வாழ்க வளமுடன்!

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நான் எப்படியெல்லாம் இருந்தேன் தெரியுமா? நான் இப்படி ஆனதற்கு நீங்கள் தான் காரணம் .என் வாழ்க்கை மாறியதற்கு நீங்கள் தான் காரணம், என் கனவைத் தொலைத்தது உங்களால் தான் .நான் இப்பொழுது வாழும் வாழ்க்கை எனக்குச் சம்பந்தமில்லாத ஒன்று என்று கூப்பாடு போடும் உங்களைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன். சற்றே வாய்க்குப் பூட்டுப் போட்டுவிட்டு மனதைத் திறந்து வையுங்கள் சிறிது நேரம் மட்டும்.மனதைத் திறக்கத் தெரியாவிட்டால் கண்களையாவது திறந்து படியுங்கள் அது போதும் , ஆஞ்சநேயர் போல நெஞ்சைப் பிளக்க முற்பட வேண்டாம்! நீங்கள் செய்யவும் மாட்டீர்கள் என்று நம்புகிறேன் .

இந்த உலகம் எப்படிப்பட்டதென்று முழுமையாகப் புரிந்து கொண்டால் உங்களுக்கே மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். இந்த உலகம் , உங்களையே சில நேரங்களில் உங்களுக்கு எதிராக திசை திருப்பும் அற்புத குணம் கொண்டது,ஆனால் அதையும் தாண்டி நமக்கு இருக்கும் ஒரு பெரிய துணையும் பக்க பலமும் யார் தெரியுமா ? நாம் தான் அது !அதைப் புரிந்துகொள்ளும் வரைதான் சோகங்களுக்கும் வேதனைகளும், புரிந்து கொண்டால் எல்லாம் இனி உங்கள் வசமே  . அது எப்படி? இந்த உலகம் ஒரு உயிரற்ற பொருள் தானே! இது எப்படி என்னை திசை மாற்றும் என்று கேட்பீர்களானால், இந்த உலகம் என்னவோ உயிரற்றதாக இருப்பினும் உயிருள்ளவைகளை வைத்து தான் நம்மை  ஆட்டிப்படைக்கிறது.குழப்பமாக இருந்தால் வாருங்கள்  உங்களை ஓரிடத்திற்கு அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன் !

உங்களுக்கு இப்பொழுது எத்தனை வயதாக இருந்தாலும் சரி, உங்களது வயதை ஒரு பத்து வருடம் முன்பு கடந்த காலத்தில் நிறுத்தி வைத்து சிந்தனையை பின்னோக்குங்கள் . அப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?உங்கள் கனவுகள் என்று எவற்றையெல்லாம் நினைத்திருந்தீர்கள் ? உங்கள் வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தீர்கள்? என்பவற்றையெல்லாம் ஒரு தாளில் இப்பொழுது நிரப்புகள் . அது கோடிட்ட தாளா? கோடிடாதா தாளா ? பேனாவால் எழுத வேண்டுமா ? பென்சிலால் எழுதவேண்டுமா ? என்பதை மட்டுமாவது உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன் .

இப்பொழுது எழுதியவற்றை அழகாக  வாசியுங்கள் , உங்கள் எண்ணங்களின் முன்னாள் குறிப்புகளை ஒவ்வொன்றாக நீங்கள் உங்கள் கண்களில் பிரதி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் அவற்றை படிக்கும் பொழுது , சில வார்த்தைகள் உங்களைச் சிரிக்கவும் வைத்திருக்கும் சில உங்களை வருத்தப்படவும் வைத்திருக்கும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக சில உங்களை சிந்திக்கவும் வைத்திருக்கும். நிற்க!

ஆனால் அவற்றில் எல்லாம் உங்களால் இப்பொழுது அடையப்பட்டிருக்கிறதா? என்று உற்று நோக்குங்கள் . சிரிப்புடன் இல்லை என்று சொல்வீர்களானால் நீங்களும் ஒரு சாராசரி .சராசரி என்று சொன்னவுடன் அயர்ந்து விட வேண்டாம், ஏனென்றால் நீங்கள் தான் உங்களுக்கென பட்டியலிட்ட எதையும் நோக்கி சுயநலத்துடன் ஓடாமல் “உங்களைச் சுற்றி இருக்கும்,அம்மா,அப்பா,கணவர்,மனைவி,குழந்தை,சகோதர,சகோதரிகள் “ என்று யாருக்கான கனவையோ மெய்ப்படுத்த உங்கள் கனவை தியாகம் செய்த அற்புத ஜென்மங்கள். நீங்கள் தான் புத்தரின் சாராம்சம் என்பேன் நான். அட! அவர் எங்கே? நாம் எங்கே? என்பதாக நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். முப்பது வயதில் எல்லாம் அனுபவித்துவிட்டு எல்லாவற்றையும் விட்டு விலகி ஆசையைத் தூண்டும் எவற்றின்  வாசமே அடிக்காத இடத்திற்குச் சென்று அவர் ஞானம் பெற்றார் என்றால்,எல்லாவற்றின் அருகிலும் இருந்து கொண்டு எவற்றையும் நமக்கென அனுபவிக்காமல் பிறர் நலன் கருதி பார்த்துப் பார்த்துச் சேர்த்து வைத்து பிறருக்கென உங்கள் கனவுகளைத் துறந்த நீங்கள் எப்படிப் போற்றப்படவேண்டும் என்று நினைத்தால் வார்த்தைகளே கிடையாது.

இன்றளவும் இதை நீங்கள் செய்து கொண்டு இருப்பவரானால் உங்களை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் உங்கள் போன்றோரால் தான் சில நேரங்களில் மழை பெய்கிறது , சில நேரங்களில் வெப்பச் சலனத்தாலும்.இப்பொழுது ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள் , உங்கள் செயல்களைப் புரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்காக தான் நீங்கள் என்றாலும் கூட, நீங்கள் சிலரையும் சிலர் உங்களையும் சார்ந்திருப்பது தான் ஒரு வாழ்க்கையின் அடிப்படித் தத்துவமாக இருக்க முடியும். நீங்கள் இழந்தவற்றை நினைத்து வருந்தாதீர்கள் . ஏனென்றால் வருந்துவதற்கு  நீங்கள் ஒன்றும் சாதாரணம் கிடையாது. பிறர் நலத்திற்கென உங்கள் போக்கை மாற்றிய இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு அழகிய ஆறு நீங்கள். எல்லாரின் தாகத்தையும் தீர்க்கும் பணியை அழகாக இதுவரை செய்து கொண்டிருக்கிறீர்கள். மறந்துவிடாதீர்கள் ! உங்களால் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை. இன்றிலிருந்து பெருமைப்படுங்கள் , நீங்கள் எதையோ இழந்ததால் தான் உங்கள் அருகிலிருக்கும் அவர்கள் எதையோ பெறமுடிந்தது என்று! .அடிக்கடி அவர்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் மனதிற்குள் வாழ்க வளமுடன் என்று கூறிக்கொள்ளுங்கள் ,முடிந்தால் வாய்விட்டும் கூட .

வாழ்க வளமுடன்   !

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

image