civil service examination

சிவில் சர்வீஸ் தேர்வு… : நீங்களும் சாதிக்கலாம்

Image result for CIVIL SERVICE EXAM

சிவில் சர்வீஸ் தேர்வு… : நீங்களும் சாதிக்கலாம்

  • நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியின் செயலாளர் ஆகட்டும், செயல் தலைவரான பிரதமரின் செயலாளர் ஆகட்டும், மேற்படி பதவிகளை அலங்கரிப்பவர்கள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள். ஆட்சிப்பணியின் முக்கியத்துவம் இதிலிருந்தே புரியும். நாட்டின் ஒவ்வொரு துறைக்கும் தலைமை அதிகாரிகள் இவர்களே. மக்களாட்சி தத்துவப்படி மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் சட்டங்களை இயற்றுபவர்கள் என்றால், அவற்றைச் செயல்படுத்துபவர்கள் இவர்கள். இந்தப் பணியின் புனிதம் கருதியே ஐ.ஏ.எஸ் தேர்வு, மருத்துவம், பொறியியல், சட்டம் போன்று கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத் தேர்வாக அல்லாமல் தேசிய அளவில் திறந்த முறையில் நடத்தப்பட்டு திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கும் அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட யு.பி.எஸ்.சி. இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், அதிகாரம் மிக்க இந்த உயர்பதவிகளில் இளைஞர்கள் அமர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணியே ஆரம்பத்தில் சிவில் சர்வீஸை வரையறுத்த பிரிட்டிஷார், அதில் நுழையும் வயதை 21 என தீர்மானித்திருக்கிறார்கள். (தற்போதைய அதிகபட்ச வயது: பொது-30, ஓ.பி.சி-33, எஸ்.சி/எஸ்.டி-35, ஊனமுற்றோர்-40) ஆம், 21 வயது பூர்த்தியடைந்து விட்டால் போதும். கல்வித்தகுதியாக ஏதாவதொரு பட்டப்படிப்பு, சில நூறு ரூபாய்கள் தேர்வுக்கட்டணம்… இவ்வளவு இருந்தாலே ஐ.ஏ.எஸ் கனவை சாதித்துவிடலாம்.
  • ‘‘முயற்சியும் திட்டமிடலும் சரியானதாக இருந்தால், முதல்முறையே இந்தத் தேர்வில் ஜெயிக்கலாம்’’ என்கிறார் சமீபத்தில் இத்தேர்வில் வென்ற வீ.ப.ஜெயசீலன். அவர் வழங்கும் ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதல் இதோ…

எப்போது தொடங்கலாம்?

  • பொதுவாக ஐ.ஏ.எஸ். கனவு பள்ளிப் பருவத்திலேயே யாருக்கும் வரலாம். கண்ட கனவை மறந்து விடாமல் மனதின் ஓரத்தில் வைத்திருப்பவர்கள் 10, 12வது வகுப்பு மதிப்பெண்களையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை. பிளஸ் 2 முடித்ததும் ஏதாவதொரு பட்டப்படிப்பில் சேர்ந்து விட வேண்டும். கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாதவர்கள், அஞ்சல் வழியில் படித்திருந்தால் அந்தப் பட்டமும் தகுதியானதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பெயருக்குப் பின்னால் போட பட்டம் கிடைத்த மறுநாளே ஆரம்பித்து விடலாம் சிவில் சர்வீஸ் வேட்டையை.

பயிற்சி மையம் அவசியமா?

  • சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராக இரண்டே வழிகள்தான். ஒன்று, பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தல்; அல்லது செல்ஃப் பிரிப்பரேஷன். இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவரவர் நம்பிக்கை, விருப்பம் சார்ந்த விஷயங்கள். மாநில அளவில் அரசே நடத்தும் சில பயிற்சி மையங்களைத் தவிர, இன்று வணிக நோக்கில் புற்றீசல் போல முளைத்து நிற்கின்றன ஏகப்பட்ட கோச்சிங் சென்டர்கள். எனவே, கோச்சிங் சென்டர் தேர்ந்தெடுக்கும் முன், அங்கு வகுப்பெடுக்கும் நிபுணர்கள், கிடைக்கும் புத்தகங்கள், கடந்த கால ரிசல்ட் போன்றவற்றை அலசி ஆராய்ந்து சேர்வது நல்லது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் இப்பதவிகளுக்கு தோராயமாக 1000 முதல் 2000 பேர் வரையே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் 5 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கிறார்கள். எனவே பயிற்சி மையங்களால் எல்லோருக்கும் வேலையை உறுதி செய்ய முடியாது. பாதையை மட்டும் காட்டுகின்றன அவை. பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வது நம் கையில்தான்.
  • அடிப்படைத் தகுதி டிகிரி என்பதால் தேர்ந்தெடுக்கும் எந்தப் பாடத்துக்கும் இளங்கலை அளவிலான புத்தகங்களை கண்டிப்பாக வாசித்தாக வேண்டும். விருப்ப பாடத்தைப் பொறுத்தவரை பட்டப்படிப்பில் படித்த சப்ஜெக்ட்டையே தேர்வு செய்வது கூடுதல் பலன் தரும். சிலபஸ் மற்றும் பாடங்களின் லிஸ்ட்டை யு.பி.எஸ்.சி வெப்சைட்டில் பார்த்துக் கொள்ளலாம்.
  • புத்திக்கூர்மை வினாக்களுக்கும் புத்தகங்கள் கிடைக்கின்றன. பொது அறிவு என்பது கடல் போன்றது. வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலிருந்து டி.வி, செய்தித்தாள் என பல இடங்களில் விரவிக் கிடக்கின்றன பொது அறிவுக் கேள்விகள். ‘‘இதற்காக, தினமும் குறைந்தது இரண்டு செய்தித்தாளையாவது வாசிப்பது அவசியம்’’ என்கிற சீனியர் சாதனையாளர்கள், குரூப் ஸ்டடியும் நல்ல பலனைத் தருவதாகச் சொல்கிறார்கள்.

