தேர்வுக்குத் தயாரா?- தமிழிலும் சதம் சாத்தியமே!- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள்

Deal Score+5

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

 

 

  • பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவிருப்பதால் அவர்களுக்கான எளிய வழிகாட்டுதல் இதோ.

 

அள்ளலாம் 1 மதிப்பெண்

  • வினா எண் 1 முதல் 20 வரையிலானவை ஒரு மதிப்பெண்ணுக்கு உரியவை. இதில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (கேள்வி எண்:1-6), கோடிட்ட இடத்தை நிரப்புக (கே.எண்:7-12), பொருத்துக (கே.எண்:13-16), விடைக்கேற்ற வினா எழுதுக (கே.எண்:17-20) என மொத்தம் 20 மதிப்பெண்ணுக்கான கேள்விகள் இடம்பெறும். புத்தகப் பின்பகுதி வினாக்களைப் படித்தாலே இப்பகுதியில் முழு மதிப்பெண்களைப் பெறலாம். அதே நேரம் நூற்றுக்கு நூறு பெறுவதைத் தவிர்ப்பதற்காக 1 அல்லது 2 வினாக்கள் சற்றே மாற்றிக் கேட்கப்படலாம். இந்த வகையிலான கேள்விகளை எதிர்கொள்ள வழக்கமாகப் படிப்பதுடன், ஆசிரியர் மற்றும் புத்தகக் குறிப்புகள், பொருள் அறிதல் ஆகியவற்றையும் படிப்பது அவசியம்.

 

 

குறுவினா

  • 2 மதிப்பெண்ணுக்குரிய குறுவினா பகுதி, செய்யுள், உரைநடை பகுதிகளில் தலா 7 வினாக்களில் இருந்து தலா 5-க்கு விடையளிப்பதாக இருக்கும் (கே.எண்: 21-34). செய்யுள் பகுதியின் 10 இயல்களில் 1, 3, 5, 6, 7, 9 ஆகிய இயல்களில் இருந்தே இப்பகுதி வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதேபோல உரைநடையின் 10 பாடங்களில் 1, 5, 6, 7, 9 ஆகிய பாடங்களில் இருந்தே குறுவினாக்கள் கேட்கப்படுகின்றன. முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்களில் இருந்து அடிக்கடி கேட்கப்பட்ட தலா 20 வினாக்களில் இருந்தே செய்யுள், உரைநடைப் பகுதி வினாக்களை எதிர்கொள்ளலாம்.

 

 

சிறுவினா

  • 4 மதிப்பெண்ணுக்குரிய சிறு வினா பகுதி, செய்யுள், உரைநடை பகுதிகளின் தலா 5 வினாக்களில் இருந்து தலா 3-க்கு விடையளிப்பதாக இருக்கும் (கே.எண்: 35-44). செய்யுள் பகுதியின் 2, 3, 4, 8, 10 ஆகிய இயல்களில் இருந்தும், உரைநடையின் 2, 3, 4 6, 8 ஆகிய பாடங்களில் இருந்தும் சிறு வினாக்கள் கேட்கப்படும். முந்தைய வினாத் தாள்களின் அதிகம் கேட்கப்பட்டவையில் செய்யுள் பகுதியின் 13 வினாக்கள், உரைநடைப் பகுதியின் 9 வினாக்களைத் தொகுத்துப் படித்தாலே, சிறு வினாக்கள் பகுதிக்கான முழு மதிப்பெண்ணைப் பெறலாம்.

 

 

வினாவுக்கு உரிய விடை

  • கொடுக்கப்பட்ட செய்யுள், உரைநடைப் பகுதியிலிருந்து, வினாவுக்கு உரிய விடையை எழுதும் இப்பகுதியில், தலா 5 என 10 மதிப்பெண் பெறலாம். இதற்குக் கொடுக்கப்பட்ட பகுதியையும், வினாக்களையும் நன்றாக வாசித்துப் பொருள் உணர்ந்து விடையினை எழுத வேண்டும். ஆசிரியர் பெயர், நூல் குறிப்பு, இலக்கணக் குறிப்பு, பிரித்தெழுதுதல் ஆகியவற்றையும் இப்பகுதிக்காகப் படிப்பது நல்லது.

