முன் பணம் செலுத்தி ஆர்டர் எடுக்காதீர்கள். வெப்சைட் லிங்கை க்ளிக் செய்யவும், இமெயிலை ஃபார்வேர்ட் செய்யவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏஜெண்ட்டாகச் செயல்படவும் சொல்கிற வேலைகள் பெரும்பாலும் ‘ஆன்லைன் ஜாப் – அள்ளலாம் பணத்தை’ என்ற வார்த்தை ஜாலத்துடன் விளம்பரப்படுத்தப்படும். அவை உங்கள் கண்களில் பட்டால், யோசிக்காமல் உதறித் தள்ளுங்கள். ‘யாராவது ஆன்லைனில் பிசினஸ் கொடுப்பார்கள். அதைச் செய்து பணம் சம்பாதிக்கலாம்’ என்ற எண்ணம் இருந்தால் உடனடியாக அதையும் கைவிடுங்கள்.

 

திறமைதான் அடிப்படை

 

 • அப்படியானால் ஆன்லைனில் சம்பாதிக்கவே முடியாதா என்றால், முடியும். இப்படிக் குறுக்கு வழியில் அல்ல. உங்களிடம் உள்ள திறமைக்கு கம்ப்யூட்டர், இன்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். அதை நேரடியாகச் செய்கிற தொழிலாக்கி, அதற்கு ஆன்லைன் வசதிகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள்.

 

 • உங்களுக்குத் தையல் தெரியும் என்றால், விதவிதமாக டிஸைன் பிளவுஸ்கள் தைத்துத் தரும் தொழிலை வீட்டிலேயே தொடங்குங்கள். உங்கள் வீடு, உறவினர் வீடு, பக்கத்து வீடு, பக்கத்து தெரு, அக்கம் பக்கத்து ஊர் என உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் பிரபலமாகுங்கள். பிறகு அந்தத் தொழிலை ஆன்லைனில் உள்ள வசதிகள் மூலம் உலகறியச் செய்யுங்கள்.

 

 • எந்த வேலை செய்தாலும் முழு மனதுடனும் ஈடுபாட்டுடனும் உங்கள் திறமையை வெளிக்காட்டும்படி இருந்தால் வெற்றி உங்களைத் தேடிவரும். பணமும் கொட்டும். புகழும் கிடைக்கும். தோல்வி கிடைத்தால் சோர்ந்துவிடாமல் எப்படிச் சரி செய்வது என்பதை நிதானமாக யோசித்து, தவறை சரி செய்துகொண்டு முன்னேறுங்கள். வெற்றி உங்கள் கையில்!

 

 • முதலில் உங்கள் திறமையைக் கண்டறியுங்கள். அதை வளர்த்தெடுங்கள். பிறகு தொழிலாக்குங்கள். கம்ப்யூட்டர், இன்டர்நெட் மூலம் பிரபலப்படுத்துங்கள். இதுதான் உண்மையான ‘ஆன்லைன் ஜாப்’.

 

 • உங்கள் திறமை என்ன என்று கண்டறியுங்கள். அதை ஆன்லைனில் பிரபலப்படுத்தி வியாபாரப்படுத்தும் கம்ப்யூட்டர் – இன்டர்நெட் தொழில்நுட்பங்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பகுதிகளில் கற்றுக்கொள்ளலாம்.

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS

EXAM STUDY MATERIALS
LATESTS GOVERNMENT JOBS

No Comments

Sorry, the comment form is closed at this time.