மே முதல் மார்ச் வரை

  • வருடந்தோறும் ஜனவரியில் அறிவிப்பு வெளியாகி, மே மாதத்தில் சிவில் சர்வீஸ் பிரிலிமினரி தேர்வு ஆரம்பிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை மட்டுமே தேர்வு மையங்கள். 1) சி சாட் (சிவில் சர்வீஸ் அப்டிட்யூட் டெஸ்ட்) 2) பொது அறிவு என இரு பிரிவுகளாக வினாக்கள் இருக்கும் இத்தேர்வு, அப்ஜெக்டிவ் டைப். கொடுக்கப்பட்டிருக்கும் 4 விடைகளில் சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தி, ஆங்கிலத்திலேயே கேள்விகள் இருக்கும். இத்தேர்வின் ரிசல்ட் ஆகஸ்ட்டில் வெளியாகிறது. இதில் தேர்வாகிறவர்களுக்கு அடுத்து நவம்பரில் முதன்மைத் தேர்வு. இதற்குத் தனியே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சென்னை மட்டுமே தேர்வு மையம். ‘விருப்பப் பாடங்கள்’, ‘கட்டாயப் பாடங்கள்’ என எழுத வேண்டிய முதன்மைத் தேர்வானது டிஸ்கிரிப்டிவ் டைப். கட்டுரை, பத்திகளில் விடையளிக்க வேண்டும். விருப்ப மொழிப்பாடத்தின் கேள்விகள் மட்டுமே மாநில மொழிகளில் இருக்கும். மற்றவை ஆங்கிலம் மற்றும் இந்தியே. இத்தேர்வின் மதிப்பெண்களே வெற்றியைத் தீர்மானிக்கின்றன. பிரிலிமினரி மற்றும் நேர்முகத்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்திருந்தாலும், இதில் அதிகம் ஸ்கோர் செய்து விட்டால், சர்வீஸ் நிச்சயம். இத்தேர்வின் ரிசல்ட் அடுத்த வருடத்தின் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகிறது. அடுத்த இரு வாரங்களில் நேர்முகத் தேர்வு டெல்லியில் நடக்கிறது. அந்தந்த சூழலைப் பொறுத்து இன்டர்வியூ ஐந்து நிமிடத்திலும் முடியலாம்; அரை மணி நேரமும் நடக்கலாம். நேர்முகத் தேர்வில் இந்தி, ஆங்கிலம் தாண்டி அவரவர் மாநில மொழியிலும் பதில் சொல்ல வாய்ப்பு வழங்கப்படுகிறது.
  • சரியாக ஒரு வருடம் நீளும் இந்தத் தேர்வு நடைமுறை வெற்றிகரமாக முடிந்து விட்டால், அடுத்த நிமிடமே அரசு இயந்திரத்தின் உயரதிகாரி நீங்கள். சிவப்பு விளக்கு கார், பவர்ஃபுல் அதிகாரம் என வலம் வரலாமென்றாலும் இந்தச் சிறப்புகள் எல்லாமே மக்களுக்காக சேவை செய்யவே வழங்கப்படுகிறது என்பது நினைவிலிருக்க வேண்டும். அதிகாரமும் சூழலும் தடம் மாற வாய்ப்புகளை உண்டாக்கலாம். கடுமையான வடிகட்டல் மூலம் தேர்வு செய்யப்படுகிறவர்கள் பணிக்காலம் முழுக்க தூய்மை, நேர்மையைக் கடைப்பிடிக்க உறுதி கொள்ள வேண்டும். ‘‘அப்படியொரு உறுதியைப் பெறுவதற்குத்தான் தேர்வு முறை அத்தனை டஃப்’’ என்கிறார் ஐ.ஆர்.எஸ் அதிகாரி நந்தகுமார். ஆம், உலகளவில் மிகவும் கடினமானதாகக்கருதப்படும் முதல் பத்து தேர்வுகளில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். உட்பட 26 உயர் பதவிகளுக்கு இந்தியாவில் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வும் ஒன்று.

தமிழ் வழி ..எஸ் நிஜமும் கோரிக்கையும்!

  • ஒவ்வொரு வருடமும் ரிசல்ட் வரும்போதெல்லாம், தமிழ் மூலமே தேர்வு எழுதியதாகச் சொல்பவர்களின் பேட்டிகள் வரும். தமிழ் மட்டுமல்ல, எந்தவொரு பிராந்திய மொழியிலும் முழுக்க முழுக்க இத்தேர்வை அணுக முடியாது என்பதே நிஜம்.
  • ‘‘பிரிலிமினரி தேர்வில் ஆங்கிலம் அல்லது இந்தியில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளைப் புரிந்தே விடையளித்தாக வேண்டும். முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை மொழிப்பாடங்கள் தவிர்த்த மற்ற எல்லாப் பாட கேள்விகளுமே அதே இந்தி, ஆங்கிலத்தில்தான். பதிலை வேண்டுமானால் அவரவர் தாய்மொழியில் எழுதலாம். அதாவது, ஆங்கிலத்தில் இருக்கும் கேள்விகளைப் புரிந்துகொண்டு விடையை வேண்டுமானால் தமிழில் எழுதலாம். இந்த நடைமுறை திருத்தும்போது குழப்பத்தை உண்டாக்கலாம் என்பதால் கமிஷன் இதை மாற்ற முன்வர வேண்டும். ரயில்வே, எஸ்.எஸ்.சி போன்றவை மாநில மொழிகளில் தேர்வுகளை நடத்துகிறபோது யு.பி.எஸ்.சி.யால் ஏன் முடியாது?’’
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.