 

 

நெடுவினா

  • நெடுவினா பகுதியானது (கே.எண்: 47-48) செய்யுள், உரைநடை பகுதிகளில், அல்லது தலா 1 வினாவுக்குப் பதில் அளிப்பதாக இருக்கும். குறிப்புச் சட்டகம், முன்னுரை முடிவுரையுடனான உட்தலைப்புகள் ஆகியவை இந்த நெடுவினாக்களில் சரியாக எழுதுங்கள். வாக்கியப் பிழைகள், கருத்துகள் திரிவது போன்றவை போதிய எழுத்துப் பயிற்சி இல்லாத மாணவர்களிடம் வெளிப்படுகின்றன. அனைத்து மாணவர்களும் நெடுவினாப் பகுதியில் முழு மதிப்பெண் பெற, செய்யுள், உரைநடையைச் சரி பாதியாகப் பிரித்துக்கொண்டு ஏதேனும் ஒரு பாதியை முழுமையாகப் படிக்க வேண்டும்.

 

 

மனப்பாடப் பகுதி

  • மனப்பாடப் பகுதியானது குறள், பாடல் பகுதிகளில் இருந்து 10 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படுகிறது. குறள் பகுதியின் 2 குறள்களில் முதல் வார்த்தை வாயிலான குறளை மாணவர்கள் எளிதில் அடையாளம் கண்டு எழுதிவிடுகிறார்கள். கடைசி வார்த்தையைக் குறிப்பிட்டுக் கேட்கப்படும் குறளை எழுதுவதில்தான் கணிசமான மாணவர்கள் திணறுகிறார்கள். மனப்பாடப் பகுதியில் முழு மதிப்பெண் பெறுவதில் படித்தல், ஒப்பித்தல், எழுதுதல், தவறுகளைச் சரிசெய்துகொண்டு அடிபிறழாமல் எழுதப் பழகுதல் ஆகிய படிநிலைகள் அவசியம். அதிலும் செய்யுளின் அடுத்தடுத்த வரிகளை எழுதுவதில் சீர் வரிசை தவறாதிருப்பது முக்கியம். அதேபோல செய்யுளின் நிறைவாக ஆசிரியர் பெயரையும் தெளிவாக எழுதுவது அவசியம்.

 

 

வேண்டாமே அலட்சியம்

  • தமிழ்தானே எனத் தாய்மொழிப் பாடத்தின் மீது பல மாணவர்களுக்கு இயல்பாகவே அலட்சியம் உண்டு. இதனால் மற்றப் பாடங்கள் அளவுக்குத் தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தமிழ்ப் பாடத்தை வாசிக்கும்போது புரிந்தால் போதும் என அடுத்த பாடத்தைப் படிக்கச் சென்றுவிடுவார்கள். இதனால் தமிழில் மதிப்பெண்கள் குறைந்து, மொத்த மதிப்பெண்ணில் சறுக்கல் நேரலாம். எனவே இந்த அலட்சிய மனோபாவத்தை விட்டுவிட்டு, தமிழ்ப் பாடத்துக்கும் போதிய நேரம் ஒதுக்கிக் கூர்ந்து படித்தால், பிற பாடங்களிலும் எழுத்து வேகம், பிழைகள் தவிர்ப்பு, தன்னம்பிக்கை ஆகியவை சுலபமாகும்.

 

 

பிழைகளைத் தவிர்ப்போம்

  • இதர பாடங்களைவிடத் தமிழ்ப் பாடத்தில் பிழைகள் நேருவதால் முழு மதிப்பெண்ணை இழப்பது நடக்கிறது. போதிய பயிற்சி இன்மையால் ஒற்றுப்பிழைகள், வார்த்தை, வாக்கியப் பிழைகள் போன்றவை மதிப்பெண் இழப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தவிர்க்கப் படிக்கும் அளவுக்கு எழுதிப் பார்ப்பதும், மீண்டும் அதே தவறு நேராதபடி கவனமாக இருப்பது அவசியம்.

 

 

  • தெளிவான கையெழுத்துடன், தொடக்கம் முதல் நிறைவு வரை மாறாத கையெழுத்தில் எழுதிப்பழகுங்கள். நீண்ட பத்திகளை விடப் பாடக் கருத்துகளை அடுத்தடுத்த வரிகளாக வரிசைப்படுத்தி எழுதுங்கள். தேவையான செய்யுளின் முக்கிய வரிகளில் ஒன்றிரண்டை எழுதுவதும் சிறப்பு. முக்கிய இடங்களில் ‘மை’ வண்ணத்தை மாற்றி எழுதுவதோ, பென்சிலால் அடிக்கோடிட்டுக் காண்பிக்கவோ செய்யலாம்.