பிரச்சினைகளைத் தகர்க்கலாம் வாருங்கள்! - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2016 | Group 2A | VAO | TET

பிரச்சினைகளைத் தகர்க்கலாம் வாருங்கள்!

problem2ஒரு இனிப்பை உண்கின்றீர்கள், உதாரணத்திற்கு லட்டு என்று வைத்துக்கொள்வோம். பிறகு பால்கோவா சுவைக்கிறீர்கள், சிறிது நேரம் கழித்து ஜிலேபியை… நிற்க.

“என்னடா இது இனிப்பா இருக்கு, திகட்டாதா” என்று நீங்கள் மனதிற்குள் வினவிக் கொள்வது என் காதில் உரக்கக் கேட்கின்றது. சரி இப்பொழுது ஒரு கசப்புச் சுவையுடைய பாகற்காயைக் கடித்துச் சுவையுங்கள் பின் தொடர்ந்தார் போல் மேற் சொன்ன இனிப்பு வகைகளில் ஒன்றை இப்பொழுது சுவையுங்கள்.. என்ன திகட்டல் இல்லைதானே?

இங்கே இனிப்பாய் சந்தோசத்தையும், கசப்புச் சுவையாய் பிரச்சினைகளையும் பொருத்திப் பாருங்கள்! இப்பொழுது பாதிப் பிரச்சினைகள் தீர்ந்திருக்கும்!

பிரச்சினை என்றாலே பிரச்சினை தான்.. இன்று பெரும்பாலான மக்கள் உழன்று கொண்டு துன்பத்தில் அவதிப்படுவதற்கும் இது தான் காரணம்.

நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போன்று பிரச்சினைகளைத் தீர்ப்பது அவ்வளவு கடினமான விசயம் கிடையாது. அது மிகவும் எளிதானது, எவ்வளவு எளிது என்றால் காற்றில் பறந்து வரும் இறகை எடுத்து உள்ளங்கையில் வைத்து ஊதிப் பறக்கவிடுவதைப் போன்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா?

ஆம்! அவ்வளவு எளிது தான் நிச்சயம்.

சரி எவ்வாறு பிரச்சினைகளைக் கையாள்வது என்று பார்ப்போம்,

இரு வழிகளில் சுமூகமாய் பிரச்சினைகளைத் தகர்த்து விடலாம். ஒன்று பிரச்சினைகளை எதிர்ப்பது, இரண்டாவதைப் பின்னால் சொல்கிறேன்.

முதல் ஒன்றைப் பார்ப்போம்..

problem3பிரச்சினைகளை ஏற்று எதிர்த்துப் போராடுவதைப் போல எளிதான யுக்தி கிடையவே கிடையாது. மனித வாழ்க்கை ஒரு புதிர் விளையாட்டைப் போன்றது. ஆக யாருக்கும் அடுத்து நடக்கப்போவது தெரியாது அதே போல் சிறியனாவாகவும், பெரியனவாகவும் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை பிரச்சினை எனும் பெயரில் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அதை அணுகி அதனூடே பயணித்தால் பிரச்சினை தீர்க்கக்கூடிய சிக்கல்களாய்ப் பரிணமிக்கும்.

தேவையில்லாத பிரச்சினைகளை நாம் யார் உதவியும் இல்லாமல் முன் கூட்டியே தவிர்க்கலாம். ஏனென்றால் அவை பிரச்சினைகளாய் உருமாறுவதற்கு முன்னால் தேவையில்லாத விடயங்களாய் தான் இருந்தன என்பது மறுக்க முடியாத உண்மை!

வாகனத்தில் செல்லும் பொழுது, நடக்கும் பொழுது தெரியாமல் ஒருவர் இடித்துவிட்டால் அதை மன்னித்து அப்படியே விட்டுவிட்டால் அங்கே ஏதும் நடக்காது. ஆனால் அதை நீங்கள் உங்கள் மனதிற்குள் அனுமதித்து கோபத்தை வரவழைத்து திட்டித் தீர்க்க ஆரம்பித்தால் அந்தச் செயல் எப்படி பிரச்சினையாய் மாறும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

சரி, அந்த இரண்டாவது என்ன?

இரண்டாவது என்னவென்றால், திரும்ப ஒன்றாவதைப் படிக்கவும். இரண்டாவது என்று ஒன்றில்லை ஏனென்றால் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விடச் சுலபமான வழி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தெரிந்தால் சொல்கிறேன்.

 

No Comments

Sorry, the comment form is closed at this time.